கந்தசாமி
1. எனது பக்திப்பெருக்கில் எப்பொழுதும் பொருந்தி விளங்கும் ஒப்பற்ற பெருமைவாய்ந்த கந்தப் பெருமானே! அமிழ்தத்தின் சுவையைக் காட்டிலும் மேம்பட்ட ஆனந்தச் சுவையுடைய அமிழ்தமயமான சண்முகப் பெருமானை தியானிக்கின்ற பேரின்பமயமான அருள் ஞானம் வாய்கப் பெற்றுள்ள உயர்ந்த முனிவர்கள்’நான்’ என அகங்காரத்துடன் கூறுவதையும் வஞ்சனைக் குணம் வாய்ந்த உள்ளத்தில் ‘எனது’ எனத் தோன்றும் மமகார நினைவையும் மிகவும் இழிந்த மலமாகவும் சிறுநீராகவும் விவேக உள்ளத்தால் சிந்தித்து உணர்ந்து, கூறப்பட்ட அகங்காரத்தையும் மமகாரத்தையும் அறவே நீத்து விடுவதுதான் மிகவும் உயர்ச்சி பொருந்திய தூய்மை நிலை எனக் கூறுவார்கள். அத்தகைய தூய்மைநிலைவாய்ந்த ஞானியர்கள் அடையக் கூடிய நிட்டை நிலையை நீ எனக்கு நன்றாக என்றைக்குத் தரப்போகிறாய்?
2. கந்தப்பெருமானே! அனைத்தையும் இயக்குகின்ற உன்னைத் தியானிப்பதன் மூலம் அகங்கார மமகார அழுக்குடைய உள்ளமானது தூய்மை அடையும். பல்வகைப்பட்ட தீய நினைவுகளாகிய விலங்குகள் சேர்ந்திருப்பதால் மற்றவற்றிற்கு அடிமைப்பட்டுவிட்ட அறிவிலியாகிய எனது ஒருமுகப்பட்ட தியானத்தின் நடுவில் எழுந்தருளும் தலைவனே! எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அருட்செல்வம் மிக்க குகப்பெருமானே! பெருமையும் தூய்மையும் இயல்பாக வாய்க்கப் பெற்றுள்ளோய்! என இவ்வாறு ஓயாமல் உன்னைப் பாட்டுக்கள் மூலம் துதிப்பதால் நாம் சொல்லும் சொற்களானவை தூய்மை அடையும். உண்மையான பக்தியுடன் இறைவனை வணங்குவதன் மூலம் தசையும் நரம்பும் பொருந்திய உடல், அனைத்து விதமான அழுக்குகளும் நீங்கப் பெற்றிருக்கும் மேலான தூய்மை நிலையை அடையும். எந்தவிதமான அறிவும் இல்லாத அடியேனுக்குப் பொருந்தியுள்ள வழியாக அல்லது பற்றுக் கோடாக உள்ளது எது? கூறி அருள்.
3. என் மனமாகிய தாமரைப் பீடத்தில் எழுந்தருளும் கந்தப் பெருமானே! வீடு, மனைவி, உடன்பிறந்தோர், பிள்ளைகள் – ஆகிய இவைகளைத் துறந்து புறத்துறவு கொண்டு வெளியே வந்தவனின் உள்ளத்தில் தோன்றுகின்ற பல்வகையாய்க் கிளைக்கும் மோகம் எனும் தாயையும், ஆசை எனப்படும் மனைவியையும், பொன்னாசை எனப்படும் சகோதரனையும், அகந்தை எனப்படும் மகனையும் உடையவனாக இருப்பான் ஆனால், அவன் வீட்டைத்துறந்து வெளியே வந்த பின்னரும், அச்சத்தைத் தரத்தக்கதான குடும்பபாரம் உடையவனே ஆவன் என்று கூறும் செம்மையான மோன ஞானியரின் சிறப்புநிலையை உணர்ந்து கொள்ள, நன்மை நிறைந்த நினது அருட்செல்வத்தை நீ எனக்கு எப்பொழுது அருள்புரிய உள்ளாய்?
