பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
37. திருநிறைந்த சிவம் 50
பலன்முருகனிடம் நாம் சரணடைய வழி காட்டும் பிராத்தனையை உணர வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருநிறைந்த சிவம்


அந்தாதி - கலிவிருத்தம்

திருநிறைந்த சிவம் பிரமம் பரம்
அருள் நிறைந்த அதீதன் பராபரன்
குரு நிறைந்த குகன் சம்பு என்பன
பொருள் ஒன்றாய்ப் பொலிவுற்று நிலாவுமால்.              1

மேன்மை நிறைந்த சிவம், பிரமம், பரம், அருள் நிறைந்த அதீதன், பராபரன், பெருமை நிறைந்த குகன், சம்பு என்பன ஒரு பொருளாய் விளங்கி இருக்கும்.

நிலன்இடத்தும் விண்கண்ணும் நெருப்பிலும்
உலவைக் கண்ணும் உயிர்க்கண் சுடர்க்கணும்
சலிலக் கண்ணும் நிறைந்த நின் தன்மையை
உலகில் தேர்பவர் ஆர் உனை இன்றியே.                   2.

உன்னையல்லாமல், நிலம் நெருப்பு, காற்று, நிலவு, ஞாயிறு, நீர், உயிர் ஆகிய எட்டனுள்ளும் நிறைந்துள்ள உனது தன்மையை இவ்வுலகில் ஆய்ந்து அறிவார் யார்? (ஒருவருமில்லை)

இன்று உன் ஏரடி ஏத்துதல் போலவே
என்றும் நான் செய ஏதம் இலா அருள்
குன்றில் என்னை வையாய் பகைக்கும்புஎலாம்
வென்றி கொண்ட விறல் படை வீரனே.                   3

பகைக் கூட்டத்தை எல்லாம் வெற்றி கொண்ட வலிய வேற்படை ஏந்திய வீரனே! இன்று உனது அழகிய திருவடியைத் துதித்தல்போலவே என்றும் நான் செய்வதற்குக் குற்றமில்லாத அருட் குன்றின்மேல் வைத்தருள்வாயாக!

வீரனே அடியார் துயர் வீட்டுமா
தீரனே மறை தேடு ஒரு தெய்வமே
ஈரவேல் தன்னை ஏவுதி என் உடைக்
கூரம் ஆன கொடும்பவக் காட்டிலே.                4

வீரனே! அடியார் துன்பங்களை ஒழிக்கும் பெரிய தீரனே! வேதங்கள் எல்லாம் தேடிக்கொண்டிருக்கும் தெய்வமே! என்னுடைய பொறாமை என்னும் கொடிய பாவக் காட்டிலே உன்னுடைய இரக்கமுடைய வேற்படையை ஏவி அழித்தருள்வாயாக!

காட்டுவாய் சகம் யாவையும் கையகம்
சூட்டுவாய் மிடியோர்க்கும் தொகாமுடி
ஓட்டுவாய் நமன் தன்னையும் உள்கு எனை
ஆட்டினாய் இலை ஆர் அருள் மேவவே.                      5

உலகம் யாவையும் கைக்குள் காட்டுவாய்; வறியோர்க்கும் சிறந்த முடியைச் சூட்டுவிப்பாய். இயமனையும் அருகில் வராதவாறு துரத்துவாய்; ஆனால் உன் அரிய அருள் என்னைச் சேரும்படி உன்னை நினைக்கும் என்னை ஆட்டுவித்தாயில்லை!

மேவுவோர் அறி மெய்ப்பொருள் ஏனும் நீ
தாவுளேன் காணும் சந்ததம் நின்றுஉளை
பாவி நான் அறியேன் இன்ன பண்பு எனத்
தேவனே அறியும் திறல் செய்தியால்.                 6

உன்னைச் சார்ந்தோர் அறியும் மெய்ப்பொருள் எனும் நீ, துன்பம் உள்ளவனாகிய என்னிடத்தும் நிற்கின்றாய்; இன்ன குணம் என பாவியாகிய நான் அறியேன்! தேவனே நான் அறியும் திறத்தைச் செய்தருள்வாயாக!

