நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை
முதல் மண்டலம் இசை
வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
12. | திருத்தணிகை | 06 | |
பலன் | முருகனை வணங்கி சாந்தி பெற வேண்டுமா?
|
திருத்தணிகை
சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
பேச அரிய வேதங்கள் ஆகம புராணங்கள்
பிரம மிருதிகளும் ஒண்மை
பெருகு கமல ஆசனக் கலைமகளும் அசலையில்
பேர் பெற்ற கவிஞர் எல்லாம்
ஆசையுடன் ஆயுள் பரியந்தம் நினது அமைதி மரபு
அயராது எடுத்து அறையினும்
அணுவினுக்கு ஒட்டுமோ மனதினுக்கு எட்டுமோ
அந்தோ சிறுத்த நெஞ்சார்
தாசன் புகழ்ந்ததைப் பாடுவதும் எங்ஙனே
சருவதாரக தெய்வமே
சச்சிதானந்த சிவசைதன்னியமே சமய
சஞ்சீவியே சந்ததச்
சூசிகெழு நின் அருளில் நான் உய்ய ஒரு கருணை
துரிதத்தில் ஈதி ஈதி
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே. 1
திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமுமாக விளங்கும் சுப்பிரமணியப் பரம்பொருளே! பெருமையை இவ்வுளவு என்ற சொல்லுவதற்கு அரிதாகவுள்ள நான்கு வேதங்களும், இருபத்தெட்டு ஆகமங்களும், பதினெட்டுப் புராணங்களும், வேத உபாங்கமான மிருதிகளும், வெண்டாமரையைத் தன் இருக்கையாக் கொண்டுள்ள அறிவு மயமான கலைமகளும், இம் மண்ணுலகில் புகழ்பெற்ற கவிஞர் எல்லாரும் ஆசையுடன் ஆயுட்காலம் வரையிலும் உனது இயல்பான தன்மையைச் சோர்வின்றி எடுத்துக் கூறினாலும், ஆன்ம அறிவுக்குப் பொருந்துமோ! மனத்தினால் அறியக் கூடுமோ? உன் பெருமை இவ்வாறிருக்க, ஐயோ! சிறிய மனம் படைத்த இந்தக் குமரகுருதாசன் எவ்வாறு உன்னைப் புகழ்ந்து பாடமுடியும்? எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவுள்ள தெய்வமே! சத்து சித்து ஆனந்தமாக உள்ள பேரறிவே! தக்க சமயத்தில் அடியார்களைக் காத்தருளும் சஞ்சீவி மூலிகையே! எப்போதும் தூய்மையான உனது திருவருளில் நான் பிழைக்க ஒப்பற்ற கருணையை விரைவில் அளித்தருள்வாயாக! அளித்தருள்வாயாக!
நெஞ்சு உழை நினைப்பவர்களுக்கு எலாம் உதவியா
நின்று அலக்கண் தவிர்த்து
நித்த பரிபூரண ஆனந்த வாழ்வு ஒன்றையே
நேயமாகக் கொடுத்துக்
கஞ்சமலர் யோனி கருமத்து இடை விடாது இனிய
கருணை அருள் வள்ளல் என்னாக்
கருதி நிதம் வாடும் அடியேற்கு இங்கு ஒர்ஆதரவு
கனவினும் இல்லாமை பற்றிப்
பஞ்சை என எண்ணியோ பரிபாகம் எய்தாத
பண்பு அதனை எண்ணியோ நீ
பராமுகம் செய்வதாய் எண்ணுவேன் அப்பனே
பக்ஷம் எப்படியும் வேண்டும்
துஞ்சு பரதத்துவ விலாச விண்ணே தொண்டர்
சுத்த நெஞ்சு உற்ற திருவே
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே. 2
நிலைபெற்ற மேலான மெய்ப்பொருளான அழகிய ஆகாசமே! அடியாரின் தூய மனத்தில் எழுந்தருளியுள்ள தெயவ்மே! திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமும் ஆக விளங்கும் சப்பிரமணியப் பரம் பொருளே! மனத்தில் நினைப்பவர்களுக்கெல்லாம் துணையாக இருந்து துன்பத்தை நீக்கி, நிலையான, முழுமையான ஆனந்த வாழ்வு ஒன்றை மட்டுமே அன்பாக அளித்தருளித் தாமரை மலர்மேல் பிறந்த பிரமதேவனின் படைப்புத் தொழிலில் என்னைவிடாமல், இனிய கருணையை அருளுகின்ற தற்பயன் கருதாத வள்ளல் என்று, உன்னைத் தினமும் நினைந்து வாடுகின்ற அடியேனுக்கு, இவ்வுலகில் ஓர் ஆதரவு கனவிலும் கூட இல்லாமையினால், என்னை வறியவன் என்று நினைத்தோ அல்லது எனது பரிபக்குவம் இல்லாத குணத்தை எண்ணியோ, நீ என்னைப் பாராது புறக்கணிப்பதாக நினைப்பேன்; என் தந்தையே! உன் அன்பு எனக்கு எப்படியும் வேண்டும்!
