சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
பழமையான வேதங்கள் புகழ்கின்ற மணியை, பெரியோர் தம் மொழியில் ஒளிவீசும் மணியை, மூடர்கள் அறியாத மணியை, மௌன மணியை, அழகு பொருந்திய பேரறிவுக் குருமணியை, அழகிய மணியை, ஞான நடன மன்றத்தில் இருந்து விளங்கும் மணியை, நித்தியமாய் உள்ள மணியை, குமரகுருதாசன் உள்ளத்தில் அசையும் மணியை, நினைப்பவர்க்கு வீடுபேறு உள்ளது என்று ஒலிக்கும் மணியை, இனிய மணியை, மேலான சிவசுப்பிரமணியத்தை நினைக்கும் இருதயம் உடையவர் தம் திருவடி மலர்கள் என்னுடைய தலைமேல் இருக்கட்டும்.
இம்மண்ணுலகில் ஆகமம் கூறும் நெறியிலேனும், கலைகள் மிகுந்த நான்கு வேதங்களின் முடிவு எனக் கூறப்படும் வேதாந்தத்திலேனும், இறைவன் அளித்தருளிய அந்த இரண்டினுமேனும் சிறிதளவு மனப்பாடம் செய்து, அதில் கூறியுள்ள நெறியை உறுதியாகப் பற்றிக் கொள்ளாமல், உலக மாயையில் சிக்குண்டு அம்மாயையை விடமுடியாது அலைவோர் தவம் செய்வோரைக் காணும்போது, அவர் தன் வீட்டில் இருந்திடின் ஏன் வீட்டை விட்டுச் செல்லாமல் ஏன் தவத்தைக் கருதினர் என்பர்; துறவறம் இருந்தால் ஏன் துறந்தனர் என்பர்; கடவுள் திருக்கோயிற்குச் சென்று வழிபாடு செய்தால் இவர்க்கு ஏன் கோயில் வழிபாடு என்பர்; அவ்வாறு செய்யாது போனால் ஏன் செய்யவில்லை என்பர். சடையோ அல்லது மொட்டையோ இல்லை என்றால் தவம் இல்லை என்பர்; சடை அல்லது மொட்டை இருந்தால் வீண் பெருமைக்கோ என்பர்; ஓர் இடத்தில் வாழ்ந்தால் இடப்பற்று என்பர்; உலகில் பல இடங்களுக்குச் சென்று வந்தால் உயிர்களின் வலையில் சிக்கியவர் என்பர். உண்டு உடுத்திடின் இவரும் நம்மைப் போன்றவர் தானே என்பர்; உண்டு உடுக்காவிடின் அவற்றைத் தேடிக்கொள்ளும் முயற்சி இல்லை என்பர். பேசி ஒரு கருத்தை விளக்கிடின் பிதற்றல் ஏன் என்பர்; பேசாது இருந்தால் மற்றவருக்கு என்ன பயன் என்பர்; கண்ணைத் திறந்து பார்த்திடில் வெளிமுகமாகச் செல்கின்றது பார்வை என்பர்; கண்ணைத் திறக்காவிடில் திறந்தால் என்ன என்று கேட்பார். அற்புதங்கள் செய்யாவிடில்இவருக்கு அருள் இல்லை என்று கூறுவர்; அற்புதங்கள் இருக்குமானால் அவை அழகிய கண்கட்டு வித்தை என்பர். ஆதலால் ஏ மனமே! நீ இந்த உலகத்தார் பலவாறாகக் கூறும் இழிவுகளுக்கு உள்ளே வருந்துதலை ஒழித்துவிடு. எம்பெருமான் உரைத்த சன்மார்க்கத்தில் எது உனக்குப் பிடித்ததோ முயற்சி உள்ளதோ அவ்வாறு செய். எம் கடவுளாகிய குகேசனை மரணம் இல்லாத உண்மையை, அகண்ட பூரண அருட்பெருஞ்சோதியை, அகண்ட பூரண ஆனந்தக் கடலை, சொல் அற்று நிற்கும் தூயவெளியை, சொல்லின் இனிமை சொரியும் அருட்கனியை நினைக்கில் நினைந்து நிகழ்ந்து பற்றி, நினையாதவன் இங்கு செய்யும் ஓர் இயற்கையைத் திருஅருணகிரிநாதர் நினைத்த கடவுளை, உருவம் அருவம் இல்லாமலும், ஒளியும் இருளும் இல்லாமலும் சுத்த அறிவாக எண்ணிச் சத்தியமாயுள்ள முத்தியை அடைவாயாக.