கருணாகர வேலன்
மண்டலத்து உயிர் யாவையும் ஆள் முதால்
வண்டு மொய்க்கும் நன் மஞ்சரி மொய்ம்பினோய்
கொண்டலைப் பழித்துள்ள அருட்கொடைக்
கோவே என்றனை ஆள என்று அன்பின் என்
வெண் தமிழ்ச் சொலும் கேட்டு அருள் செய்வையோ
வீதி நாய் பொல் அலைந்திடச் செய்வையோ
அறிகிலேன் கருனாகரவேலனே.
1
வஞ்சனாய் அறிவீனர்கள் நம்பும் இவ்
வாழ்விலே உழன்று இப்புலை யாக்கைதான்
துஞ்ச அந்தகன் கையிற் கொடுப்பையோ
சூழ்ந்து சூழ்ந்து இனும் காத்திடச் செய்வையோ
நஞ்சம் உண்டு நடித்தவர் செம்மலே
நங்கை வள்ளி தெய்வானை மணாளனே
கஞ்ச மெல் அடி ஈந்து எனை ஆள்வையோ
காண்கிலேன் கருணாகர வேலனே.
2
தாயும் நீ பெற்ற தந்தையும் நீ மணந்
தாளும் நீ சொந்தத் தம்பியும் நீ தந்தை
தாயும் நீ அன்னை தாயும் நீ அண்ணன் நீ
தாதையின் மருமானும் நீ மாமன் நீ
சேயும் மாமியும் நீ தொடர்ந்தோரும் நீ
தேவு நீ இறையோனும் நீ மன்னு நீ
ஆயும் என்அக நீ புக்கு இருந்து எனை
ஆண்டு கொள் கருணாகர வேலனே.
3
அன்பு எனும் தட்பம் ஆனது என் நெஞ்சகத்து
அளவை இன்று எழுந்து ஓங்கிப் பரம்பவும்
என்பு நெக்குடைந்து என் வசம் நான் இன்றி
இரு கண்ணாலும் கண்ணீர் உகுத்து ஏசு இலா
இன்பு தோன்றவும் செய்ய ஒரு நீர்மையை
என்று தந்தருள்வாய் எழில் எந்தையே
துன்பிநின்று சுவர்க்கர்ப் புரந்த ஒர்
சுவாமியே கருணாகர வேலனே.
4
நீரில் நாரம் படர்ந்தது போல் என் உள்
நீக்கம் இன்றி நிறைந்த அஞ்ஞானம் ஆம்
கார் இருட்டைத் துமிக்க வெளிச்சமே
காட்டு ஞான விளக்கினை ஏற்ற இந்
நேரம் வந்து அருள் நீட்ட உனக்கு அயர்
நேமம் ஏதும் அறிந்திலன் நான் நிதம்
நாரொடும்படர்வேன் நினை ஒப்பிலா
ஞாட்புடைக் கருணாகர வேலனே.
5
மூன்று இரண்டு புலன்வென்று அகண்டமா
மோன ஞான மெய் விண்புலம் மன்னி நின்று
ஆன்ற இன்பம் அது ஒன்றனை இச்சிப்பார்
அந்தரங்கத்தில் தித்திக்கும் தித்திப்பை
மூன்று இரண்டையும் வென்று அறியாத நான்
மோகித்து இம்பர்த்தியங்கித் திகைக்கிறேன்
ஈன்ற நின் அருள் என் பக்கம் ஆகும் நாள்
எந்த நாள் கருணாகர வேலனே.
6
தண்ணளிதெய்வ ரத்தினம் ஆம் உனைச்
சந்ததம் சிந்தை செய்கின்ற நானும் நான்
உண்ணும உண்டியும் உண்டிகளால் புட்டி
உறும் உடம்பும் உள் ஆக்கையும் நோக்கமும்
கண்ணிக் கண்ணிக் கலங்கிட நிற்கின்ற
கண்ணது ஆம் இந்தப் பூமியும் பூமி மீது
எண்ண உள்ள எல்லாம் மலம் ஆகுமேல்
என் செய்குவேன் கருணாகர வேலனே.
7
சாவியைக் குத்தும் காலத்திலே எழும்
தண்டுலத்தினை ஏய்ப்ப மனத்தின் எக்
காலமும் செய் தியானத்தினால் இருள்
கண்டிதப்பட்டு இலங்கும் மெய்ங்ஞானம் என்று
ஒளியிடும் சுருதிப்படிக்கே உனை
உள்ளினேன் அருள் உற்று வந்து இப்பொலா
ஞாலநச்சு மயக்கை வர்ச்சித்து அருள்
நாட்டி ஆள் கருணாகர வேலனே.
8
எண்ணிலாத பல் கால்களைக் கொண்டு உலகு
எங்கும் ஒர் கணத்து ஏகும் மனத்தை ஓம்
கண்ணிவைத்துப் பிடித்து வளைத்து உளே
கட்டி நான் நல்ல காரிய வேடனாய்
எண்ணம அற்ற சுகத்தை அடைந்து இனி
எந்தை நின் அருள் மண்ணும் வெளிக்குள்ளே
மண் இகந்து உய்யும் மார்க்கத்தில் நிற்க என்
மாட்டு வா கருணாகர வேலனே.
9
கன்னிமார் அறுவர்க்கு அட்ட சித்தியைக்
காதலாய் அன்று அதிர்த்த பிரான் உறை
கன்னி நாட்டு அங்கயற்கண்ணி தன் அகம்
கண் குளிர்ப்புற உள்ள கைக்கிள்ளையே
தென் அவிர்ந்து உயர் தென் கயிலைப் பதிச்
செல்வனுக்கும் திருப்புகழ் செப்பிய
என்னை ஆள் உடையானுக்கும் சாமியே
என்னை ஈ கருணாகர வேலனே.
10