நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை
முதல் மண்டலம் இசை
வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
36. | எழிலார் சுரும்பு | 10 | |
பலன் | மனக் குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை பெற வேண்டுமா?
|
எழிலார் சுரும்பு
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
எழிலார் சுரும்பு கிளரோதி வாணி யிறைவன் படைக்கு முலகிற்
பழிபாவ வஞ்ச மிகவே புரிந்து படுபாவி யாகி நிதமும்
அழல்வீசு கும்பி யிடையாகம் வெந்து கவலா திருக்க வருளாய்
பொழிலார் கதம்ப விரைவீ யலங்கல் புனையந்த காரி பொருளே.
எழில் ஆர் சுரும்பு கிளர் ஓதி வாணி இறைவன் படைக்கும் உலகில்
பழிபாவ வஞ்சம் மிகவே புரிந்து படுபாவி ஆகி நிதமும்
அழல் வீசு கும்பி இடை ஆகம் வெந்து கவலாது இருக்க அருளாய்
பொழில் ஆர் கதம்ப விரைவீ அலங்கல் புனை அந்தகாரி பொருளே. 1.
சோலையில் நிறைந்துள்ள கடம்ப மரங்களின் மணம் வீசும் மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலையை அணியும் சிவபெருமானின் புதல்வனே! அழகு நிறைந்த வண்டுகள் கிளரும் கூந்தலையுடைய கலைமகளின் கணவனான பிரமதேவன் படைக்கின்ற இவ்வுலகத்தில், பழிச் செயல்களையும் பாவங்களையும் வஞ்சனைகளையும் அதிகமாகச் செய்து, பொல்லாத பாவியாகிய நான் நாள்தோறும் பசித் தீப்பற்றி எரியும் வயிற்றினால் உடம்பு எரிந்து வருந்தாமல் வாழ்ந்திருக்கும்படி அருள் புரிவாயாக!
சிவபால பைம்பொன் முடியாறு மன்னு சிகரங்கண் மின்னு மெழிலும்
துவர்வாய் துலங்கு முகமாறு மன்பு சொரிபன்னி ரண்டு விழியும்
சுவவாளு மும்பர் பகைகாது மேதி சுடர்பன்னி ரண்டு கரமும்
தவவாழ்வு பொங்க வவிர்தாளு நன்கு தரிசிப்ப தென்று தமியேன்.
சிவபால பைம்பொன் முடி ஆறும் மன்னு சிகரங்கள் மின்னும் எழிலும்
துவர்வாய் துலங்கு முகம் ஆறும் அன்பு சொரி பன்னிரண்டு விழியும்
சுவவு ஆளும் உம்பர் பகைகாது மேதி சுடர் பன்னிரண்டு கரமும்
தவவாழ்வு பொங்க அவிர்தாளும் நன்கு தரிசிப்பது என்று தமியேன். 2.
சிவபெருமானின் புதல்வனே! பசிய பொன்னாலான திருமுடிகள் ஆறும் பொருந்தியுள்ள சிரசுகள் ஒளிவீசும் அழகும், பவளம் போல் சிவந்த திருவாயுடன் விளங்கும் திருமுகங்கள் ஆறும் அன்பைப் பொழியும் பன்னிரண்டு திருக்கண்களும், தேவலோகத்தை அரசு புரியும் தேவர்களின் பகைவர்களான அசுரர்களைக் கொல்லும் படைக்கலங்கள் ஒளிவீசும் பன்னிரண்டு திருக்கைகளும், தவமான வாழ்க்கை மிகுதியாதற்கு அருளும் திறம் விளங்கும் திருவடிகளையும் அடியேன் எக்காலத்து நன்றாகத் தரிசனம் செய்வது? கூறி அருள்வாயாக!
பனியே கிளர்ந்த புவிமீது பொங்கு பசியான் மடந்தை மயலால்
அனியாய மென்னும் வழிநேடி நின்றெ னறிவே யிழந்து கெடவோ
உனைநா னினைந்து தொழுதே னகண்ட வுணர்வா யியங்கு குகனே
கனிவாய் திறந்து வருகென்று கூறொர் கரையென்று காது புகுமோ.
