பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
1 அமரர்கோ 6
பலன் இறைதியானமும் அதன் பயனாகும் நலங்களையும் விரைவில் பெறுவதற்கு
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

அமரர்கோ

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கையைச் சடையில் பரித்து மறி மழுவம்
      கரத்தில் தரித்து ருத்ரம்
காட்டுஉழுவை அதள் அசைத்து அணிமன்றில் ஆடுகங்
        காளற்கு அபின்னம்ஆய
சங்கரி சடாதாரி சருவாணி கல்யாணி
       தற்பரி பவானி தந்த
தந்தி முகனோடு மற்று ஐந்து பெயர் நீர்மையும்
       தன் அகத்து உள தெய்வமே
மங்கையர்தம் இன்பு எனும் துன்பினை விரும்புமட
       மார்க்கத்தை விட்டு அதீதர்
வாழ்வுக்கும் வாழ்வு ஆய வாழ்வினை அளிக்கும் உன்
       மலர் அடி தியானிக்கவும்
அங்கையின் நெல்லி அம் கனி எனத் திரு அருளை
       அடையவும் கருணை நல்காய்
அருமறை புகழ்ந்த திருமுருக சிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               1

             கங்கையாற்றைத் தம் திருச்சடையில் தாங்கியும் மானையும் மழுவாயுதத்தையும் தம் திருக்கையில் ஏந்தியும், சினங்கொள்ளும் புலியின் தோலாடை அசையுமாறு அழகிய பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற கங்காள மூர்த்திக்குப் பிரிவிலாத சங்கரியும் சடாதாரியும் சருவாணியும் கல்யாணியும் தற்பரியும் பவானியும் ஆன பல பெயர்களைப் பெற்ற சத்தி ஈன்ற யானை முகனோடு பின்னும் ஐந்து பெயர்களின் தன்மையும் தன்னிடம் கொண்டுள்ள தெய்வமே! அரிய வேதங்கள் புகழ்ந்த திரு முருகனே! சிவனே! சரவணத்து ஆதியே! தேவர்தம் அரசே! மாதருடைய இன்பம் எனப்படும் துன்பத்தினை விரும்புகின்ற அறியாமை வழியை நீக்கிய துறவியர் தம் வாழ்க்கைக்கும் நல்வாழ்வான முத்தியை அளித்தருளுகின்ற உன் தாமரை மலர்போலும் திருவடிகளை அடியேன் நினைக்கவும், உள்ளங்ககை நெல்லிக்கனிபோல் எளிதில் உறுதியாகத் திருவருளை அடையவும் உனது கருணையை அளித்தருள்வாயாக.

மந்தரத்தால் அமிர்த மகரால யம் தனை
       மதித்தகால் மெய்யின் மாயம்
மருவு வனமாலி சோதரி ஆனவட்கு உரிய
       வாமம் தனைக்கொடுத்துச்
சிந்துரக் குடிலம் தயங்க அருள் நடம்இடு
       திருக்கண்ணுதற்கு மதலாய்
தீவினை தவிர்த்து அருடி திக்கு ஒருவர் இலைஎனச்
       சேவடியை நம்பி நவிரம்
உந்து உன் அபிதான மனு ஒதி நிலை மீதிலே
       ஒடி ஆடித் திரிந்தும்
உள்ளத்திலே வைத்த எண்ணத்து ஒர் எள்ளேனும்
       ஒத்து வரவில்லை என்று என்
அந்தரங் கத்திலே ஆறாத புண்ணுற்று
       அழுங்கும் எற்கு ஆர் தஞ்சமே
அருமறை புகழ்ந்த திருமுருக சிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               2.

             அரிய வேதங்கள் புகழ்ந்து கூறுகின்ற முருகப் பெருமானே! சிவபெருமானே! சரவணப் பொய்கையில் தோன்றிய முதற்பொருளே! தேவர்தம் அரசே! அமுதம் பெற மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடையும் காலத்தில், தம் உடம்பினால் மாயங்கள் பல செய்த திருமாலின் சகோதரியான உமையாளுக்க உரித்தான தமது இடப்பாகத்தைக் கொடுத்துச் சிவந்த சடை அசையத் திருவருட் கூத்தினைச் செய்யும் நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானுக்குக் குழந்தையே! என் தீய வினைகளைத் தீர்த்து அருள்புரிவாய். உன் சிவந்த திருவடிகளையே நம்பி வந்தேன். எனக்கு ஆதரவு ஒருவருமில்லை. மயில் வாகனத்தைச் செலுத்துகின்ற உன்னுடைய திருப்பெயர் மந்திரத்தை (சரவணபவ) உரைத்த வண்ணம் இம்மண்ணுலகில் ஓடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் திரிகின்றேன். அவ்வாறு திரிந்தும் மனத்தில் கொண்டுள்ள எண்ணத்துள் ஓர் எள்ளளவு கூட இசைந்து வரவில்லை என்று என் உள்மனத்தில் குணமாகாத காயம் ஏற்பட்டு வருந்தும் எனக்கு யார் அடைக்கலம்? கூறுவாயாக.

