Logo


English

தெய்வம்

1. தத்துவங்கள் தோறும் தோன்றியுள்ள (224) உலகங்கள் அனைத்தும் போற்றித் துதிக்கும் தெய்வம், ஒவ்வோர் உயிரின் இதயநடுவாகிய சிற்றம்பலத்திலும் விராட்புருட இருதயமாகிய பேரம்பலத்திலும் ஐந்தொழிற்கூத்தும் ஆனந்தக்கூத்தும் இயற்றும் தெய்வம்; தெய்வங்கள் அனைத்தும் போற்றும் தெய்வம்; சிவபரம்பொருளே எனத்திகழும் பெரும் தெய்வம்; துன்பங்கள் அனைத்தையும் நீக்கும் தெய்வம்; ஒப்பற்ற சிவானந்தப் பேற்றை அளிக்கும் தெய்வம்; இத்தகைய பெருமைகளுக்குரிய பரம்பொருளாகிய குகனைப் போற்றித் துதித்துத் தொடர்ந்துவரும் பிறப்பையும் இறப்பையும் அகற்றி நிற்பேன்.

2. தன்னைத்தவிர இரண்டாவது பொருள் வேறு இல்லை எனுமாறு அனைத்திலும் வியாபித்தும் அனைத்தாகவும் விளங்கும் தெயவ்ம்; அனைத்திலும் ஊடுருவி அந்தர்யாமியாக விளங்கும் தெய்வம்; வாரிவழங்கும் கொடைக்கடலாக விளங்கும் தெய்வம்; வேறுபாடு, மாற்றம் ஏதும் பொருந்தாத தெய்வம்; வினைவயப்பட்டு ஒரு தாயின் வயிற்றில் உதிக்காத தெய்வம்; பேரொளிமயமாகவும் சிதாகாசமாகவும் விளங்கும் தெய்வம்; இத்தகைய பெருமைகளுக்குரிய குகபரம்பொருளையே துதித்துத் தொடர்ந்துவரம் பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

3. மோனப் பெரும் செல்வம் வாய்க்கப் பெற்றோர்க்குரிய தெய்வம்; மோகவயப்பட்டுள்ளாரால் அறிய முடியாத தெய்வம்; தெய்வ உலகத்தார்க்கும் தகரோபாசனை செய்வார்க்கும் உரிய தெய்வம்; மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாததெய்வம்; ஞானமே வடிவாக விளங்கும் தெய்வம்; இதயநடுவண் உள்ள சிற்றம்பல வெளியில் எழுந்தருளும் குக தெய்வம்; இத்தகைய பெருமைக்குரிய குகபரம்பொருளைத் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

4. இளமை, மூப்பு முதலான காலவயப்பட்ட, தேகவயப்பட்டஅவத்தைகள் பொருந்தாத தெய்வம்; விரும்பித்துதிக்கும் அடியார்களைக் காத்து ஆட்கொள்ளும் தெய்வம்; தீம்பாகினும் இனிப்பாக விளங்கும் சுகதெய்வம்; தேர்ந்த நெறிப்பட்டுத் துதிக்கும் என் ஆசைக்குரிய தெய்வம்;, யோகியர் தியானித்து வணங்கும் தெய்வம்; இருமைநிலையை நீத்ததாய் ஒன்றென விளங்கும் தெய்வம்; இத்தகைய பெருமைக்குரிய குகபரம்பொருளைத் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

5. அறியாமை, மோகம் முதலான பிணிகள் பொருந்தாத தெய்வம்; அறிவுக்கும் அறிவாக (உணரும் அறிவுக்கு உணர்த்தும் அறிவாக) விளங்கும் ஞான தெய்வம்; பிரணவத்தின் உட்பொருளாக விளங்கும் தெய்வம்; உயிருக்கும் உயிராக விளங்கும் தெய்வம்; அறியாமை, மூடத்தன்மை, முதலானவற்றைப் போக்கும் தெய்வம்; பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் தெய்வம்; இத்தகைய பெருமைக்குரிய குகபரம்பொருளைத் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

