நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை
முதல் மண்டலம் இசை
வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
02. | திருப்பரங்கிரி | 10 | |
பலன் | பந்தம் நீங்கி பதவருள் பெற வேண்டுமா?
|
திருப்பரங்கிரி
சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதி இடை ஈறு எனும் காலம் கடந்ததா
அகில முக்குண ரகிதமாய்
அத்துவித சைதன்னிய சுத்தபர தத்துவ
அசஞ்சல விலாச வெளியாய்
நீதியாய் நிறைகருணை ஊறு சுகவாரியாய்
நிட்கள ஆனந்த சிவமாய்
நின்ற பர தெய்வமே தொண்டர் தொழு சைவனே
நின் நாம மந்த்ரம் ஒருகால்
ஓதின் எண்ணம்போல் எவ்விடயமும் விநாடியில்
ஒதுங்காது கூடும் எனும் நூல்
ஓகையால் அத்தைநான் நாள் நாளும் ஓதியும்
உளக்கவலை ஓய்ந்ததில்லை
தீது இலோய் இதனை இப்பிறவியின் பயன் என்று
தெளிவனோ யாது நினைவேன்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே. 1
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரிமலை எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! முதல் இடை இறுதி என்னும் காலத்தைக் கடந்ததாகவும், சத்துவம், இராசதம், தாமதம் எனும் எல்லா முக்குணங்களும் அற்றதாகவும், அத்துவித அறிவான சுத்த பரம் எனும் அசைவற்ற பரவெளியாகவும், நீதியாகவும், நிறை கருணை ஊறும் இன்பக் கடலாகவும், அருவாமான சிவமாகவும் உள்ள பரதெய்வமே! தொண்டர்கள் தொழுகின்ற சிவனே! உன்னுடைய திருப்பெயரான மந்திரத்தை ஒருமுறை ஓதினாலும் நினைப்பதுபோல் எப்பொருளும் விநாடிப் பொழுதில் விலகாமல் கைகூடும் என்று நூல் கூறும் உவகையினால் அதனை நான் நாள்தோறும் ஓதியும் என் மனக்கவலை தீரவில்லை. குற்றமற்றவனே! இதனை இப்பிறவியின் பயன் என்று அறிவனோ? எதனை யான் நினைப்பேன்? கூறுவாயாக.
ஆணவ மலத்தினால் அமிழ்ந்திய பசுக்களை
அனாரதம் தன் அகத்தே
ஐக்கியம் கோடற்கு அரும் தொழில்கள் ஐந்தும் நனி
ஆற்றும் ஐம் முகனாகி நீ
மாண் உடன் நவின்ற நல் ஆகமத்து உள்ளபடி
வளர் சீவ காருண்ணியம்
வந்திடின் அடங்கா ஈச்சுவர பத்திதான்
மருவும் அதன்மேல் மாந்தர்கள்
காணரிய பாசவை ராக்கியம் உண்டாம் அஙன்
ககனம் ஓடு புவனம் எங்கும்
கரையின்றி நிறைவான பரம மெய் ஞானம் அது
கண் எதிர் உதிக்கும் என்று
சேண் உடைய சேண் நாடர் மோன மேதாவியோர்
சென்ற நெறி எற்கும் அளியாய்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
2
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! ஆணவமலத்தில் ஆழ்ந்துள்ள உயிர்களை எப்போதும் தன்னிடத்தில் ஐக்கியம் கொள்வதற்கு அருந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தனையும் நன்கு செய்யும் ஐந்து முகச் சிவனாகி, நீ மாட்சிமையுடன் கூறியருளிய சிறந்த ஆகமத்தில் உள்ளபடி நிலைபெற்ற சீவகாருண்ணியம் வருமாயின் அளவிலாத இறை பத்தி உண்டாகும். அதன் மேல் மந்ததரத்தினர் காணுதற்கரிய பாசவைராக்கியம் அங்கு விண்ணுலவகத்துடன் உலகமெங்கும் அளவின்றி நிறைவான மேலான மெய்ஞ்ஞானமது கண்ணெதிரில் உண்டாகும் என்று சேய்மை உடைய சேய்மை நாட்டார்களும் மோனர்களும், மேதாவிகளும் சென்ற வழியை அடியேனுக்கும் அளித்தருள்வாயாக.
