நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை
முதல் மண்டலம் இசை
வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
32. | அயிலரசு | 10 | |
பலன் | திகைப்பு நீங்கி திருவருள் அடைவதற்கு
|
அயிலரசு
சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்துக் கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
கலிவிருத்தம் (நட்டபாடையெனும் பண்ணிலும் பாடலாம்)
திருநான் முகன் அரி நேடிய சிரமா அடி உடையோர்
குருவாகிய குகனே அருள் கூராய் என நவில் நான்
ஒரு பாதையும் அறியாது இனும் உழிதந்திடல் சரியோ
மருளாது அருள் புரிவாய் நல வலி ஆர் அயில் அரசே. 1
நல்ல வலிமை பொருந்திய வேற்படை ஏந்திய அரசே! அழகிய பிரமதேவனும் திருமாலும் திருமுடியையும் திருவடியையும் தேடினார்கள்; அவ்வாறு தேடப்பட்டும் காணமுடியாத திருமுடியும் திருவடியுமுடைய சிவபெருமானுடைய குருவாக வந்து உபதேசம் செய்தருளிய குகப்பெருமானே! எனக்கு அருள்புரிவாயாக எனச் சொல்லும் நான், ஒரு வழியும் தெரியாமல் இன்னமும் திரிதல் சரியாகுமோ? நான் அறிவு மயங்காதபடிச் செல்லுதற்கு ஏற்ற தெளிவான அறிவை அருள்வாயாக!
குழகம் திகழ் அரவம் பல குமிலம் செய் உன் அடியே
தொழுதும் துயர் அடையும்படி தொடர் ஆம் விதிவசமோ
வழு என்று உள வினை வென்றிட வரம் என்ற உவணி ஈ
மழு என்பு அணி இறை தந்த ஓர் வலி ஆர் அயில் அரசே. 2
அக்கினியையும், எலும்பு மாலையையும் தாங்கியுள்ள சிவபெருமான் (தன் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு தீப் பொறியாக) தந்த ஓர் வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! அழகு விளங்குகின்ற ஒலிகள் பரவும் பேரொளி செய்கின்ற உனது திருவடியையே வணங்கியும் துன்பம் அடையும்படித் தளையாகின்றதே! இது ஊழ்வினையின் பயனோ! குற்றம் என்கின்ற நல்வினை தீவினைகளை ஒழித்து வெற்றி கொள்ள வரம் என்னும் மழுவாயுதத்தை ஈந்தருள்வாயாக!
வன ஏனலில் ஒரு மாது உடை மயலால் வளர்தளிர் பூ
நனை மேவிடு திமிசா நிமிர் நானாகலை நிதி சூர்ப்
புனல்வாரி கடக்கும்படி அருள் ஆகிய புணை ஈ
மனபூசகர் மனமாசு அடு வலி ஆர் அயில் அரசே. 3
தியானிக்கும் அடியார்களின் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மனத்தில் தோன்றும் முக்குற்றங்களையும் ஒழிக்கும் வலிமைமிக்க வேற்படை ஏந்திய அரசே! வனத்திலுள்ள தினைப்புனத்தில் வள்ளியம்மை என்னும் குறமாதினை மணம் செய்ய வேண்டும் என்னும் விருப்பத்தால், வளரும் தளிர்களும், மலர்களும் அரும்புகளும் பொருந்திய வேங்கை மரமாக ஓங்கி நின்றவனும், பலப்பல கலைச் செல்வமும் ஆனவனே! பிறவித் துன்பம் எனும் நீர்க்கடலைக் கடப்பதற்கு எனக்கு உனது அருளாகிய தெப்பத்தை ஈந்தருள்வாயாக!
தமரும் பொருள் நிலமும் சதம் என்று உன்னை எணாதார்
அமரும் தலம் அதில் ஏழையும் அமரா நெறி கூடிக்
குமராகுக முருகா சிவகுரவா என ஓதா
மமர்தீர்கதி பெறுமாறு அருள் வலி ஆர் அயில் அரசே. 4
வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! உறவினர், செல்வம், நிலம் ஆகியவை நிலையானவை என்று பற்று வைத்து, அதனால் உன்னை நினையாதவர் தங்கும் தலமான பிறப்புத் தலத்தில் உன்னை நினைக்கும் எளியோரைத் தங்கும்படிச் செய்யாதே; அப்படித் தங்காத முத்தி வழியில் என்னை இருக்கும்படிச் செய்தருள்வாயாக! அவ்வாறு செய்து துன்பம் தீர்த்து கதியைப் பெறுமாறு அருள்புரிவாயாக!
குகன் மஞ்சு அடி பாடும் செயல் கொடு நன்கு எனக் கொண்டான்
மிகு தொந்தரைகளில் நைந்து உயிர் விடலாயினன் எனவே
சகமைந்தர்கள் சொலவும் கதி தரு நின் அருள் செயுமோ
மகிழும்படி அருளே செயும் வலி ஆர் அயில் அரசே. 5
உன்னை வழிபடும் அடியார்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளும்படி அருளையே புரியும் வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! “குகப்பெருமானது அழகிய திருவடியைப் பாடுகின்ற காரியத்தை மேற்கொண்டு இவன் என்ன நன்மை அடைந்தான்? மிகுதியான தொந்தரவுகள் உண்டாக அவற்றை நினைந்து உயிரை விட்டுவிட்டான்” என்று உலகமக்கள் சொல்லும் நல்லகதியையே தரும் உன் அருளும் செய்யுமோ?
