Logo


English

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம் 81-90

81 முதல் 90 பாடல்கள்

இந்நூலில் உள்ள பாடல்கள் சுவாமிகள் இயற்றியவாறும், சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில், என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்தும் அந்த பாடல்களுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்துக் கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

தாயாய வானந்த ரூபிமா தேவியரு
              டடையின்றி யென்னுள் வரவும்
        தற்பரி வராகிமா சூலிமா குமரிமா
              தங்கியரு ளென்னுள் வரவும்
தூயகுண வம்பிகை மனோன்மணி பவானியருள்
              சொந்தமுட னென்னுள்வரவும்
       சுந்தரி திகம்பரி பராசத்தி யின்பவரு
              டோகமற வென்னுள்வரவும்
மாயமர கதவல்லி வாலைபரி பூரணி
              வழங்குமரு ளென்னுள்வரவும்
       மாசற்ற வாமியரு ணேசத்தொ டேயென்னுள்
              வரவுநீ யருள்புரிந்து
தேயாத பேறெனுந் திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
       தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                                           81

தாய் ஆய ஆனந்த ரூபி மாதேவி அருள்
              தடையின்றி என் உள் வரவும்
        தற்பரி வராகி மாசூலி மாகுமரிமா
              தங்கி அருள் என் உள் வரவும்
தூய குண அம்பிகை மனோன்மணி பவானி அருள்
             சொந்தமுடன் என் உள் வரவும்
        சுந்தரி திகம்பரி பராசத்தி இன்ப அருள்
             தோகம் அற என் உள் வரவும்
மாய மரகதவல்லி வாலை பரிபூரணி
             வழங்கும் அருள் என் உள் வரவும்
        மாசு அற்ற வாமி அருள் நேசத்தொடே என் உள்
             வரவு நீ அருள் புரிந்து
தேயாத பேறு எனும் திரு அளித்து ஆள் அரோ
             தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                             81

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிலசுப்பிரமணியக் கடவுளே! எல்லா உலகங்களையும் ஈன்ற தாயாக உள்ள ஆனந்த வடிவுடையாளும், பெரிய தேவியுமான சத்தியின் அருள் ஒரு தடையுமின்றி என்னுள் வரவும், வராகி பெருமையுடைய சூலி, குமரி, மாதங்கியின் அருள் என்னுள் வரவும் தூய குணமுடைய அம்பிகை மனோன்மணி, பவானி ஆகியோர் அருள் உரிமையுடன் என்னுள் வரவும், சுந்தரி, திகம்பரி, பராசத்தி ஆகியோரின் இன்ப அருள் குற்றமற என்னுள் வரவும், மாயையுடைய மரகதவல்லி, வாலை, பரிபூரணி ஆகியோர் அளிக்கும் அருள் அன்னுள் வரவும், மாசில்லாத வாமியின் அருள் அன்புடன் என்னுள் வரவும் நீ அருள்புரிந்து அழியாத வீடுபேறு எனும் செல்வத்தை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


மனமா சறுக்கவல மாணிக்க வல்லியருண்
             மளமளென வென்னுள்வரவும்
       வரதமுடை யபிடேக வல்லியரு ளொல்லையின்
              மயங்காம லென்னுள்வரவும்
கனயோக மல்கமுத வல்லிதன் போகவருள்
              கரிசின்றி யென்னுள்வரவும்
       கரும்பனைய மொழிதருங் கற்பகப் பெயர்வல்லி
              கருணையரு ளென்னுள்வரவும்
அனகவொண் மைத்தரள வல்லிபே ரின்பவரு
              ளட்டியின் றென்னுள்வரவும்
       ஆனந்த வல்லியுடை யருளென்னுள் வரவுமென்
              னையனீ யருள்புரிந்து
செனனமீ றில்லாத திருவளித் தாளரோ
             தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                             82