கூடார் எனக் கணிதம் இல் உயிர் வதம் செய்த
கொடிய பவங்களும் கிரிகளும்
குற்சிதக் குழுவாய தீங்கு பலவும் அருள்
குன்றே நினைத் தொழுதபின்
ஊடாடுமோ தினமும் வாதாடுமோ சற்றும்
உணர்வு அழித்திட வல்ல நோய்
ஓயாது அடர்ந்து என் உயிர் போகாத வணம் இவண்
உஞற்றும் உளவு என்னை என்னை
வாடாத மேத்திய வியோமப் பிரகாசமே
மௌன மெய் ஞான நெறியை
வாழ்விக்கும் ஆனந்த வெள்ளமே எளியன் உள்
மனமாசு அறுத்து வினைகள்
தேடாது இருக்கவும் சீர் அடி இருக்கவும்
திருவருள் அளிக்க வேண்டும்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
3
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! பகைவர் போலக் கணக்கில்லாத உயிர்களைக் கொன்ற கொடிய பாவங்களும் பொய்களும், அருவருப்பான கூட்டமான தீமைகள் பலவும், அருள்மலையே உன்னைத் தொழுதபின்பு என்னிடம் சேருமோ! தினமும் வாதாடுமோ? சிறிதும் அறிவை அழித்திடவும் வல்லதாகிய நோயானது ஓயாது பற்றி என் உயிர் போகாத வண்ணம் இங்கு வருத்தும் இரகசியம் என்ன? அழியாத தூய ஆகாச ஒளியே? மெளன மெய்ஞ்ஞான நெறியை வாழச் செய்யும் ஆனந்த வெள்ளமே! எளியவனுடைய உள்ளே உள்ள மனக் குற்றங்களை ஒழித்து வினைகளைத் தேடாதிருக்கவும் அழகிய திருவடியில் இருக்கவும் திருவருளை அளித்தருள வேண்டும்.
மங்கள விலாச உன் செம்பொன் அடிதனை இங்கன்
மனது இரங்கித் தருவையோ
மாயக்கண் வலைவீசி மோகத்து அமிழ்த்து விலை
மாதர்கட்கு ஒப்பிப்பையோ
எங்கும் பிரகாசம் உள அன்பர் பதமலர் காண
என்று அழைத்துச் செல்வையோ
ஏறவிட்டு ஏணியை எடுப்பது கடுப்ப எனை
இடைவெளியிலே விடுவையோ
அங்கம் ஏலாம் நொந்து வம்பில் அலையாதபடி
அதி விரைவில் அருள் தருவையோ
ஆவி வெளி ஓடும் வரை நேடி அழுது அலை என்ன
வாட்டு வித்து அருள் தருவையோ
செங்குவளை மஞ்சரி கொள் மொய்ம்பு வளர் மூர்த்தியே
சிரியன் ஒருசிறிதும் அறியேன்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
4
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! மங்கள அழகனே! உன் செம்பொன் போன்ற திருவடியை இங்குத் திருவுளம் இரங்கி எனக்குத் தந்தருள்வையோ? அல்லது வஞ்சனைக் கண் எனும் வலையை வீசி மோகத்தில் ஆழ்த்தும் விலைமாதர்வசம் என்னை ஒப்பித்து விடுவையோ! அல்லது எங்கும் ஒளிவீசும் மெய்யடியார்தம் திருவடிமலரை நான் காணும் பொருட்டு என்னை அவர்களிடம் அழைத்துச் செல்வையோ! அல்லது ஏற விட்டுப்பின் ஏணியை எடுத்துவிடுவதுபோல் என்னை இடைவழியில் விட்டு விடுவையோ? அல்லது உடலுறுப்புகள் எல்லாம் துன்பமடைந்து வீணில் அலையாதபடி அதிவிரைவில் அருள் தருவையோ? உயிர் வெளியில் ஓடும்வரை என்னைத் தேடி அழுது அலைவாயாக என்று வாட்டமுறச் செய்து அருள் தருவையோ? சிவந்த குவளை மலர் மாலைகளை அணிந்த திருத்தோள்களையுடைய மூர்த்தியே! அறிவில் சிறியவனாகிய நான் ஒரு சிறிதும் அறியேன்.