4. கந்தப்பெருமானே! “அச்சம்தரும் குடும்ப பாரத்திற்குக் காரணமான மனைவி, பிள்ளை எனச் சொல்லப்படும் இவர்களையெல்லாம் மறந்து, தன்னைச் சார்ந்துள்ள பந்தங்கள் அனைத்தையும் துறந்தவனான பெரியோன் பெருமை நிறைந்த இறையன்பு (பக்தி) எனப்படும் காதலியையும், சிறந்து மேம்பட்டுள்ள பதிஞானம் எனப்படும் மகனையுமே (இவ்வுலகில் ஒருபொழுதும் மறக்காமல் அன்பெனும் காதலியுடனும் அறிவு எனும் பிள்ளையுடனும்) எப்பொழுதும் சேர்ந்திருந்து, இவையே நிலையான துணையாவதற்கு உரியவை என உணர்ந்து கொண்டு, பெருநலத்துடன் முழுநிறைவு பெற்று வாழ்க” என்று வாழ்த்தி அருளும் ஞானப் பெரியோர்களின் சிறப்புநிலை எனக்கு எப்பொழுது வாய்க்கும்? கூறி அருள். (துறந்தவனான பெரியோன் வாழ்க என வாழ்த்தும் ஞானப் பெரியோர்)
5. கந்தப்பொருமானே! “வீடுபேற்றை விரும்பி அதற்குரிய வழியில் நிற்போனாகிய இழிவற்ற முமுட்சு என்போன் தனக்கு முற்பட்டும் பிற்பட்டும் உள்ள இருபத்தோரு தலைமுறையினரையும், நல்ல நிலைக்கு உயர்த்துபவனாகவும், புகழப்படும் பிரம்மவித்தன் எனப்படும் உயர்ஞானி தனக்கு முற்பட்டும் பிற்பட்டும் உள்ள நூற்று ஒரு தலைமுறையினரையும் உண்மையிலேயே முத்திக் கரையில் சேருமாறு செய்கின்றான் என வேதம் கூறும்” என ஆராய்ந்துணர்கின்ற ஞானிகள், துறவு நெறியை மேற்கொண்டு உய்தி பெறுவோம் எனக் கருதி அந்நெறியில் செல்ல விரும்புபவர்களை, அவ்வாறு செல்ல வொட்டாது தடுத்து ஏன் வருந்துவார்கள்? – இவ்வாறு உறுதியாகக் கருதும் சீவன் முத்தர்களின் பேரின்ப நிலையை நானும் பொருந்தி விளங்க, அருள்புரிவாய்.
6. கந்தப்பொருமானே, முழுதும் உணர்ந்த பிரம்ம ஞானி எனப்படுவோனின் உத்தமமான அருட்பார்வையில் அகப்பட்டோர்கள், ஆதிசேடனால் தாங்கப்பெறும் உலகிலும், அற்புதம் மிகுந்த ஆகாயத்தின் கண்ணும் உவர்க்கடலை ஆடையாகக் கொண்டுள்ள நிலவுலகத்திலும் பற்பல வடிவங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோர்க்கும் மேம்பட்டவர்களாகிப் பிறவிகள் தோறும் தொடர்ந்துவரும் தீவினைப் பயனிலிருந்து நீங்கிப் பேரின்பத்தை ஒருமிக்கப் பெறுவார்கள்.” என வேதமானது (வராக உபநிடதம்) மிகவும் நயமாக வலியுறுத்திக் கூறும். இவ்வாறு வரும் வேதமொழியை ஆய்ந்து சிந்திக்கின்ற ஞானப்பெரியோர்களால் மிகவும் உயர்வாகக் கருதப்படும் நன்மைமிகுந்த மனோலய நிலையை எனக்குக் கொடுத்தருள்க.
