Logo


English

கடவுட் சங்க வுணர்ச்சி

இப்பாடல் கலிவிருத்தம், இரண்டாமெழுத்தொன்றிய சிறப்புடை அடியெதுகை, இரண்டுசீர்வண்ணம் ஆகும். இக் கலிவிருத்தம் துர்மதி வருஷம் ஆவணி மாதம் 1ந் தேதி மங்களவாரத்தில் சுவாமிகளால் இயற்றப்பட்டதாகம்.

1. அழிவற்ற அன்புடையீர்! நல்லூழ் உடையீர்! வலிய வேற்படை கொண்ட கையுடைய முருகனைப் பரவெளியனே! என்போம். வள்ளிப் பிராட்டியைத் தினைப் புனத்தில் கண்டு மகிழ்ந்தவனே! என்போம். தெய்வயானை அம்மையாரை மணந்த பெரியோனே! என்போம்.

2. வேல் ஏந்திய செவ்வேட் பரமனை அண்ணா! என்போம் அழகு நிறைந்த பதினெட்டுக்கண் உடையவனே! என்போம். கழலணிந்த நின் திருவடியைத் தா! என்போம். உன்னைச் சிந்தியாதவர்பால் கூடாத ஈசனே! என்போம். வானுலகத் தலைவனே! என்போம்.

3. முதுமைத் துன்பத்தை ஒழிக்கும் கூரிய வேலுடைய இறைவனை ஒப்பற்ற செல்வமே! அறிவே! என்போம். இனிய கனியே! மணமே! என்போம். சதுரப்பாடுடைய சிவமே! தவமே! என்போம்.

4. சிவனாரின் ஒப்பற்ற மகனாக வந்து அவருக்குப் பிரணவப் பொருளை உரைத்த குருவாய் நின்றவனே! அடியார்க்குப் பேரருள் செய்யும் கடவுளே! சொல்லில் அடங்காத பெருமையுடையோரின் பிரானே! என்போம்.

5. அவனை நாடிப் பாடுகின்ற அழகிய திருநாவினர் உய்யுமாறு வேண்டி இன்புருவான வள்ளிப் பிராட்டியைத் தேடித் தினைப்புனம் சென்ற ஒப்பற்ற செவ்வேளை – சேயவனைச் சார்ந்து பகைவரை வெல்லும் கோமானே என்போம்.

6. நாடு ஆள்வோரே! தூய்மையும் இளமையும் நீங்காத சேய்ப்பரமனின் திருவடி பணிவோர், நோயால் வருந்திச் சாவாரோ? அவன் திருவடியை நாடாதவர் சேருமிடம் சுடுகாடு ஆகுமே அன்றித் தூய வீடு ஆகுமோ? ஆகாதே.

7. (இக் ககரவிகற்ப மடக்குச் செய்யுட் சொற்பிரிவு) – காக்கைக்கு, ஓகைக்கு, ஆக்கைக்கு, ஐ, கொக்கு ஆக்கைக்கோ, கை கக்கக் கக்கீ, காக்கைக்கு ஐ, கொக்குக்கு, ஆகாக்கோ, காக்கைக்கு, இக்கு, ஈகைக் குகைக்கோ.

8. முருகன் வேதம் புகழும் கடவுள், போரில் வாகை சூடுபவன், சிவனாரின் நல்ல திருமகன், எல்லாப் பொருளுக்கும் இறைவன், மிக்க பொறுமையுடையவன். குடைக் கூத்தாடும் சேயோன். அடியவரின் குற்றத்தைப் போக்குபவன். அருளுக்கு மூலமான மேகம் ஆவன்.

9. முருகன் வானுலக வேந்தன், வானவரின் கடவுள், பலவகையான இன்பங்களைத் தன்பால் உடையவன். நலம் நிறைந்த இந்திரன் தொழும் ஒப்பற்ற தலைவன். தவம் செய்வோர் சிந்திக்கும் ஒரே தலைவன். தன்னைவிட்டு நீங்காத வேலையுடைய கடவுள். அறிவுக் கடல் ஆவான்.

10. முருகன் பெருமை பொருந்திய பல மலைகளில் எழுந்தருளி யிருப்பவன். திருப்பரங்கிரியை விட்டு நீங்காதவன். ஓர் அலகு உடைய வேலை யுடையவன். அழகு நிரம்பிய மயிலை ஊர்தியாக உடையவன். விளக்கமான அன்பு உடையவன். எல்லாவற்றையும் நன்கு அரியும் முற்றுணர்வு உடையவன் நலம் பொருந்திய திருப்புகழை அருளிய பெரியோராகிய அருணகிரிநாத முனிவர் நன்கு பணியும் புகழையுடைய பெரியோன் ஆவன்.


Home    |    Top   |    Back