கட்ட நல் பாளிதம் அணைந்து கொள அம்பனி
கதம்ப கத்தூரி என்றும்
கனதனங்களில் இடும் கச்சை பொற்சரிகைமே
கலைகள் பாவாடை என்றும்
இட்டம் உள எங்கள் குல தேவதைக்குச் சிறப்
பிட இரும்பணையம் என்றும்
எத்தி உள கைப் பொருள் தனைப் பறித்து எக்கதியும்
இல்லாது அலைந்து மடிய
விட்டுவிடும் வித்த மட மங்கையர் நவங்களை
விரும்பி நான் உழலா வணம்
வித்தகக் கடலே விவேகப் பிரகாசமே
வீவற்ற கருணை விண்ணே
சிட்டர்பரி பாலனே இட்டமுடன் என்னை உன்
திருவடி மதர்ப்பில் வையாய்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
5
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! கட்டுதற்கு உயர்ந்த வகையான பட்டுச் சேலைகள், அணிந்துகொள்ள அணிகலன்கள், வாசனைப் பொடி, கத்தூரி என்றும், கனமான தனங்களில் அணிவதற்குக் கச்சை, பொற்சரிகை என்றும், அரையில் அணி மேகலைகள், பாவாடைகள் என்றும், எங்கள் குலதெய்வத்திற்குச் சிறப்புப் பூசை செய்வதற்குப் பெரும் தொகையாகப் பணம் என்றும், ஏமாற்றிக் கையிலுள்ள பொருளை எல்லாம் பறித்து எந்த வழியுமில்லாமல் அலைந்து மடியும்படி விட்டுவிடுகின்ற இழிவான இளவிலைமாதர்கள் தரும் புதிய இன்பங்களை விரும்பி நான் உழலாதவாறு அறிவுக் கடலே! விவேக ஒளியே! அழிவற்ற கருணை ஆகாசமே! நல்லோரைக் காத்தருள்பவனே! என்னை உன்னுடைய திருவடிவளப்பத்தில் வைத்தருள்வாயாக!
கரும வழியாய் வரும் சனன வேதனையோ
கலக்கங்களில் கொடியது எனல்
கட்டாகும் அதுவோ என் ஞாபகத்து இப்போது
காண வெளிவருவது இன்று
வெருவில் வெருவு என்ன இனி வர உள்ள கொடுமரண
வேதனைக்கே என் மனம்
மெத்தப் பயந்து கவல்கின்றது இவ்விடயத்தில்
மேதினியில் உதவி செய்ய
ஒருவரால் ஆகும் கொள் என் ஐய உன்னையே
உள்ளபடி நனி நம்பினேன்
உள்கும் அடியார் பக்ஷமாய் உள்ள உனது திரு
உள்ளத்தில் எனையும் வைத்துத்
திருவருள் செலவினில் நடத்திவிடு தலை கொடாய்
தெய்வ மணி ஆன சிவமே
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
6
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! தெய்வமணியான சிவமே! வினை வழியாய் வருகின்ற பிறவித் துன்பமோ கலக்கங்கள் எல்லாவற்றிலும் கொடிய கலக்கம் எனப்படுதல் உண்மையாகும். ஆனால், அதுவோ என் நினைவிற்கு இப்போது வருவதில்லை. அச்சத்திலெல்லாம் பெரிய அச்சம் என இனி வர இருக்கும் கொடிய மரண வேதனைக்கு என் மனம் மெத்தப் பயந்து வருந்துகின்றது. இவ்விஷயத்தில் உதவி செய்ய இவ்வுலகில் ஒருவரால் ஆகுமோ? என் ஐயனே! உன்னையே உண்மையாக மிகவும் நம்பினேன். நினைக்கும் அடியார் பக்கமாய் எப்போதும் உள்ள உனது திருவுள்ளத்தில் என்னையும் வைத்துத் திருவருளை அடையச் செல்லும் பயணத்தில் நடத்தி விடுதலை கொடுத்தருள்வாயாக.
