முன்னுரை:-
இப்பதிகம் “ஸ்ரீமத் குமார சுவாமியம்” என்ற ஆறாவது மண்டலத்தைச் சார்ந்ததகும். “சென்னை” என்ற தலைப்பில் சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்த வேளைப் பாடிப் பரவியுள்ளார்கள். “சென்னை” என்ற தலைப்பில் முதற்பத்து, இரண்டாம் பத்து என இரு பத்துக்கள் உள்ளன. இப்பதிகத்தை இசையுடன் பாடினால் கேட்க இனிமையாக இருக்கும். நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் ஆணவமலவம் அழியும். அறிவு ஓங்கும். பொருளும் அருளும் கிட்டும். இறுதியில் முத்தியும் வாய்க்கும் என்பது சுவாமிகளின் வாக்கு.
இந்நூலில் சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்தும் அந்த பாடல்களுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
அடியொன்றற்குப்பதினேழக்கரம்
தந்தத்தா தந்ததத் தனதன தனதன தன்னத்தா
“கங்கை நதிக்கு ஒப்பற்ற இன்பம் தரும் புதல்வனே! மகிழ்ச்சி பொருந்திய நெற்றியிலமைந்த கண்களுடைய சிவபெருமான் தழுவிக் கொள்ளும் உமாதேவியின் ஒப்பற்ற செம்பொன் போன்ற மகனே! அழகு, இளமை ஆகியவை உடைய மயில் வானத்தில் ஏறி வரும் சென்னை மாநகரத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமனே! செம்மையாக ஒப்பனை செய்யப்பட்ட மாலையணிந்த அழகிய பொன்போலும் ஒளி யை வீசும் திருவுரு உடைய கடவுளே”, என்று துதிக்கும் எண்ணமுடையார்க்கு மாதர் தனங்களில் வைக்கும் ஆசை கசப்பையே தரும். அவர் பேரின்பத் தேனைச் சுவைப்பதால் மங்கையர் கொங்கைகள் கசப்பைத் தருவதன்றி வேறு தருவதற்கு வழி இல்லை.
முருகப் பெருமானின் பரமானந்தத்தை மெல்ல மெல்ல நினைக்கக் “கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே” எனக் கந்தரலங்காரம் கூறுவதும் காண்க.
1
சேயை துதித்தால் பேரின்பத்தைச் சுவைக்கலாம்”
“பொற்சபையில் எழுந்தருளியுள்ள பொன்வண்ணத்தவனே! அறிவுக்கு அரசே! இளமுனிவனே! வேலிறைவனே! அழகுவிளங்கும் மலையில் உள்ள தினைப்புனத்தினைக் காத்த வஞ்சிக்கொடிபோலும் அழகுடைய வள்ளியம்மையின் கணவனே! அசுரர் குலத்திற்கு இயமன் என்று கூறும்படி உள்ளவனே! சூரபன்மனை வென்ற பொழுது தேவர்களுக்கு அழகிய பெரிய தேவலோகத்தை வழங்கியருளிய முதல்வனான சென்னை மாநகரத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமனே!”, என்ற துதித்தால் சூரியனைக் கண்ட பனி விலகுவதுபோல துதிப்பவர்தம் வலிய தளையான பெரிய ஆணவமலம் ஒழிந்து போகும்.
2
“சென்னைச் சேயைத் வழிபட்டால் ஆணவ மலம் அழியும்”
அடியொன்றற்குப்பதினெட்டக்கரம்
தன்னத்தா தன்னத்தா தனதன தனதன தனனத்தா
சென்னை மாநகரில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமனே! என்று துதிப்போர்க்கு அளவில்லாத தீவினைகளால் வரும் கொடிய துன்பங்கள் போய்விடும். அழகிய நட்பு உண்டாகும். பெரிய அன்னவாகனத்தில் ஏறிவரும் பிரமதேவனின் பெருமை ஒழிய, வேதத்தின் மூலமான ஓங்காரத்தின் பொருளை வினவிய முதல்வனாகிய பெருமானும், திருமகளைத் தன் தேவியாகக் கொண்டுள்ள பெரியோனான திருமாலின் ஒப்பற்ற மருமகனும், பொதிகை மலையில் எழுந்தருளியுள்ள அகத்திய முனிவர் புகழ்ந்து போற்றும் அழகனும் ஆகிய மன்னன் ஆன கந்தவேளைச் சிந்தித்து அன்பு செய்வோர் இம்மண்ணுலகில் பெருமையுடன் வாழ்தற்குரிய நவரத்தினங்களும் மாளிகைகளும் மிகுதியாகப் பெறுவார்கள்.