பனியே கிளர்ந்த புவி மீது பொங்கு பசியால் மடந்தை மயலால்
அநியாயம் என்னும் வழிநேடி நின்று என் அறிவே இழந்து கெடவோ
உனை நான் நினைந்து தொழுதேன் அகண்ட உணர்வாய் இயங்கு குகனே
கனிவாய் திறந்து வருக என்று கூற ஓர் கரை என்று காது புகுமோ. 3.
எல்லையற்ற அறிவாய் இயங்கும் குகப்பெருமானே! அதிகத் துன்பமே நிறைந்த இந்த் உலகத்தில், கொதிக்கும் பசியினாலும், மாதரின் மயக்கத்தாலும், நியாயமில்லாத வழிகளை நாடி நின்று, எனது அறிவை இழந்து நான் கெட்டுப் போகவோ, பெருமானாகிய உன்னை என் மனத்தில் நினைத்துத் தொழுதேன்? உனது செங்கனி போலும் திருவாயைத் திறந்து என்னை "என் பக்கம் வருவாயாக" என்று சொல்லும் ஒப்பற்ற சொல்லானது, ஏககாலத்தில் என் இரு செவிகளிலும் நுழையுமோ! அறிகிலனே!
கலைவாணி பத்தி மையொடே பழிச்சு மங்கை யுடைய
முலையீ மகிழ்ச்சி யமுதங் குடித்த முலையே செழித்த பழநி
மலைமீ திருக்கு மழகா வழுக்கின் மனதூ டிருக்கு மனகா
உலைவாயி லிட்ட மெழுகா யிருக்கு மெனைநீ யுகப்ப தெஙனே.
கலைவாணி பத்திமையோடே பழிச்சு கழல் வெற்பு மங்கை உடைய
முலை ஈ மகிழ்ச்சி அமுதம் குடித்த முளையே செழித்த பழநி
மலை மீது இருக்கும் அழகா அழுக்கு இல் மனது ஊடு இருக்கும் அனகா
உளைவாயில் இட்டமெழுகாய் இருக்கும் எனை நீ உகப்பது எஙனே. 4.
கலைமகள் பத்தியுடன் துதிக்கும் திருவடியுடைய மலைமகளின் திருமுலை அளித்த இன்பமான பாலமுதத்தைப் பருகிய புதல்வனே! வளமான திருப்பழநி மலைமேல் எழுந்தருளிய அழகனே! அழுக்கில்லாத மனத்துளே தங்கும் தூயவனே! உலைக்களத்தில் இட்ட மெழுகாய் இருக்கும் என்னை நீ விரும்புவது எவ்வாறு?
நிலையாய வேம மெனவோது ஞான நிருவாண மேவ நினது
நலியாத பாத மதைநாடி நாடி நலமேது மின்றென் மனது
மலையோர முய்யு மறவேடர் கையின் மறிபோன் மயங்கு கிறதே
கலிகீழ் தயாள மிதுவோ கெடாவொர் கனியே குமார முனியே.
நிலை ஆய ஏமம் என ஓது ஞான நிருவாணம் மேவ நினது
நலியாத பாதம் அதைநாடி நாடி நலம் ஏதும் இன்று என் மனது
மலை ஓரம் உய்யும் மரவேடர் கையில் மறிபோல் மயங்குகிறதே
கலிகீழ் தாளம் இதுவோ கெடா ஓர் கனியே குமார முனியே. 5.
நிலையான இன்பம் என்று கூறப்படும் ஞானத்தை அடைதற்குரிய துறவறம் மேற்கொள்ள, உனது குறையில்லாத திருவடிகளை விரும்பி விரும்பி நன்மை ஒன்றும் இல்லாமல் என் மனமானது மலைப் பக்கம் வாழும் கொடிய வேடர் கையிலகப்பட்ட மான்போல் மயங்குகிறதே! அடியார் துன்பத்தை ஒழிக்கும் உனது கருணை இது தானோ! என்றுமே கெட்டுப் போகாத ஒப்பற்ற ஞானப்பழமே! குமாரனாகிய முனியே!