செய்கை ஒன்றும் இலாமல் நின் சேவடி
எய்த நெஞ்சம் இகந்து உன்னுவோர் அடி
பொய்யனேன் தரிசித்து அன்று பூத்த பூக்
கொய்து அருச்சிப்பது என்று அருள்குன்றமே.              7

உலகச் செயல் ஒன்றும் இல்லாமல், உன் சேவடி அடையத் தம் மனத்தை அடக்கி நினைப்போர் திருவடியைப் பொய்யனாகிய நான் தரிசித்து, அன்று மலர்ந்த மலர் பறித்து அருச்சிப்பது எப்போது அருட்குன்றமே!

குன்ற வில்லி குமார முன்னாள் நெடும்
குன்று எறிந்த குகா கொடும் குற்சிதக்
குன்று பீறவும் கூர் அயில் ஒச்சுதி
குன்ற வாணர் குரங்கு ஆயில் ஈசனே.                8

குன்றத்தில் வாழ்வோர் வணங்கும் வேலிறைவனே! மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானின் திருக்குமாரனே! முன்நாளில் பெரிய கிரெளஞ்ச மலையை வேலாற் பிளந்த குகனே! கொடிய அருவருப்பான எனது ஆணவமலக் குன்றைப் பிளக்கவும் உனது கூரிய வேற்படையை ஏவியருள்வாயாக!

ஈசன் வாமத்து இயங்கு உமை மைந்த நின்
ஏசு இல் அன்பர் கொன்னே கழிந்தார் எனக்
காசு இல் நூல்கள் கதைத்திடக் கண்டிலேன்
தாசன் ஏற்கும் சரண்தரல் வேண்டுமே.      9

சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியின் மகனே! உனது குற்றமில்லாத அன்பர்கள் பயன் பெறாமல் போனார்கள் எனக் குற்றமில்லாத நூல் கூறிட யான் கண்டதில்லை! ஆகையால், அடிமையாகிய எனக்கு உன் திருவடியை அளித்தருள வேண்டும்!

வேண்டுவார் துன்பு வீட்டு நின் தாள்கள் நான்
வேண்டி வேண்டி விவேகம் இலா மிடி
பூண்டு பாதகன் ஆகிப் புலம்பு நீர்
ஆண்ட நீ அறியாய் கொல் என் அத்தனே.              10

என் அப்பனே! உன்னிடம் வேண்டுவோருடைய துன்பத்தை ஒழிக்கும் திருவடிகளை நான் வேண்டி வேண்டி, அறிவில்லாமல் துன்பம் கொண்ட பாதகனாகப் புலம்பும் தன்மையை அடிமை கொண்ட நீ அறியமாட்டாயோ?

அத்தம் இல்மனை அம்புவி ஒக்கலும்
வித்தையும் விவகாரமும் வேட்கையும்
செத்திடும் செவ்வி என் செயும் தீது இலா
அத்தனே நினது அன்பு ஒன்று காக்குமே.      11

பொன்னும், வீடும், மனைவியும், உலகமும், சுற்றமும், கல்வியும் பதவியும், ஆசையும் சாகும் சமயத்தில் என்ன உதவியைச் செய்யும்? தீமையிலிருந்து காக்கும் கடவுளே! உனது அன்பு ஒன்றே அப்போது காக்கும்!

காக்கை உண்ணும் களேபரம் போல வீண்
ஊக்கத்தான் ஒழியாது அருள் ஊட்டி என்
நோக்கம் பூர்த்தி செய்வாய் ஒரு நூனம் இல்
மோக்க வேட்கையர் முன் அருள் ஐயனே.             12

குறைவிலாத மோட்ச விருப்புடையார் முன் அருள் புரியும் தலைவனே! காக்கை உண்ணும் பிணம்போல், பயனிலா ஊக்கத்தால் ஒழியாது அருள் புரிந்து என் எண்ணத்தை நிறைவு செய்தருள்வாயாக!