ஏதம் இல் மறைக்கு அப்புறத்ததாய் மனவாக்கு
இறப்பினில் எழும்பு நிறைவாய் எண்ணரிய பொருள்களாய் அல்லாத முதலாய்
இருந்ததை இருந்த வண்ணம்
போதமலிவால் அறிய என்று அறுவருக்கு அன்று
புரை அற்ற மௌனியாகிப்
புகலாமலே புகன்றிட்ட திருவருளினைப்
புந்தியில் சிந்தை செய்யின்
மேதினியில் எவருக்கும் நித்த நெறி கூடாது
வியன் மௌன மந்த்ர குருவே
விததகக் கடலே விகாச சைதன்னியமே
விமலமே உன் திருவடிச்
சீதம் என் சென்னியில் படியும் ஒரு நாள் வந்து
சேர இங்கு என்று காண்பேன்
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
7
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! குற்றமில்லாத வேதங்களுக்கு அப்பாற்பட்டதாய், மனம் வாக்குகள் அடங்கிய பொழுது தோன்றும் பூரணப் பொருளாய், எண்ணரிய பொருளாய், அவையல்லாத முதற்பொருளாய், இருந்ததை இருந்த வண்ணமே ஞானத்தால் அறிவிக்க என்று பராசர முனிவர் புதல்வர் அறுவர்க்கும், அன்று குற்றமற்ற மெளனியாகிச் சொல்லாமலே சென்ன திருவருளினை மனத்தில் சிந்தித்தால் இவ்வுலகில் எவருக்கு உண்மை நெறி வந்து வடாது? கூடுமல்லவா! மேலான மெளனமந்த்ர குருவே! பரந்த அறிவே! மலமற்றவனே! உன் திருவடிக் குளிர்ச்சி என் தலையில் படியும் ஒருநாள் வந்து கூட இங்கு என்று நான் காண்பேன்?
அச்சரியின் நேமி போலச் சுழன்றிடு பிறவி
ஆர்கலி கடந்து விண்வாழ்
அமரர் புகழ் நின்பதத் திருவருளும் வாழ்வையே
அடைதல் சுகம் என்று அகத்தில்
இச்சை மிக வைத்து அனுதினம் தொடர்பு செய்யும் இவ்
ஏழைக்கு இரங்கி இன்பம்
ஈயாத நிலைமையை அடிக்கு அடி நினைந்து ஐய
இன்னமும் இடுக்கணே செய்
கச்சணி முகைச்சியர்கள் மோகத்துள் ஆகி அவர்
கடைவாயில் காத்திருந்து
கைப்பொருள் இழந்து உழன்று எய்த்தபின் இக் கடம்
கம்பலைப் படர் கெழீ இச்
சிச்சைக்குள் ஆமோ எனப்பதறி நெஞ்சம்
திடுக்கிட்டு அழுங்குகிறதே
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
8
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! அச்சிலுள்ள சக்கரம் போல் மாறி மாறி வரும் பிறவி என்னும் பெரும் கடலைக் கடந்து, தேவலோகத்தில் வாழும் தேவர்கள் எல்லாம் புகழும் உன் திருவடிச் செல்வத்து நிலைபெறும் வாழ்வையே அடைதல் இன்பம் என்று என் மனத்தில் மிகுந்த இச்சை வைத்து, நாள்தோறும் உன்னுடன் தொடர்பு செய்துகொண்டிருக்கும் இந்த ஏழைக்கு இரங்கி இன்பம் ஈயாத நிலைமையை அடிக்கடி நினைத்து ஐய, இன்னமும் துன்பமே செய்யும் கச்சணிந்த தனத்தினர்கள் மோகத்திற்கு இரையாகி அவர் கடைவாயில் காத்திருந்து, கையிலுள்ள பொருளை எல்லாம் இழந்து வருந்தி இளைத்த பின்பு, இவ்வுடம்பு நடுங்கித் துன்பத்தில் பொருந்திச் சிகிச்சைக்குள்ளாகுமோ என்று பதறி மனம் திடுக்கிட்டு வருந்துகிறதே!