கடியே றரத்த மெழினீலம் வைத்த கவினார மிக்க மிலைவோய்
செடிசே ரமித்திரர் பகைவா வுருத்திரர் சிறுவா சுவர்க்க ரிறைவா
படியா நிலத்தின் மலைபோ லளப்பில் பவமே யிழைக்க வெனவோ
வடிவான மக்க ளுருமேவி நிற்கு மகனாகி நிற்ப னிஙனே.
கடிஏறு அரத்தம் எழில் நீலம் வைத்த கவின் ஆரம் மிக்க மிலைவோய்
செடிசேர் அமித்திரர் பகைவா உருத்திரர் சிறுவா சுவர்க்கர் இறைவா
படியா நிலத்தின் மலைபோல் அளப்பு இல் பவமே இழைக்க எனவோ
வடிவு ஆன மக்கள் உருமேவி நிற்கும் மகன் ஆகி நிற்பன் இஙனே. 6.
ஒளிமிகுந்த பவளமும் அழகிய நீலக்கல்லும் பதிக்கப்பெற்ற அழகிய மாலையையும் இன்னும் பல நவமணிகளையும் மிகுதியாக அணிவோனே! குற்றம் பொருந்திய நட்பிலாதவர் பகைவனே! உருத்திர மூர்த்தியின் மகனே! சுவர்க்கலோகத் தேவர்களின் அரசனே! பகையான பூமியின் மலையைப்போல அளவில்லாத பாவங்களைச் செய்வதற்கென்றோ அழகான மக்கள் உருவைக் கொண்டிருக்கும் ஒரு மகனாக இவ்வுலகில் இருப்பேன்! கூறியருள்வாயாக!!
துடிடுண்டு டுண்டு டுடுடுண்டு டுண்டு தொகுதொந்த மென்று முரலச்
சுடுகண்ட நின்று நடனஞ்செய் நம்பர் சுதனென்று வந்த பெரியோய்
அடிகண்டு கொண்ட வருளன்பர் சொந்த மணுவும் பெறாது சிறியேன்
நடுவன்க ணின்று வருமொய்ம்பர் முன்பெ னவில்வேன்விளம்பியருளே.
துடிடுண்டு டுண்டு டுடுடுண்டு டுண்டு தொகு தொந்தம் என்று முரலச்
சுடு கண்டம் நின்று நடனம் செய் நம்பர் சுதன் என்று வந்த பெரியோய்
அடிகண்டுகொண்ட அருள் அன்பர் சொந்தம் அணுவும் பெறாது சிறியேன்
நடுவன்கண் நின்று வரும் மொய்ம்பர் முன்பு என் நவில்வேன் விளம்பி அருளே. 7.
உடுக்கையானது டுண்டு டுண்டு டுடுடுண்டு தொகு தொந்தம் என்ற தாள இசையில் ஒலிக்கச் சுடுகாட்டில் நின்று கூத்தினைச் செய்யும் சிவபெருமான் மகன் என்று கூறும்படி வந்த பெரியவனே! திருவடியைத் தரிசனம் செய்த திருவருள் பெற்ற அடியார்தம் உறவு, அணுவளவும் பெறாமல் எளியேன் இயமனிடமிருந்து உயிரைப் பிடிக்க வரும் வலிமையான தூதர் முன்னே என்ன பதில் கூறுவேன்? கூறியருள்வாயாக!
உன்மீது வைத்த நினைவான பற்றை யொருபோது மாற்ற நினையேன்
என்மீது வைத்த புரிவாமு னட்பு மிடையா திருக்க வொருகால்
என்மீது பட்ச மிலியா யெனைப்பெ ரிதுநீ மறக்க வரினும்
உன்மீது குற்ற முரையே னெனக்கு ளுணர்வாக வுற்ற குகனே.