மனமாசு அறுக்கவல்ல மாணிக்கவல்லி அருள்
             மளமள என என் உள் வரவும்
       வரதம் உடை அபிடேகவல்லி அருள் ஒல்லையில்
              மயங்காமல் என் உள் வரவும்
கனயோகம்மல்கு அமுதவல்லி தன் போக அருள்
              கரிசு இன்றி என் உள் வரவும்
       கரும்பு அனைய மொழிதரும் கற்பகப் பெயர்வல்லி
              கருணை அருள் என் உள் வரவும்
அனக ஒண்மைத் தரள வல்லி பேரின்ப அருள்
              அட்டி இன்று என் உள் வரவும்
       ஆனந்த வல்லியுடை அருள் என் உள் வரவும் என்
              ஐயன் நீ அருள்புரிந்து
செனனம் ஈறு இல்லாத திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
       தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   82

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! மனத்திலுள்ள குற்றங்களை ஒழிக்கவல்ல மாணிக்கவல்லியின் அருளானது மளமளவென என்னுள் வரவும், வரமளித்தருளும் அபிடேகவல்லியின் அருள் விரைந்து மயக்கமின்றி என்னுள் வரவும், பெருமையான யோக மிகுந்துள்ள அமுதவல்லியின் இன்பமான அருள் குறைவின்றி என்னுள் வரவும், கரும்புபோல் இனிய மொழி பேசும் கற்பகவல்லியின் கருணையான அருள் என்னுள் வரவும், ஆனந்தவல்லி அருள் என்னுள் வரவும், என் தலைவனாகிய நீ அருள் புரிந்து, பிறப்பு இறப்பில்லாத முத்திச் செல்வத்தை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


பஞ்சின்மெல் லடிவிழும வமிர்தகுண வல்லியின்
             பரமவரு ளென்னுள்வரவும்
        பங்கயன் பணிமகா மங்களே சுவரியின்
              பசுமையரு ளென்னுள்வரவும்
விஞ்சைவரர் பரவுநல் வேனெடுங் கண்ணியின்
              விகதவரு ளென்னுள்வரவும்
       விட்டகுறை தொட்டகுறை கிட்டவர வேபுரியு
              மெல்லியரு ளென்னுள்வரவும்
சஞ்சல வசஞ்சலப் பொருளெங்கு நிறையுமொரு
              சத்தியரு ளென்னுள்வரவும்
        தமபாவ சங்காரி யருளென்னுள் வரவுமென்
             சாமிநீ யருள்புரிந்து
செஞ்சரோ சப்பதத் திருவளித் தாளரோ
             தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   83

பஞ்சின் மெல் அடி விழும் அமிர்தகுண வல்லியின்
             பரம அருள் என் உள் வரவும்
       பங்கயன் பணி மகா மங்களே சுவரியின்
              பசுமை அருள் என் உள் வரவும்
விஞ்சை வரர் பரவுநல் வேல்நெடும் கண்ணியின்
              விகத அருள் என் உள் வரவும்
       விட்டகுறை தொட்டகுறை கிட்ட வரவே புரியும்
              மெல்லி அருள் என் உள் வரவும்
சஞ்சல அசஞ்சலப் பொருள் எங்கும் நிறையும் ஒரு
              சத்தி அருள் என் உள் வரவும்
       தம பாவ சங்காரி அருள் என் உள் வரவும் என்
              சாமி நீ அருள்புரிந்து
செஞ்சரோசப் பதத் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
       தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   83.

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! பஞ்சைக் காட்டிலும் மென்மையான அடிகளுடைய சிறந்த அமிர்தகுணவல்லியின் மேலான அருள் என்னுள் வரவும், தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமதேவன் வணங்கும் பெரிய மங்களேசுவரியின் பசுமையான அருள் என்னுள் வரவும், வித்தியாதரர் வணங்கும் நல்ல வேல் போன்ற நீண்ட கண்களையுடையவளின் மலர்ந்த திருவருள் என்னுள் வரவும், விட்டகுறை தொட்டகுறை மீண்டும் தொடர்ந்து வரச் செய்யும் மெல்லியளாகிய இறைவியின் அருள் என்னுள் வரவும், அசையும் பொருள் அசையாப் பொருள் ஆகிய எல்லாவற்றிலும் நிறைந்துள்ள சத்தியின் அருள் என்னுள் வரவும், துக்கந்தரும் பாவத்தை ஒழிப்பவளான இறைவியின் திருவருள் என்னுள் வரவும், எனக்கு அருள்புரிந்து, செந்தாமரை போலும் திருவடிச் செல்வத்தை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