7. கந்தப்பெருமானே! எவன் ஒருவன் தன் உயிர் நீங்கும் சமயத்தில் யாரை மனத்தில் நினைத்து ஜெபிக்கும் நிலையில் இருந்தானோ அவன், அவனால் நினைக்கப்பட்ட அவரது வடிவமே எனத்தக்க உடலைப் பொருந்தியவானய், சிறந்த சிவயோக ஞானியின் திருவுள்ளமயமாகத் திகழ்கின்ற மங்களகரமான நிலையைப் பொருந்துவான்; அவன் மற்றுள்ள பல்வேறு வினைப் பயன்களால் துன்பம் அடையமாட்டான்” எனத் தூய வேதம் கூறும் கோட்பாட்டை உணர்ந்தவனாகி, உவமை இல்லாததாய் எங்கும் பூரணமாக வியாபித்துள்ள பேரொளிமயமான உனது வடிவத்துள் சீவ போத ஒடுக்கமுற்று வாழும் ஞானப் பெருநிலையை எனக்குக் கொடுத்தருள்க.
8. கந்தப்பெருமானே! மெய்ஞ்ஞானமாகிய நெருப்பினால் எரிக்கப்பட்ட ஞானியின் உடலை, செந்நெருப்பில் இட்டு எரிக்கக் கூடாது. புரைதீர்ந்த புனித மண்ணுக்குள்ளே அடக்கம் செய்வதே தகுதியான செயலாகும். அவன் இறக்கும்போது, பொதுவாக இறப்பு நேர்வதால் ஏற்படும் தீட்டு (சூதகம்) இல்லை, இறப்பு அடைந்தவர்களின் மக்கள், அந்த ஞானி மீது கொண்டுள்ள அன்பால் செய்ய வேண்டிய சடங்குகளும் இல்லை.” எனக் கூறும், பைங்கல உபநிடதத்தின் இன்பமயமான வாசகம். வீணே உடலெடுத்துள்ள எனக்கும் உரிமையோடு பொருந்தி இருக்கும் வண்ணம், என் உயிருக்குள் உயிராகக் கலந்திருந்து அருள் புரிவாயாக.
9. விரும்பித் துதிக்கும் எங்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு உயர்வுடன் விளங்கும் பேரின்பமயமான சம்புவே! (சம்பு = உயிர்களுக்கு இன்பம் விளைவிப்போன்)/ சிவசொரூபமாகக் காட்சி அளிக்கும் கந்தப்பெருமானே! எப்பொழுதும் உனது திருவருளே பற்றுக்கோடு எனக் கருதிவாழும் அன்பர்களுக்கு நேர்கின்ற துன்பம், அறியாமை, மோகம் முதலானவை யெல்லாம் கெட்டு ஒழியுமாறு முன்னர்த் திருவருள் புரிந்த உனது அடியானாகிய எனது அற்பநெஞ்சம், பெரிதும் ஈடுபாட்டுடன் செய்த தீமைகள் அனைத்தும் அடியோடு நீங்குமாறு என் முன்னர் எழுந்தருளிவந்து “எம் அன்பனே! உனக்கு இனி ஒரு போதும் துன்பம் இல்லை” என அருள்வார்த்தை வறி, என்னுள் இரண்டறக் கலந்து கொண்டு, விண்ணுலகத்துள்ள தேவர்களும் புகழ்ந்து துதிக்கும்படியான உன் அருளானந்த மயமான வாழ்வுப்பேற்றையே எனக்குத் தந்தருள்வாய்!
10. சிவ சொரூபமாகக் காட்சி யளிக்கும் கந்தப் பெருமானே! தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவனாக விளங்கும் உன்னைக் காட்டிலும் உயர்ந்து விளங்கும் கடவுளரும், நாதமயமான வேதங்களும் போற்றித் துதிக்கும் உனக்குச் சமமாக விளங்கும் கடவுளரும் எங்கும் இல்லை. எப்பொழுதும் இல்லை என ஆய்ந்து தெளிந்துணர, மிகவும் மேம்பட்டதான ஒப்பற்ற ஞானப் பேற்றைத் தந்தருளிய ஈசுவரனே! உனது திருவருளால் கூற்றுவனின் அதிகாரத்தையும் கடந்து மேம்பட்ட அருணகிரிநாதப் பெருமானுக்கு உரியவனாய் விளங்கிய இறைவ! வீரவாகு முதலான நவவீரர்களுக்கும் வாய்த்துள்ள தனித்தலைவனே! குமரகுருதாசன் என அழைக்கப்படும் என்னைவிட்டு எப்பொழுதும் நீங்காமல் என்னோடு இரண்டறக் கலந்து அருள்க.