ஐயனே அரசே அழகார் மயில்
வையம் மீது இவர் வானவனே அருள்
மெய்யனே விறல் வேலவனே வெறும்
பொய்யனேற்கு இனிப் போக்கிடம் எங்ஙனே.                   13

தலைவனே! அரசனே! அழகு பொருந்திய மயிலில் இவ்வுலகில் ஏறிவரும் தேவனே! அருள்புரியும் மெய்யனே! வெற்றி வேலனே! வெறும் பொய்யன் ஆன எனக்கு இனிப் போக்கிடம் உன்னையன்றி வேறு எங்குள்ளது?

எங்கும் உன்பதி எங்கும் உன் நாள் சதா
எங்கும் உன் செயலாக இருந்து நான்
இங்கு வெம்துயர் ஏற்றிடல் என் கொலோ
பொங்கு எரிப் புழுப் போல வருந்தியே.            14

எங்கும் உன் இடம், எங்கும் உன் காலம், எங்கும் எப்போதும் உன் செயல், இவ்வாறிருந்தும் நான் இங்குப் பெரியதாக எரியும் தீயில் அகப்பட்ட புழுப்போல் வருந்தி இத்தகைய கொடிய துன்பத்தை அனுபவிப்பது ஏன்?

வருண உற்பன்ன மங்குல் குழீஇ நின்று
ஒரு முகத்தில் அளப்பு இன்றி ஊற்றல் போல்
அருள் முகில் திரள் என்கண் அனாரதம்
பரவி நின்று பனிப்பது எக்காலமே.           15

வருணன் தோற்றுவிக்கும் மேகங்கள் கூடி நின்று ஓரிடத்தில் அளவின்றிப் பெய்தல்போல், உன் அருளான மேகக் கூட்டம் எப்போதும் பரவி நின்று என்மீது பொழிவது எக்காலத்தில்?

காலன் மூரி கடாவிக் கணிச்சி கொண்டு
ஆலம் என்ன வந்து ஆவியும் கொள்வனோ
ஞாலத்தே உனை நாளும் குரங்கிடில்
சீலம் ஏய சிவானந்த வாழியே.               16

அழகு பொருந்திய சிவானந்தமே வாழ்க! இவ்வுலகில் உன்னை நாள்தோறும் தொழுதுவந்தால் இயமன் தன்னுடைய எருமை வாகனத்தில் ஏறிவந்து மழுவாயுதத்தால் என் உயிரையும் பிடிப்பானோ? பிடிக்கமாட்டானல்லவா?

ஆழி சங்கம் அமர்ந்த கை அண்ணலும்
நீழல் இண்டை நிலாவு அயனும் புகழ்
ஏழை பங்கன் இளம்சுத என் துரால்
கீழல் என்று அன்பர்கேள் கிளர் ஆதியே.            17

மெய்யன்பரின் உறவாயுள்ள ஒளியுடைய முதல்வனே! சக்கரம், சங்கு ஆகியவற்றைத் தாங்கிய திருக்கைகளுடைய கடவுளான திருமாலும், ஒளியுடைய தாமரை மலர் மேல் எழுந்தருளும் பிரமதேவனும் புகழ்ந்து போற்றும் உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானின் புதல்வனே! எனது துன்பத்தை அழித்தல் எப்போது?

ஆதி அந்தம் இலாப் பரமார்த்த ஒண்
சோதி ஆய உன் சுத்த சுபாவத்தைப்
பேதை பெற்று அன்றி என் ஒரு பேய்மன
வாதை தீரும் கொலோ ஐய வந்து அருள்.        18

முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளான மிக்க ஒளியாக உள்ள உன் தூய தன்மையை அறிவில்லாத நான் பெற்றாலன்றி, என்னுடைய துன்பம் தீருமோ! தலைவனே வந்து அருள்வாயாக!

அருளில் ஆம் மனுக் குப்பை எலாம் உனைக்
கருதவும் கருத்துஒட்டும் ஒர்கையும் உன்
திருவுளப் புரிவால் துதி செய்கிறேன்
இருள் இரிப்பது என்றோ அறியேன் அரோ.                  19

அருளினால் கிடைக்கும் மந்திரங்களின் கூட்டம் எல்லாம் உன்னை நினைக்கவும், எண்ணம் பொருத்தியறியும் உன் திருவுளத்தின் அன்பால் நான் துதி செய்கிறேன்; நீ இருளாகிய ஆணவமலத்தை ஒழிப்பது என்றோ? அறியேன்!