கஞ்சமலர் வதனத்தில் மஞ்சள் நிலவக் களைக்
       காவிவிழி சூழ்ந்து சுழலக்
கலவைஅணி செண்டு அமம் இரண்டு நிமிரச் செய்ய
       கைக்கங்கணம் கள் திகழ
அஞ்சம் என்னத் தெருவில் நின்று உலாவித் தினமும்
       ஆள்பிடித்திடு கணிகையர்
ஆசைகொண்டு அலையும் இவ் ஆபாச நாய்தனை
       அணைத்து அருள்கொடுக்க வேண்டும்
தஞ்சம் என்று அடைகின்ற உயிர்களுக்கு ஆதரவு
       தந்து ரட்சிக்க என்று
சாற்றிஉள வேதஆகமச் சஞ்சயங்களில்
       சாரதரம் ஆக உள்ள
அஞ்சு எழுத்து ஆறு எழுத்துக்கு இறைவ ஆதிநடு
       அந்தம் இல்லாத பரமே
அருமறை புகழ்ந்த திரு முருக சிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               3.

            அரிய வேதங்களால் எப்போதும் புகழ்ந்து கூறப்படுகின்ற அழகிய முருகப் பெருமானே! சிவபெருமானே! சரவணப் பொய்கையில் தோன்றிய முதற்பொருளே! தேவர்தம் அரசே! உன்னை அடைக்கலம் என்று அடைகின்ற உயிர்களுக்கு அன்பருளிக் காக்க என்று கூறுகின்ற வேதங்கள் ஆகமங்கள் ஆகியவற்றின் தொகுதியில் சத்தான திருவைந்தெழுத்து எனும் நமசிவாயத்திற்கும் திருவாறெழுத்தெனும் சரவணபவவிற்கும் இறைவனாக உள்ளவனே! முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளே! செந்தாமரை மலர் போன்ற தம் முகங்களில் மஞ்சட் பொடியின் பூச்சுத் துலங்கவும், அழகுடைய கருங்குவளை மலர் போன்ற கரிய கண்கள் நாலாபக்கமும் சுழன்று வட்டமிடவும், மணம் கமழும் குழம்பணிந்த பந்து போன்ற தனங்களிரண்டும் நிமிர்ந்து நிற்கவும், சிவந்த கைகளில் அணிந்த வளையல்கள் ஒளியை வீசவும், கண்டோர் அன்னம் என்று சொலும்படித் தெருவில் வந்து நின்று, இங்கும் அங்கும் ஓய்யாரமாக நடந்து நாள்தோறம் காமுகர்களை வயப்படுத்தும் விலை மாதர்கள் மீது ஆசை வைத்துத் திரிந்து கொண்டிருக்கும் இந்த ஆபாச நாயையும் உன்னுடன் சேர்த்துத் திருவருள் பாலிக்க வேண்டும்.

சனகாதி நால்வருக்கு உரைத்த முறைபோல் பரா
       சரர் மக்கள் ஆறு பேர்க்கும்
தண்ணார் பரங்கிரிக் கண்ணே தனித்து நல்
       சதுர் வேத உச்சி முடிவை
வினை தீர்த்து உணர்த்துவான் அருள் மெளன குரு என்ன
       வீற்றிருந்து ஐந்து உறுப்பால்
விளக்கி அருள் பாலித்த தண்ணளியை யார் அறிவர்
       மெய்யன்பர் அன்றி அந்தக்
கனமான காரியம் தமியேற்கும் வேண்டியே
       கை குவித்திடும் என்னை உன்
கைவிடா நட்பு வந்து என்றைக்கு மேவுமோ
       காதற்கு இயைந்த கண்ண
அனக மெய்ஞ் ஞான ஆனந்த முகிலே என்றன்
       அந்தரங்கக் களிப்பே
அருமறை புகழ்ந்ததிரு முருகசிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               4.

           சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் ஆகிய முனிவர்கள் நால்வருக்கும் மெளனயோகத்திலமர்ந்து சின்முத்திரை காட்டி ஞானத்தை உணர்த்தியருளிய முறைப்படி, பராசர முனிவர்கள் புதல்வர்களான தப்தர், அநந்தர், நந்தி, சதுர்முகர், பருதி பாணி, மாலி ஆகிய ஆறு பேர்களுக்கும் குளிர்ச்சி நிறைந்த திருப்பரங்குன்றத்தில் தனிமையில் (சிறந்த நான்கு வேதங்களின் அந்தமான முடிந்த பொருளை வினைகள் முழுதும் போக்கி உணர்த்தும் பொருட்டு), அருள் வடிவான மெளனயோகத்தில் எழுந்தருளிச் சின்முத்திரை காட்டி ஞானத்தை உணர்த்தியருளினாய், மெய்யறிவாளரன்றி இந்த உண்மையை அறியவல்லார் யார்? அந்த நிறைவான காரியம் எனக்கும் வந்துசேர வேண்டுமென்று என் கையாற் கும்பிடுகிறேன். அஃது என்று வந்து வாய்க்குமோ? அன்பிற்கு ஒத்த கண்ணாக உள்ளவனே! மாசில்லாது மெய்யறிவான பேரின்ப மேகமே! என்னுடைய உள்ளத்துள்ளே உவகையாய் உள்ளவனே! அரிய வேதங்கள் புகழ்ந்து கூறுகின்ற அழகிய முருகப் பெருமானே! சிவபெருமானே! சரவணப் பொய்கையில் தோன்றிய முதற் பொருளே! தேவர்தம் அரசே!