நஞ்சினும் கொடியது ஆய ஐந்து அலரி வாளிதான்
நாடோறும் என் அகத்தே நடலை மலர் பொழிதலால் உளம் முழுது நொந்துயான்
நைந்து நைந்தே மெலியவும் துஞ்சுபோழுது உள் நிலையில் உண்டாகும் அஞ்ஞான
சொப்பனத் தால் வெருளவும் துஞ்சுதல் ஒழிந்தபின் வாய் மதம் பேசி
சுவாமியை மறந்து உழலவும் சஞ்சலம் விளைக்கும் இகல் ஆமயம் அனேகம் ஒரு
தடையின்றி வாதிக்கவும் தன் அகம் கண்டதன்று உன் அரும் மகிழ்ச்சி ஒரு
சற்று நுகர் வுற்றதுண்டோ செஞ்சொல் மொழி பயிலும் இன் அமிர்தப் பிரவாகமே
சித்தம் வைத்து அருடி அருடி சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
9
தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! உயிரைக் கொல்லும் நஞ்சைக் காட்டிலும் கொடியதான ஐந்து மலர்களுடைய மன்மதனின் அம்பு , நாள்தோறும் என் மனத்தில் துன்பம் தரும் ஐந்து மலர்களைப் பொழிதலால் மனமுழுதும் நொந்து நைந்து நைந்து மெலிகின்றது. உறங்கும்போது மனத்தில் உண்டாகும் அறியாமையான சொப்பனத்தால் அஞ்சுகின்றேன்; உறக்கம் நீத்தபின்பு வாயால் செருக்குடன் பேசிக் கடவுளை மறந்து திரிகின்றேன்; துன்பத்தை உண்டாக்கும் அனேகவித நோய்கள் ஒரு தடையுமின்றி வாதனை செய்கின்றன. இவ்வாறு என் மனம் பல துன்பங்களை அனுபவிப்பதன்றி உனது அரிய இன்பத்தை ஒரு சிறிதேனும் அனுபவித்ததுண்டோ? இல்லையே! செம்மையான மொழி பேசும் இனிய அமிர்த வெள்ளமே! என் மீது திருவுளம் வைத்து அருள்வாயாக! அருள்வாயாக!
வெள் அறுகுளான் விண்டு விதி அண்டர் அனைவரும்
விறைப்பு உழுவலோடு பணிய வேதமுனிவோர் புகழ வெள்ளிமலை அமருமலை
வில்லிக்கு அரும்பொருள் சொன
வள்ளலே என் கவலை வாட ஒரு தந்திரம்
வகுக்க வரும் விமலா வித்தே
மறுமலர் கதம்பகத்தூரி அணி பணிபந்த
வண்ண ஏடகம் மிலைந்த
கள்ளிகள் தரும் காமவெறி ஏறி வீணாய
காலம் கழித்திடாது
கருணைபுரி பதமலர்கள் உளமிசை இருக்கக்
கருத்து ஒன்று நல்கி அருளாய்
தெள் அறிஞன் அருணகிரி உள்ளத்தில் ஒழியாது
தித்திக்கும் இன்பரசமே
சிறைப்புள் மலி கா அடர் திருப்பரங்கிரி மேவு
சேயே சிவானந்தமே.
10
தெளிந்த ஞானியான அருணகிரிநாதர் மனத்தைவிட்டு நீங்காது தோகை மயில்கள் மிகுந்த சோலைகள் அடர்ந்த திருப்பரங்கிரி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சேயே! சிவானந்தமே! ஐராவதம் என்னும் யானையை உடைய இந்திரன், திருமால், பிரமன், தேவர்கள் ஆகிய அனைவரும் நெருக்கமான பேரன்புடன் வணங்கவும், வேதம் அறிந்த முனிவர்கள் புகழவும், வெள்ளிமலை என்னும் திருக்கயிலாயத்தில் எழுந்தருளியுள்ள மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானுக்குப் பிரணவத்தின் அரிய பொருளை விளக்கியருளிய வள்ளலே! என் மனக்கவலை ஒழிய ஒரு தந்திரம் வகுக்க வரும் குற்றமற்ற அறிவே! மணங்கமழ்மலர் கதம்பம் கத்தூரிக்குழம்பு முதலிய பூசிக்கொண்டும் அழகிய அணிகலன்கள் அணிந்தும், அழகிய விலைமாதர்கள் தரும் காமவெறி ஏறி வீணாகக் காலம் கழிக்காமல் கருணைபுரியும் திருவடிமலர் என் மனத்துள்ளே இருக்கும்படி ஓர் எண்ணத்தை அளித்தருள்வாயாக.