6. எப்பொழுதும் உலக விவகாரங்களிலேயே ஈடுபட்டுள்ளோரால் அறிய முடியாத தெய்வம்; நாதநிலைக்கும் மேற்பட்டு நாதாந்த நிலையில் விளங்கும் தெய்வம்; நிலையாப் பொருளை நிலையாகக் கருதும் அற்பர்களால் உணர முடியாத தெய்வம்; அறியாமைத் தொடர்பான நிலைகளுக்கு எட்டாததாய் அப்பாற்பட்டு விளங்கும் தெய்வம்; கோபம் சிறிதளவும் கொள்ளாத தெய்வம்; சிவச்சுடரொளியாக விளங்கும் பெரும் தெய்வம்; இத்தகைய பெருநிலைகளில் விளங்கும் குகபரம்பொருளைத் துதித்துத் தெடர்ந்துவரும் பிறப்பையும் இறப்பையும் அகற்றி நிற்பேன்.

7. அன்பர்கள் அனைவருக்கும் வேண்டிய வேண்டியாங்கு அருளும் தெய்வம்; அளவுக்கு உட்படாத ஞானமயமான தெய்வம்; தன் பெருக்கம் இவ்வளவினது என்று தானே அறிய முடியாத அளவுக்கு விரிவுபட்டிருக்கும் தெய்வம்; சிவநிலையின் இயல்பான நிலைக்குரிய சித்தாந்த தெய்வம்; அனைத்துயிர்க்கும் ஆனந்தப் பேற்றை அளிக்கும் சுயம்புத் தெய்வம்; அடியேனையும் ஆட்கொண்டு அருளும் மிக மேலான தெய்வம்: இத்தகைய பெருமைக்குரிய குகபரம்பொருளைத் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

8. தாயாக விளங்கி அணைத்து ஆட்கொள்ளும் தெய்வம்; அன்பெனும் வலைக்குள் சிக்கித் தன்னை எளிமைப்படுத்திக் கொள்ளும் தெய்வம்; கரும்புச் சாற்றினும் மேலாக இனிக்கும் தெய்வம்; சிந்தையைக் கவர்ந்து ஒருமுகப்படுத்தும் தெய்வம்; என் இதயவெளியின் நடுவுள் எழுந்தருளும் தெய்வம்; யாவரினும், யாதினும் மேம்பட்ட வலிமையுடன் விளங்கும் தெய்வம்; இத்தகைய பெருமைகளுக்குரிய குகபரம்பொருளைத் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

9. எப்பொழுதும் ஒரே தன்மையாய் இருக்கும் தெய்வம்; இகநிலை, பரநிலை, சகுணம், நிர்க்குணம் என இரண்டு இரண்டாக விளங்கும் நிலைகளில் தானே தலைமைச் சிறப்புடன் விளங்கும் தெய்வம்; பொன்னம்பலத்துள் நடிக்கும் தெய்வம்; வரங்களை மிகுதியாக வழங்கும் கொடைக்கடலாகம் தெய்வம்; நன்மைகளுக்கெல்லாம் மேம்பட்ட சிவப்பெரும் நலம் சார்ந்துள்ள தெய்வம்; அனைத்தையும் விளக்கும் ஒளிப்பிழம்பாக விளங்கும் தெய்வம்; இத்தகைய பெருமைகளுக்குரிய குகபரம் பொருள் ஒன்றையே விடாது தியானித்திருந்து, தொடர்ந்து வரும் பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.

10. பெரும் தவச்செல்வர்களுக்கு வாய்க்கும் பெரிய தெய்வ ஆற்றலாக விளங்கும் தெய்வம்; வேதத்தின் முடிவுப்பொருளைத் தெளிவாக உரைத்து உணர்த்தி ஆட்கொள்ளும் தெய்வம்; எப்பொழுதும் எல்லார்க்கும் ஆதரவாக விளங்கும் பெரும் தெய்வம்; ஆபத்து நேரும் போதெல்லாம் விலக்கி அருளி அச்சம் தீர்க்கும் தெய்வம்; தீமைகள் அனைத்தையும் அழிக்கும் தெய்வம்; திருப்புகழ் பாடிய அருணகிரிப் பெருமானின் இதய தெய்வம்; இத்தகைய பெருமைகளையுடைய தெய்வம் யாது? அதனையே வணங்கித் துதித்துத் தொடர்ந்துவரும் எனது பிறப்பையும் இறப்பையும் அகற்றிநிற்பேன்.


Home    |    Top   |    Back