Logo


English

அவிரரும்பொன்

இப்பதிகம் கலித்தாழிசையை சேர்ந்தது. எழுத்தளவுடையன மற்றும் டகரவெதுகையில் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இப்பதிகம் துர்மதி வருஷம் மார்கழி மாதம் 26ந் தேதி சோமவாரத்தில் பாடப்பட்டது.

1. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! கொடையில் யாவரையும் விஞ்சிப் பெருமை பொருந்திய எண் குணங்களும் நிரம்பி ஒரு தடையுமின்றி உலகையாளும் அழிவற்றவனே! எனக்கு உடையவன் ஆகிய நினது கரவில்லாத உதவியல்லாமல் நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

2. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! துன்பமற்ற அந்திமானுக்கும் குறைவற்ற சந்திமானுக்கும் கடவுள் என்று பெருநூல் கூறும் வேலிறைவன் ஆகிய நினது கரவற்ற உதவியில்லாமல் நான் அடைவது வேறுயாது உள்ளது? கூறியருள்க.

3. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! கடலை உண்ட ஒப்பற்ற அகத்திய முனிவரும், சுடலையில் நடமாடிய ஈசுரனும் முன் நாளில் விரும்பிய ஒப்பற்ற பிரணவப் பொருள் என்று நீ வழங்கும் கொடையை அன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

4. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! சடைவிளங்குமாறு பெருந்தவம் செய்துள்ளவர் நின் திருவடியை வணங்குமாறு எழுந்தருளும் எம்பெருமானே! பெருமையுடைய நின் திருவருளை விழைதலே அன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

5. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! அறியாமையை அழிக்கும் பிரானே! அறிவை அருளும் பிரானே! செல்வம் தரும் சேய்ப்பரமனே! என்று சிந்திக்கும் அடியவரின் துன்பத்தை நீக்கும் உன் அருளை விழைதலே அன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

6. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! பரந்த இடமுடைய பெரிய மண்ணுலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் துறக்க விரும்புவார் விழையும் சுயம்பு மூர்த்தியே! கடவுளாகிய நினது ஒப்பற்ற அருளை யன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

7. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! உடம்புகளில் வாழும் உயிர்களில் உள்ளவனே! சூரியனின் இதயத்தில் இருப்பவனே! நாதம் கடந்தவனே! துன்பமற்ற உனது அருள் உள்ளத்தை யன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

8. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! அழிவற்ற கந்தக் கடவுளால் அழிவற்ற இருள்மலம் நீங்கும் என்று உன்னை உள்ளத்தில் விரும்புபவர் பற்றுகின்ற உனது ஒப்பற்ற துணையை யன்றி நான் அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க.

9. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! உடலும் உயிரும் வருத்த மடையும்படி துன்பம் நிறைந்த காட்டை நான் அடைந்தாலும் தீயவனாகிய யான் அழிவற்ற உனது அருள் மொழியினை அன்றி அடைவது வேறு யாது உள்ளது? கூறியருள்க!

10. கடம்பமாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய விளக்கமுடைய பொன்னே! வலிமையுடைய வெற்றிவேல் கொண்ட கடவுளே! வண்ணநூல்கடல் ஆகிய அருணகிரிநாத முனிவர் சேரும் பெரிய கடலே! உன்னைச் சிந்திக்கும் அடியவரின் துன்பத்தை அழிக்கும் நினது பொன்னார் திருவடியன்றி நான் அடைவது வேறுயாது உள்ளது? கூறியருள்க.


Home    |    Top   |    Back