உன் மீது வைத்த நிலையான பற்றை ஒருபோதும் மாற்ற நினையேன்
என்மீது வைத்த புரிவாம் உன் நட்பு மிடையாது இருக்க ஒரு கால்
என்மீது பட்சம் இலியாய் எனைப் பெரிதும் நீ மறக்க வரினும்
உன்மீது குற்றம் உரையேன் எனக்குள் உணர்வாக உற்ற குகனே. 8.
எனக்குள் அறிவாக இருந்து வரும் குகப்பெருமானே! உன்மேல் கொண்டுள்ள நினைவு என்னும் பற்றினை ஒரு காலத்திலும் மாற்றிக் கொள்ள நினைக்க மாட்டேன்; என்மேல் கொண்டுள்ள அன்பான உனது தோழமை நிறைவிலாதிருக்கவும், ஒருவேளை என்மேல் அன்பு இல்லாதவனாய் என்னை மறக்க நேர்ந்தாலும் உன்மேல் குற்றம் கூறமாட்டேன்!
பதிஞான மின்றி யொழியாது சன்ம நிழலென் றுணர்ந்த பரிவோர்
மதியார்க ளிந்த நிலவாழ்வை யென்றன் மடமோக மிஞ்சு மதிதான்
நிதியேது மின்றி யிதிபோல வந்த விழிவே விரும்பு கிறதால்
பதியாக வந்தி னருளே புரிந்து னடியீ குமார பரனே.
பதிஞானம் இன்றி ஒழியாது சன்ம நிழல் என்று உணர்ந்து பரிவோர்
மதியார்கள் இந்த நிலவாழ்வை எந்தன் மடமோகம் மிஞ்சும் மதிதான்
நிதி ஏதும் இன்றி இதிபோல வந்த இழிவே விரும்புகிறதால்
பதி ஆக வந்து இன் அருளே புரிந்து உன் அடிஈ குமார பரனே. 9.
பிறவி நோய் என்பது முதல்வன் அளிக்கும் அறிவையன்றி நீங்காது என்று அறிந்த மெய்யன்பர், இந்த மண்ணுலக வாழ்வைச் சிறிதும் மதிக்கமாட்டார்கள்; என்னுடைய அறியாமையாகிய அதிக ஆசையானது, மிகுதியாக உள்ள புத்தியான பொருள் ஒன்றும் இல்லாமல் வேதனை நோய் போல வந்த இழிவையே விரும்புகிறது குமாரக் கடவுளே! குருவாக வந்து இனிய அருளிச் செய்து உனது திருவடிகளை அளித்தருள்வாயாக!
கரியா னனத்த னிளையோ னெனத்தி கழுமேச கத்து ஞமலிப்
பரியோ யுனொப்பி லருளா னினைத்த படியே சுகிக்க வருண
கிரியார் தமக்கு நெடுவாழ் வளித்த கிருபாளு நித்த நினையே
பிரியாத நட்பி லடியேனை வைத்த பெரியோ யணைத்து மருளே.
கரி ஆனனத்தன் இளையோன் எனத்திகழும் மேசகத்து ஞமலிப்
பரியோய் உன் ஒப்பில் அருளால் நினைத்தபடியே சுகிக்க அருண
கிரியார் தமக்கு நெடுவாழ்வு அளித்த கிருபாளு நித்தம் நினையே
பிரியாத நட்பில் அடியேனை வைத்த பெரியோய் அணைத்தும் அருளே. 10.
யானை முகத்தோன் தம்பி என விளங்கும் விரிந்த தோகையுடைய மயில் வாகனனே! உனது ஒப்பில்லாத அருளினால் தாம் நினைத்த வண்ணமே இன்பத்தை அனுபவிக்க அருணகிரி நாதருக்கு நீண்ட வாழ்க்கை கொடுத்தருளிய கருணையாளனே! உன்னையே நாள்தோறும் பிரியாத தோழமையில் அடியேனை வைத்துள்ள பெரியோனே! உன்னில் இரண்டறக் கலக்குமாறும் அருள் புரிவாயாக!