மின்னொளி யனந்தமுமிழ் வதனவழ கம்மையின்
             விமலவரு ளென்னுள் வரவும்
       மிகைதெறுங் காவியங் கண்ணிமா கண்ணியின்
             விளக்கவரு ளென்னுள்வரவும்
கன்னலின் கண்டுறழ மொழிமகா வாணிமுக்
              கண்ணியரு ளென்னுள் வரவும்
       கவினுள சகச்சிரகம லத்திடை யிருக்குமொரு
              கன்னியரு ளென்னுள்வரவும்
இன்னலை யெருக்கியருள் சோமகலை நாயகியி
              னேசிலரு ளென்னுள்வரவும்
       ஏர்கொண்ட சிவயோக நாயகியி னருள்வரவு
              மெந்தைநீ யருள் புரிந்து
தென்னிலகு மலரடித் திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   84

மின்ஒளி அனந்தம் உமிழ் வதன அழகு அம்மையின்
              விமல அருள் என் உள் வரவும்
       மிகைதெறும் காவியம் கண்ணி மாகண்ணியின்
              விளக்க அருள் என் உள் வரவும்
கன்னலின் கண்டு உறழ மொழி மகாவாணி முக்
              கண்ணி அருள் என் உள் வரவும்
       கவின் உள சகக்சிர கமலத்திடை இருக்கும் ஒரு
              கன்னி அருள் என் உள் வரவும்
இன்னலை எருக்கி அருள் சோமகலை நாயகியின்
              ஏசுஇல் அருள் என் உன் வரவும்
        ஏர்கொண்ட சிவயோக நாயகியின் அருள் வரவும்
              எந்தை நீ அருள் புரிந்து
தென் இலகு மலர் அடித் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   84.

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! எண்ணில்லாத மின்னல்கள் கூடி ஒளி வீசுவதைப் போன்ற, திருமுக அழகுள்ள அம்மையின் அழுக்கில்லாத அருள் என்னுள் வரவும், குற்றத்தைக் களையும் கருங்குவளை போன்ற கரிய கண்களையுடைய தடங்கண்ணி (விசாலாட்சி)யின் விளக்கமான அருள் என்னுள் வரவும், கரும்பு போன்றும் கற்கண்டு போன்றும் இனிய மொழி பேசும் மகாவாணியும் முக்கண்ணியுமான தேவியின் அருள் எண்ணுள் வரவும், அழகுள்ள ஆயிரவிதழ் கொண்ட தாமரை மலர் மேல் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற கன்னியாகிய இறைவியின் அருள் என்னுள் வரவும், துன்பத்தை அழித்து அருளும் பிறைநிலாவை அணிந்த நாயகியின் குற்றமில்லாத அருள் என்னுள் வரவும், அழகு பொருந்திய சிவயோக நாயகியான இறைவியின் அருள் வரவும். எம் தந்தை நீ அருள்புரிந்து, இன்பம் விளங்கும் உன் திருவடி மலரை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


அங்கயற் கண்ணியபி ராமிகா மக்கணி
              யகண்டவரு ளென்னுள் வரவும்
       அண்டபகி ரண்டங்க ளீன்றவென் னம்மையரு
              ளன்புகொண் டென்னுள் வரவும்
சங்கடங் காதுசிவ சாம்பவி நிரந்தரி
              சகாயவரு ளென்னுள்வரவும்
       சருவபுவ னேசுரி தயாபரி யகாரியின்
              சரதவரு ளென்னுள்வரவும்
துங்ககலி யாணிசரு வாணியயி ராணியரு
              டுரிதமா வென்னுள்வரவும்
        சுத்தசிவ சத்தியரு ளென்னுள்வர வும்பெரிய
              சோதிநீ யருள்புரிந்து
சிங்கார நிரந்தரத் திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   85

