Logo


English

நவவீரர் நவரத்தினக் கலிவிருத்தம்

குறிப்பு:- இப்பதிகத்தைப் பாடும் போது கவிக்கொரு கர்ப்பூரதீபமேற்றுக.

1. சிறப்பு நீங்காத முருகவேள் எழுந்தருளும் வளமும் எழிலும் நீங்காத திருக்கோயில் வாயிலில் எழுந்தருளும் நிலைபேறும், இடையறாப் பேரன்பும் வளரும் தன்மையுடைய அழிவற்ற வீரவாகுதேவர் எனப்படும் வீரரை நெஞ்சால் சிந்தித்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்குவாம்.

2. என்னை ஆட்கொண்டருளும் இறைவனாய் உலகெங்கும் நிறைந்த கந்தபிரானின் திருக்கோயிற்கண் விளங்கும் திரு நிலைபெற்ற வீரகேசரி தேவரை உள்ளன்போடு வணங்குவார்க்கு எத்தீங்கும் இல்லை.

3. கூறுதற்கு அரிய பெருமையுடைய ஒப்பற்ற வீரமகேந்திர தேவரின் திருவடியை உள்ளத்துள் சிந்திக்கும் மாந்தருக்கு நரகத்தைத்தரும் ஆசை அழியஞானம் கூடுமாறு பெரிய மாமரத்தைப் பிளந்த வேற்படையையுடைய செவ்வேட்பரமன் திருவுள்ளம் கொள்ளுவான்.

4. வேலிறைவனை என்றும் மேம்பட்ட சித்தத்தில் வைத்துத் தியானிப்பவர்களின் கவலையை மாற்றுபவர் போரில் எதிர்த்த சூரபதுமனுடன் பொருத முருக வேளின் திருவடியின் பத்தியில் திளைக்கும் வீரமகேச தேவர் ஆவார்.

5. எல்லாத் திக்குகளிலும் நீக்கமற நிறைந்த பெருந்தகைமையாவும் கொண்டு விளங்கும் குருபரனின் திருவடி எண்ணாப் பகைகளை எல்லாம் களையும் ஒரு பெருமை கொண்டு குகப்பரமனைச் சிந்திப்பாரின் துன்பம் யாவற்றையும் அழிப்பவர் வீரபுரந்தர தேவர் ஆவார்.

6. பிறப்பும் இறப்பும் இல்லாது மேம்பட்ட வீடுபேறு அடைதற்கு உரிய நெறியை நாடுகின்ற அன்புடைய முனிவர்கள் வாழ்கின்ற தூயதான சோமலோகத்தையுடையவனான முருகவேளுடைய குற்றமற்ற திருவருளைப் பெற்ற வீரராக்கததேவரின் திருவடியை வணங்குபவர் தேவரும் அறிவதற்குக் கூடாத ஒப்பற்ற சிறப்பினால் உயர்ந்து விளங்குவார்.

7. தாமதமாகிய தீய குணத்தை அகற்றுகின்ற அழகைக் கொண்ட சேந்தனின் (அடைந்தவர்க்குப்) புகல் தரும் திருவடியின்பம் எனப்படும் ஒப்பற்ற சிறப்பை அடைந்த ஒப்பற்ற பெருமை மிக்க வலிமையுடைய வீரமார்த்தாண்ட தேவரது திருவடிமலர்களை மனத்தில் விரும்புபவர்கள் தற்போதம் ஒழிந்து வீட்டு நிலையினை அடைவார்.

8. வலிமையும் ஓங்கும் பெருமையும் உடைய மயிலூரும் அழகனாகிய முருகனை சிந்திப்பவர், அவனது நினைவே எப்போதும் ஓங்கி விளங்கும் வீராந்தக தேவரை எண்ணுவராயின் துன்பம் யாவற்றையும் கணப்பொழுதில் நீக்குவார்.

9. யார் எங்ஙனம் விரும்புகின்றனரோ அவ்வாறே திருவருள் புரியும் அருளாளனாகிய இறைவனாயும் நெருப்பு மலையின் பெயராகிய அருணகிரி என்னும் பெயர்கொண்ட முனிவர் போற்றும் தாரகப் பொருளாயும் உள்ள வேலவனை வணங்குகின்ற தகைமையாகிய பண்பாளரும் வீரதீரர் என்னும் பெயருடையவரும் ஆன தேவரைப் புகழுகின்ற ஞானிகளுக்கு யாதும் சிறுமையுறுவதில்லை.


Home    |    Top   |    Back