படிறு அற்ற ஆகமம் பகர் பொருள் ஓர் மூன்றனுள்
       பசுவினை அனாதியாகப்
பந்தித்த பாசமுடன் அப்பசுவும் மாசற்ற
       பதியுடைய செயல் இன்றியே
முடிவாக ஆயினும் குறைவாக ஆயினும்
       முரண்கொண்டு இயங்கும் கொலோ
மூடம் உறு பாச ஞானத்தானும் விடயத்தின்
       முயலுவத அலாது உன்னுடைய
அடிதேடி நிற்குமோ பசுஞானமும் தன்னை
       அறியுமோ கடினமின்று உன்
அருளான பதிஞானம் யாவையும் உணர்த்தி மெய்
       ஆனந்த வாழ்வு நல்கும்
அடிமுடி குறிக்க ஒண்ணா ஐய அதனை இவ்
       அடிமைக்கு இரங்கி அருள்தி
அருமறை புகழ்ந்ததிரு முருகசிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               5.

              அரிய வேதங்கள் புகழ்ந்து கூறிய அழகிய முருகப் பெருமானே! தேவர்தம் அரசே! குற்றமற்ற சிவாகமங்கள் கூறுகின்ற பதிபசுபாசம் எனும் மூன்று பொருள்களும் ஆன்மாவை அனாதி காலமாகத் தளைப் படுத்திய பாசத்துடன் அந்த ஆன்மாவும் மாசற்ற பதியுடைய செயலின்றியே முற்றுப் பெறவோ அல்லது குறைவாகவோ மாறுபாடு கொண்டு செயல்படுமோ! அறியாமை கொள்ளும் பாச ஞானமும் புலன்களில் முயல்வதல்லது உன்னுடைய திருவடிகளைத் தேடி நிற்குமோ! பசு ஞானமும் தன்னை அறிந்து கொள்ளுமோ! கடினம் இல்லாமல் உன்னுடைய திருவருளான பதிஞானம் ஒன்றே எல்லாவற்றையும் அறியச் செய்து உண்மையான பேரின்ப வாழ்க்கையை அளிக்கும். திருவடியும் திருமுடியும் எங்குள்ளன என எல்லை குறிப்பிட முடியாத தலைவனே! அந்தப் பதிஞானத்தை உன் அடிமையாகிய எனக்கு இரங்கியருள்வாயாக.

மூவர் மறை ஆகம புராண இதிகாச ஆதி
       முனிவரும் கணநாதரும்
முப்பத்து முக்கோடி தேவரும் பணியும் நின்
       முக்கிய பத வாரிசத்தைக்
கேவல மயக்க எளியேன் பணியவோதரம்
       கிஞ்சித்தும் இல்லை நின்தாள்
கிருபை கொண்டு உன்பதம் பெறல் சுலபம் என்று உனைக்
       கிட்டினேன் இட்டம் வைத்துத்
தீவிர தரப் பெரிய கருணை செய்து அளி அரிய
       திவ்விய மெய்ஞ்ஞான மெளன
சிவராஜயோகனே தவராஜ ராஜனே
       செப்பரிய முத்தி முதலே
அருமறை புகழ்ந்த திரு முருக சிவ சரவணத்து
       ஆதியே அமரர் கோவே.               6.

              பிரம்மா, விட்டுணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களும், இருபத்தெட்டு ஆகமங்களும், புராணங்களும், இதிகாசங்களும், தொன்மையான முனிவர்களும், சிவகணத் தலைவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்குகின்ற உன்னுடைய திருவடிகளின் கருணையைக் கொண்டு உன்னுடைய திருவடிகளைப் பெறுதல் எளிதென்று உன்னை நெருங்கினேன். அடியேன்மீது விருப்பம் கொண்டு, தீவிர தரப்பக்குவத்தை அருளும் பெரிய கருணையைச் செய்து காப்பாயாக. அருமையான தெய்வத்தன்மை பொருந்திய மெய்யறிவான மெளனத்தில் எழுந்தருளும் சிவராஜ யோகனாய் விளங்கும் பெருமானே! தவப்பேரரசனே! உயிர்களுக்குக் கடவுளே! அருணகிரி நாதப்பெருமானுக்குத் திருவருளை அளித்தருளிய குருவாய் விளங்கும் இறைவனே! அரிய வேதங்கள் புகழ்ந்துரைக்கும் அழகிய முருகப்பெருமானே! சிவபெருமானே! சரவணப் பொய்கையில் தோன்றிய முதற்பொருளே! தேவர் தம் அரசே!