3
“சென்னைச் சேயைத் துதித்து வந்தால் கொடிய தீவினைகள் விலகும் மற்றும்
இங்கு வாழ்வதற்கு நவரத்தினங்களும் பெரிய மாளிகைகளும் பல தருவான்”
இரக்கம் உடைய தந்தையே! விண்ணுலகத் தலைவனே! கலைகளை அறிந்தோர்களின் தலைவனே! மேலான தாமரைமலர்மீது வீற்றிருக்கும் பிரமதேவன் சிந்தித்து வழிபடும் குருவே! அழகிய தலைவனே! அழகுவளரும் மயில்வாகனத்தின் மீது ஏறிவரும் பரமனே! இவ்வுலகத்தைப் படைக்கும் அத்தனே! படைத்தவற்றை அழிக்கும் தலைவனே! குளிர்ந்த மலரை நல்லியக்கோடன் என்னும் அரசனுக்கு அளித்தருளிய திட்பமான தலைவனே சென்னை மாநகரத்துச் செவ்வேட்பரமன் என்று தெளிவான அறிவு மிகுந்தவர் நன்கு வணங்குவார்கள்.
4
“தெளிவான அறிவு உடையோர் செவ்வேட் பரமனை வணங்குவார்கள்”
அடியொன்றறற்குப் பத்தொன்பதக்கரம்
தனனத்தா தனனத்தா தனதனதனதன தன்னத்தா
மகிழ்ச்சியுடன் காதல் கொள்ளும் திருமாலின் மருமகன் ஆக விளங்கும் சென்னை மாநகரத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமன் அந்தக் கரணமான மனம் தாவிச் செல்வதால் பேய் போல் எங்கும் திரிதலை விலக்கிய ஞானக்கண் உடையவர்க்கு அளித்தருளும் திருவடியுடையவன். அருள்புரிதற்கு ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்த முதல்வன், தேவர்களின் பகைவரான அசுரர்களைக் கொல்லும் வேற்படை உடையவன். குற்றமற்ற பேரறிவாளன். முனிவர்கள் உள்ளத்தில் தியானித்துக் காணும் உறுதியுள்ளவன்.
5
“மனத்தை அடக்கியவர்கக்குத் திருவடி அளிப்பவன் சென்னைச்சேய்”
ஒப்பற்ற சேவல் என்னும்படி காட்சியளிக்கும் கொடியை அழகுடன் தாங்கியுள்ள திருக்கை உடைய தலைவனும், கிழக்குக் கடலின் முத்துக்கள் தருகின்ற வளப்பத்தினால் வறுமைத் துன்பத்தை ஒழிக்கும் செல்வம் மிகுதியாகக் கொண்ட விளைநிலங்கள் வரிசையாகச் சூழ்ந்துள்ள சென்னை மாநகரத்தில் எழுந்தருளியுள்ளவனும் ஆன செவ்வேட்பரமன் திருவடியைக் காதலிக்கம் அறிஞரும் அத்திருவடியாகிய தாமரைமலரைத் துணை என்னும்படிச் சார்ந்தவருமான அடியார்க்கு இவ்வுலகில் கொள்ளத்தக்கது என்பது எது! ஒன்றுமில்லை அற்றோ! முருகப் பெருமானிடம் நன்புடையீர் கூறுங்கள்.