அம்கயல் கண்ணி அபிராமி காமக்கணி
              அகண்ட அருள் என் உள் வரவும்
        அண்டபகிர் அண்டங்கள் ஈன்ற என் அம்மை அருள்
              அன்பு கொண்டு என் உள் வரவும்
சங்குஅடம் காது சிவசாம்பவி நிரந்தரி
              சகாய அருள் என் உள் வரவும்
        சருவபுவனேசுவரி தயாபரி அகாரியின்
              சரத அருள் என் உள் வரவும்
துங்க கலியாணி சருவாணி அயிராணி அருள்
             துரிதமா என் உள் வரவும்
        சுத்த சிவசத்தி அருள் என் உள் வரவும் பெரிய
              சோதி நீ அருள் புரிந்து
சிங்கார நிரந்தரத் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
             சிவ சுப்பிரமணிய தேவே.                   85.

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! அங்கயற்கண்ணி, அபிராமி, காமாட்சி ஆகியோரின் எல்லையற்ற அருள் என்னுள் வரவும், அண்ட கோடிகளையும் புற அண்டங்களையும் ஈன்ற என் அம்மையின் அருள் அன்பு கொண்டு என்னுள் வரவும், துன்பத்தை நீக்கும் சிவ சாம்பவி, நிரந்தரி உதவும் அருள் என்னுள் வரவும், சருவ புவனேசுரி, தயாபரி, அகாரியின் மெய்யான அருள் என்னுள் வரவும், தூயவளான கலியாணி, சருவாணி, அயிராணி அருள் விரைவாக என்னுள் வரவும், சுத்த சிவசத்தியின் அருள் என்னுள் வரவும், பெரிய சோதியாகிய நீ அருள்புரிந்து, என்றுமிருக்கும் அழகிய திருவருள் அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


அட்டமா சித்திதரு முத்தமியி னல் லரு
             ளகங்குளிர வென்னுள்வரவும்
        ஆதிநடு வந்தமில் லலாதகரு ணாகரியி
             னமுதவரு ளென்னுள்வரவும்
இட்டநிமிர் தொண்டரக முற்றபெரு நாயகியி
             னீரவரு ளென்னுள்வரவும்
        எவ்வுயிரு மெம்மக்க ளென்பவளி னின்பவரு
             ளீடின்றி யென்னுள்வரவும்
கட்டழ கெலாமுடைய பருவத வருத்தனிய
              கண்டவரு ளென்னுள்வரவும்
        கருதரு மிலக்குமியி னருளென்னுள் வரவுமெங்
             கடவுணீ யருள்புரிந்து
திட்டமறு பூரணத் திருவளித் தாளரோ
             தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   86

அட்டமா சித்தி தரும் உத்தமியின் நல் அருள்
             அகம் குளிர என் உள் வரவும்
       ஆதி நடு அந்தம் இல்லாத கருணாகரியின்
              அமுத அருள் என் உள் வரவும்
இட்டம் நிமிர் தொண்டர் அகம் உள்ள பெரு நாயகியின்
              ஈர அருள் என் உள் வரவும்
        எவ்உயிரும் எம்மக்கள் என்பவளின் இன்ப அருள்
              ஈடுஇன்றி என் உள் வரவும்
கட்டழகு எலாம் உடைய பருவதவருத்தனி
              அகண்ட அருள் என் உள் வரவும்
  சுருத அரும் இலக்குமியின் அருள் என் உள் வரவும் எம்
              கடவுள் நீ அருள்புரிந்து
திட்டம் அறு பூரணத் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   86

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! அட்டமாசித்தி (அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் எனும் எண் வகைச் சித்திகள்)யை அளிக்கும் உத்தமியின் சிறந்த அருள் என் மனங்குளிர என்னுள் வரவும், முதலும் நடுவும் முடிவும் இல்லாத கருணாகரியின் அமுதம் போலும் இனிய அருள் என்னுள் வரவும், எந்த உயிரும் என் மக்களாவர் என்று கூறுபவளின் இன்ப அருள் ஒப்புமையின்றி என்னுள் வரவும், பேரழகு எல்லாம் உடைய பருவதவர்த்தனியின் எல்லையற்ற அருள் என்னுள் வரவும், நினைத்தற்கரிய திருமகளின் அருள் என்னுள் வரவும், நினைத்தற்கரிய திருமகளின் அருள் என்னுள் வரவும், என்னுடைய கடவுளாகி அருள்புரிந்த, வரையற்ற பூரணமான முத்தியினை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!.