ஆதிமுதலாக உன்னை அண்டி என் உள்ளம் அதை
அறிவித்து நின்ற நிலையும்
அதன் பின்னர் நான் பட்ட அவதியால் இந்நேரம்
அறிவித்து நிற்கு நிலையும்
பேதம் இல் பெரியை நீ அறிவையே இத்யாதி
பெற்றிகளும் நின் செயலினால்
பெற்றேன் எனாது பிற கடவுளர்கள் செயல் எனப்
பேசுவனோ உன் கருணை தான்
வாதனையில் இன்னும் எனை வைக்கும் என்றால் இரையும்
வாழ்வது உண்டோ என் மனு
வம்பிலே போமோ வழக்காடி எப்படியும்
வாங்குவேன் நல் நியாயம்
சோதிகட்கு எல்லாம் ஓர் சோதியே அப்பெரும்
சோதி நடு ஆன பொருளே
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே. 3
ஒளிகளுக்கெல்லாம் ஒளியைத் தருகின்ற ஒப்பற்ற ஒளியே! அப்பேரொளியின் நடுவாக உள்ள பொருளே! திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமும் ஆகவுள்ள சுப்பிரமணியப் பரம்பொருளே! தொடக்கம் முதலாக உன்னைச் சார்ந்து எனது மனத்திலுள்ள அன்பை உனக்குத் தெரிவித்து இருந்த நிலையும், அதற்குப் பின்னர் நான் அனுபவித்த துன்பத்தால் இப்போது உனக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலைமையும், வேற்றுமையின்றி கலந்திருக்கும் பெரியோனாகிய நீ அறிவாயல்லவா? இது போன்றவையான நன்மைகள் எல்லாம் உனது அருட் செயலினால் அடைந்தேன் என்று எண்ணாமல், வேறு கடவுளர்களின் அருட் செயல்களினால் அடைந்தேன் என்று சொல்வேனோ? உனது கருணையானது துன்பத்தில் இன்னும் என்னை வைக்குமென்றால் நான் சிறிது நேரமும் வாழ்வேனா? எனது விண்ணப்பம் வீண்போகுமோ! நான் வழக்குரைத்து நல்ல நீதியை உன்னிடம் வாங்கிவிடுவேன்!
இருக்கு ஆதி மறை ஆகமம் புராண ஆதி முறை
என்பனவும் அவைகள் பன்னும்
எழில் ஆன திரிமூர்த்தி ஆதி பலதேவு உறுவர்
எங்கும் ஒளிர் பிரமம் வருணம்
பெருக்கு ஆன ஆசார புண்ணியம் பூசனை
பிதிர்க்கடன் சரியை ஆதி
பேதமா மந்திரம் கொல்லாமை ஊன் உண்டு
பிழையாமை என்பனவும் இப்
பொறுப்பு ஏறும் உலகு எங்கும் உண்டோ எனச் சிறுமை
புகழுவோர் ஆ உடம்பின்
புலம் எங்கும் உதிரமும் சிறுமடியில் நல்லார்கள்
புரிவொடு உண் அமிழ்தமும் போல்
சுருக்கம் உள இப்பூமி மேல் என்று மனு முனிவர்
சொற்றநடு ஒர்கிலாரே
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே. 4
திருத்தணிகை மலைமேல் எபந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமும் ஆகவுள்ள சுப்பிரமணியப் பரம்பொருளே! இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய நான்கு வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், பழைய திருமுறைகள் என்று கூறப்படுவனவும், அவைகள் கூறும் அழகான பிரமன், விட்டுணு, உருத்திரன் முதலிய மும்மூர்த்திகளும், பல கடவுளர்களும், முனிவர்களும், எல்லாவிடத்தும் ஒளிவீசுகின்ற பரப்பிரமம், நால்வகை வருணங்கள், பெருகியுள்ள ஒழுக்கங்கள், புண்ணியங்கள், பூசைகள், பிதிர்களுக்குரிய சடங்குகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள் முதலியனவும், வேற்றுமையான மகாமந்திரம், கொலைபுரியாமை, மாமிசம் தின்று குற்றம் புரியாமை என்று கூறப்படுவனவும், மலைகள் உயர்ந்து விளங்கும் இம்மண்ணுலகில் எல்லாவிடத்தும் உண்டோ? என்று இழிவு கூறுவோர், பசுவின் உடம்பில் அதன்பகுதி முழுதும் குருதியும் சிறிய மடியில் நல்லவர்கள் பருகக்கூடிய அமிழ்தம் போன்ற பாலும் உள்ளது போல், சுருங்கியுள்ள இப்பாரதம் மேலானது என்று மனுமுனிவர் சொன்ன நீதியை அறியாதவர் ஆவர்.