அறிவினுக்கு அறிவாய் அருவானதும்
குறி குணம் பல கூறு உருவு ஆனதும்
பொறி பொலிந்துள பொன் உலகு ஆனதும்
செறி அருட் சிறப்பு என்ப செழும் பொனே.               20

செழுமையான பொன்னே! உயிர்களின் அறிவுக்கெல்லாம் அறிவாய் அமைந்து அருவமாக இருப்பதும், பெயரும் குணமும் பலவாகக் கூறப்படும் உருவமாக இருப்பதும், அறிவு விளங்கும் தேவலோகமானதும், நெருக்கிய உன் அருளின் சிறப்பு என்று கூறுவர்!

பொன் அனந்தை பொன் பூண் மடவாள் நசை
தன்னை நாடி அழும் சகசண்டியாம்
என்னை நீ இரண்டு இன்றி அளாவு நாள்
இன்னும் தூரம் கொலோ எங்கள் ஈசனே.            21

எங்கள் கடவுளே! பொன், பூமி, பொன்நகை அணிந்த பெண் ஆசைகளை நாடி அழுகின்ற உலகத்தில், பொல்லாதவனாகிய என்னை நீ இரண்டறக் கலக்கும் நாள் இன்னும் தூரமோ?

ஈசற்கு இன்பு உள மைந்த ஒர் ஏது இலாத்
தாசற்கு இன்பு அருள் தந்தை விடாவிசு
வாசத்தால் இங்கன் வாழ்த்திப்பராவும் என்
பாசக் கோள் அறப் பார் பரதெய்வமே.            22

மேலான தெய்வமே! சிவபெருமானுக்கு இன்பமான புதல்வனே! ஓர் அயலாக இல்லா அடியார்க்கு இன்ப அருள் வழங்கினை! விடாத விசுவாசத்தால் இங்கு வணங்கித் துதிக்கும் என் பாசக் குற்றத்தை ஒழிக்கக் கருதுவாயாக!

தெய்வம் என்பது சிந்தை அடங்கினோர்
மெய்விழிக்கு வெளிச்சம் என்று ஆம் அது
பொய் இல் நிற்பவர் புந்திக்கும் எட்டும் கொல்
ஐய பொய் உழல்வேற்கு என்னை அண்முமோ.           23

தெய்வமென்பது மனம் அடங்கினோரின் ஞானக் கண்ணுக்குத் தெரியும் ஒளி என்பதாகும்! அது பொய்யில் வாழ்பவர் மனத்திற்கும் எட்டுமோ? தலைவனே! பொய்யில் உழலும் எனக்கு என்ன கிட்டுமோ?

அண்ணலார் அறிவாளர் அவாம் அருள்
கண்ணே கண்மணியே கருணாகர
விண்ணே விண்மணியே எனை மேவுஎனா
உள் நிலாவில் நண்ணேன் கொல் ஒர் உண்மையே.               24

பெரியோர், அறிவாளர் அடைய விரும்பும் அருட்கண்ணே! கண்மணியே! கருணாகரா! ஆகாசமே! சூரியனே! என்னைப் பொருந்துவாயாக என்ற ஓர் உண்மையை மனத்துள் கொண்டு நெருங்கமாட்டேனோ?

உள் நிகுஞ்ச உயிர்க்கு உயிர் ஆய என்
அண்ணலே அருள் ஆனந்த வெள்ளமே
எண்ணம் ஓய்ந்த இடத்தில் இருக்க நான்
பண்ணும் பூசை பயிற்றல் உன் பக்கமே.           25

உள்ளக் குகையில் உயிர்க்கு உயிராக உள்ள என் தலைவனே! அருள் இன்ப வெள்ளமே! நினைப்பு ஒழிந்த இடத்தில் இருக்க நான் செய்யும் பூசையைச் செய்தல் உன் பக்கமேயாகும்!