6
“முருகவேளின் திருவடிமலரை அடைந்தவர்கக்க இவ்வுலகில் அடைய முடியாது ஒன்றுமில்லை என்று உரைப்பவன் சென்னைச்சேய்”
அடியொன்றறற்குப் பதினேழக்கரம்
தானத்தா தானத்தா தனதன தனதன தன்னத்தா
நடராசனும் கூடல்நகர் அரசனும், ஆன சிவபெருமானுடைய ஒப்பற்ற புதல்வனும் ஆறு தலைகள் கொண்ட அரசனும், பாடுதற்கோ, பெருமையை அளத்தற்கோ முடியாத, கூறுதற்கு அரிய ஒப்பற்ற பெரு வெளியில் நிலைபெறுபவனும், நாடும் அன்பர்கக்க இதயதாமரை பீடத்தில் எழுந்தருளியிருப்பவனும், குற்றங்களை நீக்கும் சிவபெருமானும், இந்திரன் மகள் தெய்வயானைக்கு மணமாலை சூட்டுதற்கு ஒப்பற்ற சூரபன்மனைக் கொன்ற மேலான தலைவனும் ஆனவன் ஒளி விளக்கமுடைய சென்னை மாநகரத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமன் ஆவன்.
7
“தன்னை நாடும் அன்பர் இதய பீடத்தில் சென்னைச் சேய் எழுந்தருளுவான்”
மெய்யன்பு செய்வார் பொருட்செல்வமும் அருட்செல்வமும் பெறுவதற்கு அருள்புரியும் சென்னை மாநகரில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமன், ஆகாயத்தில் இருப்பான். பசு என்னும் ஆன்மாவில் இருப்பான். மலை, கடல், நெருப்பு, காற்று ஆகியவற்றிலும் உள்ளும்புறமும் இருப்பான். உடம்பில் இருப்பான். ஒளியுடைய உயிரின் இருதயகுகையுள் அறிவாகாசத்தில் இருப்பான். வேதங்கள் ஆகமங்கள் ஆகிய சாத்திரங்களைக் கற்ற அறிஞரிடம் இருப்பான். அடியார் போன்ற ஆர்வத்துடன் கேட்கும் திருச்செவிகளுடன் அருள்மேகம் போல் எழுந்தருளுவான்.
8
“மெய்யன்பர்க்குச் சென்னைச்சேய் பொருட்செல்வம் அருட்செல்வம் ஆகியவற்றை வழங்கியருள்வான்”
தன்னத்தா தன்னத்தா தனதன தனதன தன்னத்தா
மெய்யன்புடையவர்களே! மண்ணுலகை விரும்புவோர் மண்ணுலகத்தில் இருப்பார்கள். மணமலர்மாலை அணியும் சென்னை மாநகரில் எழுந்தருளியுள்ள செவ்வேட்பரமனின் விண்ணுலகத்தை விரும்புவோர் அந்த விண்ணுலகத்தில் இருப்பார்கள். தூய அமுதம் என்னும் பெருமையுடைய தேனைப் பருகுமாறு ஒழுகும் இடத்தில் இருப்பார்க்கு மண்ணுலகமே அவருடைய ஞானக் கண்ணிற்கு விண்ணுலகம் போல் விளங்கும். அப்பெரியோர்க்கு இங்கு ஒருவித வறுமையும் இல்லை; துன்பமும் இல்லை.
9
“சென்னைச்சேய் அருளால் அமுதம் உண்டார்க்கு வறுமையும் துன்பமும் இல்லை”
இன்சுவை நிறைந்த கரும்பு போன்ற தலைவன் ஆன உயர்ந்த சந்தப்பா பாடியருளிய அருணகிரிநாதருக்குச் சென்னை மாநகரில் கந்த கோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்தசாமிக்குத் துன்பமும் அச்சமும் நெருங்கப்போர்புரியும் பகைவர்களான அசுரர் மடிய என்று சிறிதும் அஞ்சாமல் வலிய நல்ல கூற்றுவன் என்னும்படி போர் செய்தவன் என்பதும், தெய்வயானை அம்மை, குறமங்கையான வள்ளியம்மை ஆகியோர் மீது கொண்ட அன்பால் அவர் முன்னே நிற்பவன் என்பதும் ஆகிய மொழி இனியதாகும்.
10
சுவாமிகள் இதனை 1844ஆம் வருடம் சாலிவாகன சகாத்தம் துர்மதி ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (7.7.1921) அன்று இயற்றினார்கள்.