ஆறெழுத்துண்மை
பண் - காந்தாரபஞ்சமம்
நந்தன வருடம் பங்குனி மாதம் 13ஆம் தேதி சுக்கிரவாரம்
அன்று சுவாமிகளால் இயற்றப்பட்டது
அற்புத மாகிய வருமறை மொழிபோல்
வெற்புயர் புவனம்பல் விளங்கிடு மாறு
பற்பல தேவர்கள் படர்ந்தவிண் ணுறினும்
தற்பர மாவது சரவண பவவே.
1
பத்தியு ஞானமும் பரவிடு மார்க்கம்
எத்தனை யோவகை யிருக்கிநு மிகத்தில்
முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
சத்திய மாவது சரவண பவவே.
2
பூசிக்கும் வானவர் புரவல னாவி
வாசிக்கு மாவடி வழிபடி னென்றும்
பாசத்தை நசித்திவண் பரப்பிரம வாழ்வைத்
தாசர்பங் காக்கிடுஞ் சரவண பவவே.
3
அருணல முள்ளவ னாதிமுன் னுள்ளான்
பொருணல முள்ளவன் பூசித வடியார்க்
கிருணில மெய்தினு மிதமுட னேயத்
தருணத்திற் காப்பது சரவண பவவே.
4
பொடிபொலி மேனியன் புரண வியோம
வடிவுடை யயிலுடை மனனடி கைகூப்
படியவர்க் கிடுக்கணிவ் வவனியிற் குறுகின்
சடிதியிற் றடுப்பது சரவண பவவே.
5
மஞ்சிகைச் செவியோன் மயிற்பரி யூர்வோன்
தஞ்சமென் றவர்க்கரு டருசம ரூரான்
செஞ்சரண் வாழ்த்துநர் திருவடி சேர்வார்
சஞ்சலந் தவிர்ப்பது சரவண பவவே.
6
பொங்கிடு புனலிலம் பூவில்வெங் கனலில்
எங்கணு முளவெளி யில்வளி பகலிற்
கங்குலி லடியவர் கருத்துநன் காகச்
சங்கடந் தீர்ப்பது சரவண பவவே.
7
தென்றிசைக் கோன்விடு திரிவிதத் தூதர்
குன்றெனும் புயமலை குலுங்கமுக் குடுமி
வென்றிகொள் கடந்தடி வீசிவெம் பிடினும்
தன்றுணை யாவது சரவண பவவே.
8
தேவியுந் தேவனுந் திருவுரு வருவம்
மேவி யனாதியாய் மினிர்தல்சண் முகமென்
றாவலுற் றுணர்பவ ரழிவுறா வண்ணஞ்
சாவினைத் தடுப்பது சரவண பவவே.
9
இந்திரன் முனிவர்க ளேத்துபொற் சரணான்
செந்திரு நகரிடஞ் சேர்ந்ததில் வாழ
அந்திருப் புகழ்பா டினவருக் கபயம்
தந்ததைத் தருவது சரவண பவவே.
10