பக்கம் அற்றவர் என்றும் இப்பாழ் உடல்
புக்கு வாழ்வது இன்பு என்பர் அப்புன்மையைப்
பொக்கம் அற்ற உன் பூரணம் கோடலே
தக்கது என்று எண்ணும் நான் இனிச்சார் வனோ.      26

உன்னிடம் அன்பில்லாதவன் என்றும், இந்தப் பயனற்ற உடம்பு புகுந்து வாழ்வதே இன்பம் என்று கூறுவர்; அந்தச் சிறுமையைப் பொய்யற்ற உன் நிறைவைக் கொள்ளுதலே தக்க செயல் என்று நினைக்கும் நான் இனிமேல் சார்வேனோ?

சார்வ காலமும் உன் பெரும் தன்மையைச்
சேர்வது ஆம் ஒரு சின்மய ஆதிக்கம்
சூர நனாத சுக ஆனந்தம் என்பது இன்பு
ஆர் கலா வலர் ஆரும் அறிந்ததே.     27

சருவகாலமும் உன் பெரிய நிலையைச் சேர்வதான அறிவுமய ஆதிக்கம், துன்பம் நெருங்காத சுகானந்தம் என்ற உண்மையை இன்பம் பொருந்திய கலை வல்லுநர் யாரும் அறிந்ததாகும்!

ஆர் எனக்கு அதை அன்போடும் ஆக்குநர்
ஆர் எனக்கு அதை ஆகலை செய்குநர்
ஆர் எனக்கு அதை ஆக்குநர் என்று நான்
ஆரை நித்தம் அலட்டுகின்றேன் அரோ.       28

சுகானந்தம் என்பதை யார் எனக்கு அன்புடன் ஆக்குபவர்? யார் அதை எனக்கு ஆகாமல் செய்பவர்? அதை யார் எனக்கு ஆக்குவார் என்று நான் யாரை நாள்தோறம் கேட்டுப் பிதற்றுகின்றேன். ஐயகோ!

அரன் அன்று ஆலில் நல அந்தணர் நால்வர்கட்கு
உரனொடு ஓதலின் ஓதிய உண்மையைப்
பிரமையோடு உணர் ஓர்பு எந்தப் பேறு எலாம்
திரணமாய் நினையார் கொல் நல் தெய்வமே.        29

என்னுடைய நல்ல தெய்வமே! தக்கிணாமூர்த்தி அன்று அந்தணர் நால்வரான சனற்குமாரர் ஆகியோருக்கு ஊக்கத்துடன் மெளன ஞானயோகத்தில் சின்முத்திரை காட்டி சொல்லாமற் சொல்லிய உண்மையை, மெய்யறிவுடன் அறிவோர் உலகப் பற்றால் வரும் நன்மையெல்லாவற்றையும் துரும்பாக நினைக்க மாட்டார்களோ?

நல் தமிழ்க் கலை நாதன் என்போன் பரி
வுற்று வேண்டு மெய்ஞானம் உணர்த்தி அன்று
அற்றம் தீர்த்த அவனே அருளால் எனைப்
பெற்றிலேன் நினது அன்பினைப் பெற்றுமே.           30

நல்ல தமிழ்க் கலைகளை எல்லாம் அறிந்த அருணகிரிநாதன் போல், உன்மீது அன்புகொண்டு வேண்டியபோது அவனுக்கு மெய்ஞ் ஞானத்தை உணர்த்தி, அவனுற்ற தொழுநோய்த் துன்பத்தையும் போக்கினவனே! நான் உன் அன்பினைப் பெற்றும் உன் அருளால் என்னைப் பெற்றிலனே!

பெற்ற தாயும் பிதாவும் வெறுப்பர் ஆல்
உற்ற ஏவல் உஞற்றல் தவிர்ந்தக் கால்
இற்றை நான்செய் குறு ஏவலை இன்னது என்று
அற்றம் இல் ஐ அளித்து என்னை ஆண்டுகொள்.              31

தாம் சொன்ன கட்டளையை மக்கள் செய்யத் தவறினால், பெற்ற தாயும் தந்தையும் தம் மக்களை வெறுப்பார்கள். துன்பம் இல்லாத ஐயனே! இந்நாளில் நான் செய்யும் உன் குற்றேவலை இன்னதென்று தெரிவித்து என்னை அடிமை கொள்வாயாக!