மொழி நன்மொழியோடு ஊகமும் முயல்வும் தருவாயேல்
சுழி விண்டு இடை உழலும் சிறு துகள் போல் உக விழைவில்
பழியேன் அலையாது உன் இரு பதம் ஆம் அமுது அடைவேன்
வழிபாடு உடையார் பால் ஒளிர் வலி ஆர் அயில் அரசே. 6
உன்னுடைய திருவடிகளை வழிபடுகின்ற அடியார்களின் இதயத்தில் ஒளியோடு வீசும் வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! பேசும் சொல் யாவர்க்கும் நன்மை பயக்கும் இனிய சொல்லாகவும், நல்ல எண்ணமும், நன் முயற்சியும் நீ எனக்குத் தருவையானால், சுழித்து வீசும் காற்றின் இடையில் அகப்பட்டு வருந்தும் சிறு தூசிபோல, இந்த மண்ணுலக ஆசையினால் குற்றமுடைய நான் அலையாது உன்னுடைய இரண்டு திருவடிகளாகிய அமுதத்தை அடைவேன்.
நாவும் தளர்வு உறுகின்றது நல் தோத்திரம் நழுவ
நோவும் குடி கொளுகின்றது நுன் சிந்தை மிகாமல்
கூவின் தளை கிளர்கின்றது குரு மோனம் எழாமல்
மா இன்பு எனை எவ்வாறு உறும் வலி ஆர் அயில் அரசே. 7
வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசனே! உன்னைப் புகழும் நல்ல தோத்திரங்களை நான் சொல்லும்போது அவை விலகும்படி என் நாக்கும் தளர்ச்சி அடைகின்றது; உன்னைப் பற்றிய நினைப்பு மிகுதியாகாமல் நோயும் குடி கொண்டுள்ளது; மேலான மெளனம் தோன்றாமையால் உலகப்பற்றும் எழுகின்றது; இவ்வாறு நடந்தால் பேரின்பம் என்னை எவ்வாற அடையும்?
உடலோடு உயிர் பகை ஆயிடின் உயிர் வாழ்வதும் உளதோ
அடர் கூழொடு மதிலே முரண் ஆனால் உரு ஆமோ
அடியேனொடு நீதான் முனிவு ஆனால் உயர்வேனோ
மடல் மாமலர் முடியோய் அருள் வலி ஆர் அயில் அரசே. 8
இதழ்களுடைய சிறந்த மலர்கள் அணிந்த திருமுடி உடையவனே! வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! உடம்பிற்கு ஆதாரமாய் அதில் தங்கியுள்ள உயிரானது, அவ்வுடம்பின்மீதே பகை கொள்ளுமானால் உடம்பு உயிரோடு வாழ்வதுண்டோ? அடர்ந்த பயிரோடு வேலியே பகைத்தால் அது உருவாகுமோ! அடியேனுடன் நீ பகை கொண்டால் நான் உயர்நிலை அடைவேனோ?
நான் ஆர் என அறியா மடநாயேன் நடு உணர்வின்
கோனாம் உன்னை அறி ஆற்றலும் உளனோ குரு அருளால்
நான் ஆர் என அறியும்படி நலியா அருள் புரியாய்
வானோர் அஞர் தீர்த்து ஆள் நெடு வலி ஆர் அயில் அரசே. 9
தேவர்களின் துயரத்தை நீக்கி அடிமை கொண்ட பெரிய வலிமை மிக்க வேற்படை ஏந்திய அரசே! நான் யார் என அறியமாட்டாத அறிவில்லாத நாயானேன் நான்; சத்திய ஞானத்தில் அரசனாகிய உன்னை அறியும் ஆற்றல் உள்ளவன் ஆவேனோ? ஞானாசிரியன் அருள் உபதேசத்தால் “நான் யார்?” என அறிந்து கொள்ளும்படிக் குறைவிலாத அருளைப் புரிவாயாக!
இருள் ஆம் மலம் அறுத்து ஆயிடை எனை நீ தர அருளின்
குருவாய் வரவேண்டும் களி கூர்ந்தே கொள வேண்டும்
அருளால் உயர் தண்ணம் தமிழ் அனுபூதி அறைந்தோன்
மருமாலர் கொடு பூசை செய் வலி ஆர் அயில் அரசே. 10
உனது அருளைப் பெற்றதால் உயர்வான குளிர்ந்த அழகிய தமிழால் கந்தரநுபூதி பாடினேன், மணங்கமழ் சிறந்த மலர்களைக் கொண்டு பூசை செய்த வலிமை மிகுந்த வேற்படை ஏந்திய அரசே! இருள் மலம் என்று கூறப்படும் ஆணவமலத்தை அறுத்து, அவ்விடத்தில் என்னை அதிலிருந்து விடுதலை செய்து தர அருள் புரிய விரும்பினால் நீ ஞானாசிரியனாக வர வேண்டும்! திருவுளம் மகிழ்ந்து என்னை அடிமை கொள்ள வேண்டும்!