ஆற்றலுடை நித்திய சுகானந்தி பேரரு
             ளளப்பின்றி யென்னுள்வரவும்
       ஆனந்த வாரியென நிறையுநிட் களைவிமலை
              யாணரரு ளென்னுள்வரவும்
கூற்றால் விளக்கரிய வாதிசிவ சத்தியின்
              கோதிலரு ளென்னுள்வரவும்
       குற்சித மெலாமடு மகோரநிர்த் தனியங்
              குசத்தியரு ளென்னுள்வரவும்
ஊளற்றமலி நின்மல நிராகார சத்தியரு
              ளுரிமையோ டென்னுள்வரவும்
        ஒங்கார சத்தியரு ளென்னுள்வர வும்பெரிய
              வொருவனீ யருள்பு ந்து
தேற்றவுறழ் வோர்கருது திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   87

ஆற்றல் உடை நித்திய சுகஆனந்தி பேரருள்
              அளப்பு இன்றி என் உள் வரவும்
        ஆனந்தவாரி என நிறையும் நிட்களை விமலை
             யாணர் அருள் என் உள் வரவும்
கூற்றால் விளக்குஅரிய ஆதி சிவசத்தியின்
              கோது இல் அருள் என் உள் வரவும்
        குற்சிதம் எலாம் அடும் அகோர நிர்த்தனி அம்
              குசத்தி அருள் என் உள் வரவும்
ஊற்றம் மலி நின்மல நிராகார சத்தி அருள்
             உரிமையோடு என் உள் வரவும்
        ஓங்கார சத்தியருள் என் உள் வரவும் பெரிய
              ஒருவன் நீ அருள்புரிந்து
தேற்ற உறழ்வோர் கருது திரு அளித்து ஆள் அரோ
             தித்திக்கும் முத்தி முதலே
       தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
             சிவ சுப்பிரமணிய தேவே.                   87

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! ஆற்றலுடைய நிலையான சுகானந்தியின் பெரிய அருள் அளவின்றி என்னுள் வரவும், இன்பக் கடல் என நிறையும் அருவமான விமலையின் புதிய அருள் என்னுள் வரவும், சொல்லால் விளக்கிக் கூற முடியாத ஆதி சிவசத்தியின் குற்றமில்லாத அருள் என்னுள் வரவும், அழுக்குகளை எல்லாம் அழிக்கும் அகோர நிர்த்தனியும். அங்குசமுடையவளுமான இறைவியின் அருள் என்னுள் வரவும். வலிமை மிக்க நின்மல நிராகார சத்தியின் அருள் உரிமையுடன் என்னுள் வரவும், பெரியோனாகிய ஒப்பற்ற நீ அருள்புரிந்து. தெளிந்த ஞானமுடையோர் நினைக்கும் முத்தியின்பத்தை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!.


ஒன்பது மணிப்பிரபை வீசுமுடி நோரணியி
              னுசிதவரு ளென்னுள்வரவும்
       உண்மைப் பரம்பொருளை யகலாத சிற்சத்தி
              யொப்பிலரு ளென்னுள்வரவும்
நன்குகெழு புங்கவியொர் பகவதி பராபரைசெய்
              நறியவரு ளென்னுள்வரவும்
        ஞானவா னந்தமுகி லானபர தேவதையி
              னலிவிலரு ளென்னுள்வரவும்
அன்பரு ணடிக்கின்ற வானந்த நிர்த்தனியி
             னாணவரு ளென்னுள்வரவும்
        அந்தரியி னருளென்னுள் வரவும்மெம் பரமனா
              யவிருநீ யருள்புரிந்து
தென்புல மிலாத வொரு திருவளித் தாளரோ
             தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   88