கொண்ட கொள்கைக்கு ஒர் ஊனம் அணைந்திடாது
அண்டர் நாயகனே அருள் ஆற்றில் நீ
அண்டம் எண் திக்குமா நிறை ஆற்றலைக்
கண்டு உளம் களி கூர்வல் என் கண்ணிலே.            32

தேவர்களின் முதல்வனே! கொண்டுள்ள கொள்கைக்கு ஒரு குறைவு வந்து சேர்ந்திடாமல், உன் திருவருட் செயலால் நீ அண்டங்களின் எண் திசைகளிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை என் கண்களினால் கண்டு மனம் மகிழ்வடைகிறேன்!

கண் இலான் அரும் கல்வி கற்று என் பயன்
தண்ணீர் என்றிடில் தாகம் அடங்குமோ
விண்ணும் மண்ணும் தொழாகொல் நின் மேதகத்
தண் நலம் பெறின் தன்னிலை தன்னிலை.    33

கண் பார்வையிலாதவன் அரிய கல்வி கற்று என்ன பயன்? தண்ணீர் என்று சொல்லிவிட்டால் தாகம் அடங்கிவிடுமோ? நான் எனது நிலையில் இருந்தபடி மேன்மையான உனது குளிர்ந்த அருளைப் பெற்றால் விண்ணுலகும் மண்ணுலகும் வணங்குமல்லவா?

தன் அகம் தனில் தன் நிசம் கண்டபின்
தன்னை வேறு எனச் சாற்றவும் தாவு இலா
உன்னைத் தான் என ஒதவும் ஒவ்வுமோ
இன்னது என்று இயம்பாதது ஒன்று இன்று அரோ.          34

தன் உள்ளத்தில் ஆன்மாவாகிய தன் உண்மையைக் கண்டபின்பு தான் பாசம் என்று இதுவரை எண்ணியதை இனியும் கூறவும், குற்றமில்லாத உன்னை ஆன்மாவாகிய தான்தான் என்று கூறவும் பொருந்துமோ? இன்னது என்று கூறப்படாதது ஒன்றுமில்லை!

இன்று இவ்வாறு சொல் எண்மை உளேன் இலை
நின்று சாதித்து நெஞ்சம் ஒடுக்கிலேன்
பொன்றிடாது பொன்று இக்கதி புக்கு உய்வான்
என்று வால் அருள் நீட்டுவை எந்தையே.             35

எம் தந்தையே! இன்று இவ்வாறு சொல்லும் எளிமையுள்ளவன் நான் நிலையாக நின்று சாதனை புரிந்து மனத்தை அடக்கிலேன்; சாகாமற் செத்த மேலான கதியை அடைந்து உய்யும் பொருட்டு நீ என்று உனது தூய அருளை அளித்தருள்வாய்?

எந்தப் பூசனை செய்யினும் என் உழல்
சிந்தை ஒன்று திடப்படில் சித்தி என்று
அந்த வேதம் அறைந்திட இல்லையோ
கந்தனே கருணைப் பிரகாசமே.                 36

கந்தனே! கருணைப் பிரகாசமே! எந்தவிதமான பூசை செய்தாலும் எனது சுழன்று திரியும் மனம் என்ற ஒன்று உறுதிப்படின் சித்தியாகும் என்று அந்த வேதங்கள் கூறவில்லையோ?

காசி போந்தவரும் கறை செய்வரேல்
ஆசு இலாத பொன் நாடும் அடைவர்கொல்
ஆசையாம் புது நாடல் அகம் கெடின்
இயேசு இலாச் சுகம் எய்து அறிவு ஓங்குமே.             37

காசிக்குச் சென்று வந்தவரும் குற்றம் செய்வாரானால், குற்றமில்லாத சுவர்க்கலோகத்தை அடைவார்களோ? ஆசையாகும் புதுத் தேடலை மனம் ஒழிக்குமானால் , குற்றமில்லாத இன்பம் அடைதற்குரிய அறிவு ஓங்கும்!