நாள்தோறும் ஈர் ஐந்து கதலி யோன் இக்கு எனும்
நாலுஐந்தினைக் குனித்து
நடலை மலர் தூவலால் எட்டு நிகர் சடுவை நான்
நாடி மனம் மாறி நூலின்
கூடா உலர்ந்து ஏழின் நில்லாது நலிகின்ற
கோட்டாலை இரிய அருடி
கூளிகேழு நாலரையோடு அரை இருந்து அசை சூலி
கோமகள் எனத் திகழ்ந்து
வாடாத தொடர் ஆட ஓர் இரண்டு ஊர் ஒருவன்
வாமம் வதி பன்னிருகணாள்
மகிமை மலி பதினோரு முனிக்குவண் தமிழ் அருளும்
வரத ஒன்றினை உகைத்தோய்
தூள் தோணி ஆடு அலர் தூய் ஒன்று இரண்டு முனி
துதி செய்த அடிகள் அரசே
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே.
5
ஐந்திலமர்ந்து (சிம்மம்) பேய்க் கூட்டம் சூழச் செலுத்தும் சூலி எனும் தேவி அரசமகள் என்று விளங்கி, என்றும் வாடாத மாலைகள் அசைய இரண்டினைச் (விடை) செலுத்தும் சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும் பன்னிரண்டாவது (மீன்) போன்ற கண்களையுடையவள்; பெருமை மிகுந்த பதினென்றாவதான (கும்பம்) அகத்திய முனிவர்க்கு வளமான தமிழைக் கற்பித்தவனே! வரம் அருள்பவனே! ஒன்றாவதைச் (மேஷம்) செலுத்தியவனே! மகரந்தமும் தேனும் நிறைந்த புதிய மலர்களைக் கொண்டு அருச்சித்துக் காமத்தை வெறுத்துத் துதி செய்த யாழ் முனிவரின் அரசனே! திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமும் ஆகவுள்ள சுப்பிரமணியப் பரம்பொருளே! தினந்தோறம் பத்தாவதான (மகரம்) கொடியுடைய மன்மதன், ஒன்பதாவதான (தனுசு) கரும்பு என்னும் வில்லை வளைத்துத் துன்பமலர்களை என்மீது எய்வதால், எட்டாவது (விருச்சிகம்) மேல் நில்லாது நாலாவதின் (கடகம்) கூடுபோல் உடம்பு வாடி வருந்துகின்ற துன்பங்கள் ஒழியும்படி அருள்புரிவாயாக!
என்னை நீ பணி என்று எனக்கு அறிவு தந்த நாள்
எந்த நாள் அந்த நாள் தொட்டு
இந்த நாள் வரையும் உன் தன்னையே கூவினேன்
எவன் என உசாவினாய் இன்று
உன்னுடைய சமூகத்திலேனும் என் குறை எடுத்து
ஓதி அதில் அறிய எனினும்
உரியவர்கள் இல்லை எளியேன் மயங்கிட
ஒளித்த இடமும் தெரிகிலேன்
இந்நிலம் தன்னிலே நின் அறிவு கொண்டவர்கள்
எவரையும் கண்டு இறைஞ்சி
இன்ன நடை இன்னபடி என்று உணர என்றாலும்
இதுவரையிலும் கண்டிலேன்
சொன்ன மொழி விபலம் ஆகும் கொலோ அருணகிரி
சுவாமியே சுகநேமியே
சுப்பிர மதர்ப்பு அவிர் திருத்தணிகை வெற்பில் உறை
சுப்பிரமணியப் பிரமமே. 6
அருணகிரிநாதரின் கடவுளே! இன்பக்கடலே! திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள ஒளியும் ஆனந்தமும் ஆகவுள்ள சுப்பிரமணியப் பரம்பொருளே! அடியேனை நீ இனி எம்மை வணங்கு என்று கூறி அடியேனுக்கு அறிவு அளித்தருளிய நான் எந்தநாளோ, அந்த நாள் முதலாக இந்த நாள்வரையிலும் உன்னையே அழைத்தேன். நீயோ என்னை அழைப்பவன் யார்? என்று இதுவரை கேட்டாயில்லை. உனது திருமுன்பாயினும் எனது குறையை எடுத்துக் கூறிப் பதில் அறிந்துகொள்ள நினைத்தாலும், உன் திருமுன்னர் அழைத்து வரத்தக்கவர்கள் எவரும் இல்லை. அறிவில்லாத யான் மிக மயங்கும்படி நீ மறைந்துள்ள இடத்தையும் அறிகிலேன். இம்மண்ணுலகில் உனது அறிவைப் பெற்றவர்கள் எவரையேனும் பார்த்து வணங்கி இன்னமுறையில் நடத்தல், இன்ன வழியைப் பின்பற்றல் என்று அறியவென்றாலும், இதுவரையிலும் ஒருவரையும் கண்டிலேன்; நீ எனக்கு உபதேசித்த மொழி பயனற்றதாகிவிடுமோ?

