Logo


English
திருநெல்வேலிக்கோவில்
பண் – நட்டராகம்
மன்மத வருடம் ஆடி மாதம் 28 ஆம் தேதி ஆதித்தவாரம்
அன்று சுவாமிகளால் இயற்றப்பட்டது


சீருடை யாரியனே யெனைச் சேர வணைப்பவனே
ஏருடை வானவர்க ணித மேத்தும் பராபரனே
ஆருடை வேலவனே நெல்லை யப்பர் விமானமுறை
நாருடை யோமயனே யென்ற னாட்டத்தைப் பூர்த்திசெய்யே.

1

கச்சணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே
சொச்சமெய் யோகருளந் தனிற் சொந்தப்பட் டுள்ளவனே
அச்சமில் சிற்பரனே நெல்லை யப்பர் விமானமுறை
எச்சமி லெம்பரனே யென தெண்ணத்தைப் பூர்த்திசெய்யே.

2

ஏத்தி யிறைஞ்சுபவர் மிகை யேக வருள்பவனே
கோத்திர மற்றவனே குணக் கூறிணை கூறவொண்ணா
ஆத்தும நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
ஊத்தையில் சேயவனே யென துள்ளத்தைப் பூர்த்திசெய்யே.

3

உம்பரைத் தொண்டு கொளுங் கனவுத்தி பெருக்குடையாய்
எம்பெரு மானெனவே நித மேத்துநர் பங்குடையாய்
அம்பர வேதியனே நெல்லை யப்பர் விமானமுறை
செம்பர வேலுடையா யென்றன் சிந்தையைப் பூர்த்திசெய்யே.

4

கங்கையுங் கொன்றையு மார் கிடைக்கண்ணுத லானவொரு
சங்கர னார்குமரா வந்தச் சங்கர னாரிறைவா
அங்கத மற்றவனே நெல்லை யப்பர் விமானமுறை
புங்கவ னேகுகனே யென்றன் புந்தியைப் பூர்த்திசெய்யே.

5

கான மலர்க்குழலி தெய்வ குஞ்சரி காவலனே
தானவர் மாபுரியைச் சல ராசியான் மூடிவிண்ணோர்
ஆனவர்க் காக்கமிட்டோய் நெல்லை யப்பர் விமானமுறை
நூனமில் வேதியனே யென்ற நோக்கத்தைப் பூர்த்திசெய்யே.

6

பத்தருட் புத்தமுதே யெங்கள் பாக்கியப் பொக்கிஷமே
சித்தெனுஞ் சத்திதனை யொரு துண்டத்திற் சேர்த்துளனே
அத்தனே யற்புதனே நெல்லை யப்பர் விமானமுறை
நித்தனே சண்முகனே யென்ற னெஞ்சத்தைப் பூர்த்திசெய்யே.

7

பூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்
தாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்
ஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை
வீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே.

8

சந்ததம் வந்திப்பவர் பத்திச் சாலத்திற் சிக்கிக் கொளுஞ்
செந்திரு வன்புடையா யுமை செல்வச் செழும் பொருளே
அந்தரர் நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
நந்தலி லெம்பெருமா னென்றன் ஞானத்தைப் பூர்த்திசெய்யே.

9

சங்கையி லுன்புகழைத் தினஞ் சாற்றிய வெந்தைபிரான்
இங்கெனை யுய்வித்தவ ருனை யன்றி யெவருளரால்
அங்கியின் மேனியனே நெல்லை யப்பர் விமானமுறை
பங்கமி லாயெனது வழி பாட்டினைப் பூர்த்திசெய்யே.

10

குறிப்பு:- திருநெல்வேலிச் சிவாலயத்திலுள்ள சண்முகமூர்த்தி திருக்கோவில் பூதிமங்கிகியிருத்தலை தேசிகர் கண்ணுற்று உளம் வருந்துநராய் அற்றைப் போதாகிய ஆடி மாத 28 ஆம் நாள் “சீருடையாரியனே” என்றற் றொடக்கத்து இவ்விருபதாந் திருப்பதிகம் பாடியருளினார். இதன்கண் முதற்கட் சீருடமை தோன்றி நிற்றலும் எனதுள்ளத்தைப் பூர்த்திசெய் என்னும் வேண்டுகோள் பெருகி நிற்றலும் காணக்கிடக்கின்றனவே. அக்கோவிலும் அடுத்த ஆண்டிற்றானே செழுமை பூத்து விளங்குதலைத் தேசிகர் கண்ணுற்று உவகை பூத்தாரென்னும் விவரம் சரித்திரத்துங் காணலாம்.


Home    |    Top   |    Back