ஓங்கல் ஓங்கும் சுரத்துழி ஊண் துயில்
நீங்கி மேலவர் நிட்டை பொருந்தியும்
பாங்கு அராத்தவம் பண்ணியும் நிற்கிறார்
தீங்கி னேற்கு ஒரு செய்கையும் இல்லையே.                       38

மலைகள் உயர்ந்து நிற்கும் வனத்திடை இருந்து ஊண், உறக்கம்விட்டு மேலான முனிவர்கள் நிட்டையில் நின்றும், அப்பக்கத்தில் இடையறாத தவ முயற்சியிலும் உள்ளார்; தீவினையேன் ஆகிய எனக்கோ அப்படி ஒரு நல்ல செய்கை ஏதுமில்லையே!

இல்லினைத் துறந்து எகினும் என் மனத்
தொல்லை நீங்கின் அன்றோ சுகம் எய்தும் அஃது
இல்லையேல் அங்கும் இட்டளம் தோன்றும் ஆல்
ஒல்லை எந்தை ஒடுக்கு என மனத்தையே.      39

இல்லறத்தை துறந்து துறவியாகச் சென்றாலும் என்ன பயன்? மனம் அடங்காத தொல்லை நீங்கினால் அல்லவா சுகம் தோன்றும். அஃது இல்லையானால், துறவறத்திலும் துன்பமே தோன்றும்! ஆதலால் விரைந்து என் மனத்தை அடக்குவாயாக!

மனது கூம்பின் இஞ்ஞாலம் மறைந்துபோம்
எனும் விவேகம் எற்கு ஈந்தனை இன்னமும்
எனை மறந்து எனை எய்த இழைத்தியால்
அனக பூரணம் ஆனது வாய்க்கவே.            40

மனம் அடங்கினால் இவ்வுலகம் மறைந்து போகும் எனும் ஞானத்தை எனக்கு அளித்தருளினை! இன்னமும் தூய பூரணநிலை எனக்கு உண்டாதற் பொருட்டு, என்னை மறந்து என்னை அடையும்படிச் செய்தருள்வாயாக!

வாய்க்கும் இன்பு என வாழ்த்து நின் அன்பரை
ஏய்க்குமோ இவ் இரும்சக மாயையும்
பேய்க்குணம் செய்து பேதக ஆசை தந்து
ஏய்க்க உள்ளதும் என் மன வல்கலே. 41

இன்பம் வாய்க்கும் என்று வாழ்த்தும் உன் அன்பரை இந்தப் பெரிய உலக மாயையும் ஏமாற்றுமோ? பேய்க்குணம் செய்து பேதகம் செய்யும் ஆசையைத் தந்து, என்னை ஏமாற்ற உள்ளது என் மனம் என்னும் வலிய கல்லே!

அல்லும் எல்லும் அகத்தில் உனைப் பதித்து
அல்லல் அற்று அமலானந்த பூமியின்
எல்லையைக் கண்டவர்க்கு இங்கு ஒரு செயல்
இல்லை இல்லை எனச் சொலும் வேதமே.                 42

இரவும் பகலும் மனத்தில் உன்னைத் தியானித்து, எல்லாத் துன்பமும் அந்று, குற்றமற்ற ஆனந்தத் தலத்தின் எல்லையைக் கண்டு கொண்டவர்க்கு, இவ்வுலகில் ஒரு செயலுமில்லை என வேதங் கூறும்!

வேதம் சொற்றது மெய் உறழ்வே அதைப்
போதம் அற்ற என்புன் மனத்தால் பெறற்கு
ஏதும் அற்றவன் என்று அறிவாய் நவில்
வேதமும் துணை பேணும் விசாலமே.         43

கடம்பனே! வேதம் சொன்னது மெய்யறிவே! அதை அறிவற்ற என் அற்ப மனத்தினால் பெறுதற்கு ஏதும் இல்லாதவன் என்று நீ அறிவாய்! கூறும் வேதமும் உன் துணையைப் பேணும்!