ஒன்பது மணிப் பிரபை வீசு முடி நாரணியின்
              உசித அருள் என் உள் வரவும்
        உண்மைப் பரம்பொருளை அகலாத சிற்சத்தி
              ஒப்பில் அருள் என் உள் வரவும்
நன்குகெழு புங்கவிஒர் பகவதி பராபரை செய்
              நறிய அருள் என் உள் வரவும்
       ஞான ஆனந்த முகில்ஆன பரதேவதையின்
              நலிவு இல் அருள் என் உள் வரவும்
அன்பர் உள் நடிக்கின்ற ஆனந்த நிர்த்தனியின்
              ஆண அருள் என் உள் வரவும்
       அந்தரியின் அருள் என் உள் வரவும் பரமனாய்
              அவிரும் நீ அருள்புரித்து
தென்புலம் இலாத ஒரு திரு உளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   88

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம் எனப்படும் ஒன்பது மணிகளும் ஒளிவீசும் திருமுடியணிந்துள்ள நாரணியின் பொருத்தமான அருள் என்னுள் வரவும், அழியாத பரம்பொருளைப் பிரியாத சிற்சத்தியின் ஒப்பிலலாத அருள் என்னுள் வரவும், நலம் பொருந்திய புங்கவியும், பகவதியும், பராரையும் வழங்கும் திருவருள் என்னுள் வரவும்! ஞான ஆனந்த மேகமான பரதேவதையின் குறைவில்லாத அருள் என்னுள் வரவும், அன்பருடைய உள்ளத்தில் நடிக்கின்ற ஆனந்த நிர்த்தனியின் அன்பான அருள் என்னுள் வரவும், அந்தரியின்விளங்கும் நீ அருள் என்னுள் வரவும், என்னுடைய பரமனாக விளங்கும் நீ அருள்புரிந்து. கூற்றுவன் உலகம் புகாத ஒப்பற்ற முத்தியினை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!.


துப்பிதழ்ச் சாரதை பழிச்சுருத் திரையுடைய
              சுத்தவரு ளெள்னுள்வரவும்
       சோதிவடி வானசரு வேசுரி மகேசுரி
              துளக்கவரு ளென்னுள்வரவும்
எப்பொழுது முள்ளதிரு மங்கைஜக தம்பிகையி
              னேதிலரு ளென்னுள்வரவும்
       எழில்பெருகு சங்கரி சகோதரி யெனுஞ்சிற்
              றிடைச்சியரு ளென்னுள்வரவும்
ஒப்பின்மா லினிவடுகி நீலலோ சனியமலை
              யோகையரு ளென்னுள்வரவும்
       ஒளிமல்கு காந்திமதி யருளென்னுள் வரவுமுள்
              ளுணருநீ யருள் புரிந்து
செப்பரிய வீடெனுந் திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   89

துப்பு இதழ்ச் சாரதை பழிச்சு ருத்திரை உடைய
             சுத்த அருள் என் உள் வரவும்
        சோதி வடிவு ஆன சருவவேசுரி மகேசுரி
              துளக்க அருள் என் உள் வரவும்
எப்பொழுதும் உள்ள திருமங்கை ஜகதம்பிகையின்
              ஏதுஇல் அருள் என் உள் வரவும்
        எழில் பெருகு சங்கரி சகோதரி எனும் சிற்று
              இடைச்சி அருள் என் உள் வரவும்
ஒப்புஇல் மாலினி வடுகி நீல லோசனி அமலை
              ஓகை அருள் என் உள் வரவும்
        ஒளிமல்கு காந்திமதி அருள் என் உள் வரவும் உள்
             உணரும் நீ அருள்புரிந்து
செப்பு அரிய வீடு எனும் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
        தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   89.