விசுவ இன்பினும் விண்ணுலக இன்பினும்
உசிதம் ஆவது ஒருங்கு உப கன்மமும்
விசமம் ஆக விடுத்து அருள் நிட்டையே
நசைஇ நின் அடி நாடி நிலைப்பதே.                   44

உலக இன்பத்தினும் தேவலோக இன்பத்தினும் செய்யத்தக்கது நல்வினை தீவினை என்னும் இரு வினைகளையும், அவை பொல்லாதவை என விடுத்து, அருள் நிட்டையே விரும்பி உன் திருவடியை நாடி நிலைபெறுவதே ஆகும்!

நிலை நிலாமை நினைந்து உதிப்பு அஞ்சியே
குலை குலைந்து குரைக்கின்றது உள்ளம் என்
தலைவன் நீ இருந்தும் தமியேன் இனம்
அலையலாம் கொல் அருள் குருநாதனே.                45

அருள் குருநாதனே! உலக நிலையாமை நினைத்துப் பிறப்பினுக்கு அஞ்சி என் மனம் மிகவும் நடுங்கி குலைகின்றது; என் தலைவன் நீ இருந்தும் நான் இன்னும் அலையலாமோ?

நாதனே உனை நாடி இருக்கையில்
சீத வேந்தனைச் சேண் புயல் மூடல் போல்
தீது எலாம் வந்து சிந்தை மொய்க்கின்றவே
நீதம் இல்லை கொல் நின் அரசில் அரோ.                     46

தலைவனே! நான் உன்னை நாடி இருக்கையில், சந்திரனைத் தூரத்திலுள்ள மேகம் மூடுவதுபோல், தீமைகள் எல்லாம் வந்து என் மனத்தையும் மொய்க்கின்றனவே! உன் அரசாட்சியில் நீதி இல்லையோ?

அரசனுக்கு அடங்காக் குடி ஏய்ப்பஎன்
இருதயத்திற்கு இணங்கி நிலாக் கொடும்
கரவு நெஞ்சமும் கண்ணும் கொலோ நினைப்
பரமனே அருள் பாலிக்க வேண்டும் ஆல்.                        47

அரசன் ஆணைக்கு அடங்கி நடவாத குடிமக்கள் போல், என் பொல்லா வஞ்ச மனமும் என் இருதயத்திற்கு இணங்கி நில்லாமல் உன்னைக் கருதுமோ? பரம் பொருளே! எனக்குத் திருவருள் புரிய வேண்டும்.

வேண்டி அன்று விசாலப் பவம்கடல்
தாண்டிக் கண்டனர் சந்தத ஞானிகள்
ஆண்ட நீ என் கண் அன்புவைத்தால் அதைக்
காண்டல் கக்கிஷமோ கருத்து ஒத்தஅரோ.              48

முன்பு எப்போதும் ஞானிகள் உன்னைத் துதித்தும் பரந்த பிறவிக் கடலைத் தாண்டி உன்னைக் கண்டனர்; என்னை அடிமை கொண்ட நீ, என்மீது அன்பு வைத்தால் அதை நான் கருத்து ஒத்துக் காணுதல் பிரயாசமோ? இல்லையன்றோ?

ஒத்த நீர்மை உறாதவர் தம் மனம்
பெத்தத்தால் உறுவாம் மெய் பிறங்கு உயிர்
முத்தருக்கு அருவாம் பரமுத்தருக்கு
அத்தன் உன் அருளால் அவை இல்லையே.                       49

ஒருமைத் தன்மையில்லாதவர் மனம் பற்றினால் உண்டாகும் உடம்பில் விளங்கும் சீவன் முத்தருக்கு அருவமாகும்; பரமுத்தருக்கு உன் அருளால் அது இல்லாமலும் இருக்கும்!

இல்லான் என் அறிவு இல்லாத பேதை போல்
நில்லாது உன் அடி ஞேயத்தில் வைத்து அருள்
அல்லல் தீர்த்து அருணைப் பெயரான் சொலும்
சொல்லிற்கு ஆசை கொடூத் திருத்தோன்றலே.       50

தூய மேலான அரசனே! வறியன், அறிவில்லாத பேதை போல் உன் திருவடியை என் அன்பில் வைத்தருள்! என் துன்பத்தைத் தீர்த்து அருணகிரிநாதர் சொல்லும் திருப்புகழுக்கு ஆசை கொடுத்தருள்வாயாக!