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! பவளம் போன்ற சிவந்த வாயிதழ்க் கலைமகள் வணங்கும் உருத்திரையுடைய தூய்மையான அருள் என்னுள் வரவும், ஒளி உருவமான சருவேசுரி, மகேசுரியின் விளக்கமான அருள் என்னுள் வரவும், எப்பொழுதும் நிலைபெற்றுள்ள செல்வ மங்கையும் சகதம்பிகை ஆகியோரின் குற்றமிலாத அருள் என்னுள் வரவும். அழகு மிகுந்த சங்கரியும் நாராயணியும் நாராயணின் சகோதரியுமான சிறிய இடை உடைய தேவியின் அருள் என்னுள் வரவும், ஒப்பில்லாத மாலினி, வடுகி, நீலலோசனி, அமலை ஆகியோரின் மகிழ்ச்சியான அருள் என்னுள் வரவும், ஒளி மிகுந்த காந்திமதி அருள் என்னுள் வரவும், என் மனத்தை அறியும் நீ அருள் புரிந்து சொல்லுதற்கரிய வீடெனும் முத்தியினை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


சிந்தைதி ழுஞ்சித்தர் கட்கருஞ் சித்துதவு
              செல்வியரு ளென்னுள்வரவும்
       தில்லையு னடம்புரியு மன்னைசிவ காமிதரு
              தெய்வவரு ளென்னுள்வரவும்
இந்தவுல கின்பாசம் வெந்திட வுபாயமிடு
              மிறைவியரு ளென்னுள்வரவும்
       எவ்வுயிர்த் தொகையிலு மிருந்துவிளை யாடுமையி
              னேமவரு ளென்னுள் வரவும்
கொந்தலர்க் குழலிசிவ சங்கரி சிவானந்தி
              குடிலையரு ளென்னுள் வரவும்
       கோதிறிரி புரைகெளரி யருளென்னுள் வரவுமெங்
              குரவனீ யருள்புரிந்து
செந்தே சிகப்பதத் திருவளித் தாளரோ
              தித்திக்கு முத்திமுதலே
        தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
              சிவசுப்பிர மணியதேவே.                   90

சிந்தை திகழும் சித்தர்கட்கு அரும் சித்து உதவு
             செல்வி அருள் என் உள் வரவும்
       தில்லையில் நடம்புரியும் அன்னை சிவகாமி தரு
              தெய்வ அருள் என் உள் வரவும்
இந்த உலகின் பாசம் வெந்திட உபாயம் இடும்
              இறைவி அருள் என் உள் வரவும்
        எவ்உயிர்த் தொகையிலும் இருந்து விளையாடு                                                                                   உமையின்
              ஏம அருள் என் உள் வரவும்
       கொந்து அலர்க் குழலி சிவசங்கரி சிவானந்தி
              குடிலை அருள் என் உள் வரவும்
கோது இல் திரிபுரை கெளரி அருள் என் உள்வரவும் எம்
              குரவன் நீ அருள்புரிந்து
செந் தேசிகப்பதத் திரு அளித்து ஆள் அரோ
              தித்திக்கும் முத்தி முதலே
       தெள்அறிவு எனும் சலதி பொங்கும் உள்ஊரில் வளர்
              சிவ சுப்பிரமணிய தேவே.                   90.

இனிக்கும் முத்திக்குத் தலைவனே! தெளிந்த அறிவுக் கடல் பொங்கும் இதயம் எனும் அறிவிருக்குந் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணியக் கடவுளே! சிந்தை விளங்கும் சித்தர்களுக்கு, அரிய சித்துக்களை அளித்தருளும் இறைவியின் அருள் என்னுள் வரவும், சிதம்பரத்தில் திருக்கூத்தினைச் செய்யும் என் அன்னை சிவகாமி தரும் தெய்வீகமான அருள் என்னுள் வரவும், இவ்வுலக பாசம் வெந்து போவதற்கு வழி காணும் இறைவியின் அருள் என்னுள் வரவும் எந்த உயிர்க் கூட்டத்திலும் தங்கி விளையாடும் உமையம்மையின் இனிய அருள் என்னுள் வரவும், கொத்தான மலர்கள் சூடிய கூந்தலுடைய சிவசங்கரி, சிவானந்தி இரகசிய அருள் என்னுள் வரவும், குற்றமிலாத் திரிபுரை, கெளரி அருள் என்னுள் வரவும், என் குருநாதனாகிய நீ அருள்புரிந்து, செம்பொன் போலும் திருவடி முத்தியை அளித்து அடிமை கொண்டருள்வாயாக!


Home    |    Top   |    Back