பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
50. போற்றி விண்ணப்பம் 10
பலன்முருகனிடம் நம் நன்றி, ஞானமொழி மூலம் வெளிப்படுத்துவது எப்படி?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

போற்றி விண்ணப்பம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயனே அரசே போற்றி அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி தூமணித் திரளே போற்றி
மெய் அருள் விளைவே போற்றி வெற்றிவேல் ஏந்து பூவன்
கையனே போற்றி எங்கள் கடவுளே போற்றி போற்றி                   1

1. தலைவனே! அரசனே! வணக்கம். அரிய வேதப் பொருளே வணக்கம். தூய்மையானவனே துணையே வணக்கம். தூயமாணிக்கக் கூட்டமே வணக்கம். உண்மை அருள் பயனே வணக்கம். வெற்றிவேலைத் தாங்கும் சிவந்த திருக்கையனே வணக்கம். எங்கள் கடவுளே வணக்கம். வணக்கம்.

போற்று விண்ணவர்கோன் போற்றி புரிதவத் தொண்டர்க்கு இன்பம்
ஆற்றுநல் அழகன் போற்றி ஆடும் அம்பரியோன் போற்றி
நீற்றினைப் புனைந்தமேனி நிலவு அருட்குன்றம் போற்றி
சீற்றம் எம் மேற்கொளா ஓர் சிவசுப்பிரமணியம் போற்றி      2

2. காக்கும் தேவலோகத்தார் அரசனான உனக்கு வணக்கம். தவம் செய்யும் தொண்டர்க்கு இன்பம் அளித்தருளும் அழகனுக்கு வணக்கம். நடஞ்செயும் அழகிய மயில்வாகனத்திற்கு வணக்கம். திருநீற்றை அணிந்துள்ள திருமேனி கொண்ட அருள் மலைக்கு வணக்கம். கோபத்தை எம்மீது கொள்ளாத ஒப்பற்ற சிவசுப்பிரமணியனுக்கு வணக்கம்.

மணி அணி மால்விரிஞ்சன் மற்று உள கணங்கள் யாவும்
பணிய நின்றவனே போற்றி பரமனே போற்றி அன்பர்
அணி அடி அலரே போற்றி ஆக்கி நன்கு அளித்து மாய்க்கும்
குணம் உடை அத்தா போற்றி குமரவேள் போற்றி போற்றி.          3

3. மாணிக்க மாலை அணிந்த திருமால், பிரமதேவன், மற்றுமுள்ள பூதகணங்கள் யாவும் வணங்கும்படி நின்றவனே வணக்கம். பரம்பொருளே வணக்கம். அன்பர் குடிகொள்ளும் திருவடி மலரே வணக்கம். படைத்து நன்கு காத்து அழிக்கும் குணமுள்ள கடவுளே வணக்கம். வணக்கம்.

போற்றி வந்து ஆளும் உன்றன் பொன் அடிக் கமலம் போற்றி
தேற்றுவார் உன்னை அல்லால் திக்கு வேறு இல்லை போற்றி
மாற்று அரும் பிறவிக் காட்டை மடிக்க மெய்ஞ்ஞானத் தீயை
ஏற்றும் எஃகு உடையாய் போற்றி எங்குறை தவிர்ப்பாய் போற்றி.           4

4.காத்து வந்து அடிமை கொள்ளும் உன்னுடைய அழகிய திருவடித் தாமரைக்கு வணக்கம். என்னைத் தெளிவிப்பார் உன்னையல்லாமல் வேறு துணையில்லை வணக்கம்! மாற்றுவதற்கு அரிய பிறவி என்னும் காட்டை அழிக்க மெய்யறிவு எனும் தீயை ஏற்றுகின்ற வேற்படையுடையவனே வணக்கம்! எம் குறையை நீக்குவோனே வணக்கம்.

பாய்நதிக் கிடையோன் வாமபாகமே கொண்டான் தன்னைத்
தாய் என உவந்தாய் போற்றி தனிப் பரஞ் சுடரே போற்றி
வீ இலாப் புத்தேள் மாதை வேட்டு மற்று ஒருத்திக்கு அன்று
நாயகன் ஆனாய் போற்றி நான்மறை முதல்வா போற்றி.          5

5.பாயும் கங்கை நதியைத் தாங்கும் சடையோனின் இடப்பாகத்தைக் கொண்டவளைத் தாய் என மகிழ்ந்தவனே வணக்கம். ஒப்பற்ற பேரொளியே வணக்கம்! இறப்பில்லாத தேவர் மகளான தெய்வானையை மணந்து மற்றும் ஒருத்தியான வள்ளியின் கணவனானவனே வணக்கம்! நான்கு வேதங்களின் தலைவா! வணக்கம்.

முதலுமாய் நாப்பண் ஆகி முடிவுமாய் நின்றாய் போற்றி
சததள பாதா போற்றி சகச்சிர நாமா போற்றி
மதிபுனை பரமனார்க்கு மதலையாய்க் குருவாய்த் தேவர்
பதி என உளவேல் போற்றி பரஞ்சுடர்க் கண்ணா போற்றி.         6

6. முதலுமாய் நடுவுமாகி முடிவும் ஆகி நிற்பவனே வணக்கம்! நூறிதழ்த் தாமரை மலர் போலும் திருவடியுடையவனே வணக்கம்! ஆயிரம் திருநாமங்கள் உள்ளவனே வணக்கம்! பிறைநிலவை அணிந்த கடவுளுக்கு மகனாகவும் குருவாகவும், தேவர்களின் தலைவனாகவும் உள்ள செவ்வேளே வணக்கம்! மேலான அக்கினிக் கண்ணனே வணக்கம்!

கண்ணுமாய்க் கருத்தும் ஆகிக் காண் எழில் எந்தை போற்றி
விண்ணுமாய் மண்ணும் ஆகி விளங்கு அருள் தேவே போற்றி
பண்ணவர்க்கு அருளத் தண்ட பாணியா நின்றாய் போற்றி
தண் அருள் கடலே போற்றி சதுர் முகற்கு இறைவா போற்றி      7

7. கண் பார்வையாகியும், நினைப்பாயும் விளங்கும் அழகிய எம் தந்தையே வணக்கம்! தேவலோகமாகவும் பூவுலகமாகவும் விளங்கும் அருள் இறைவனே வணக்கம்! முனிவர்களுக்கு அருள்புரியத் தண்டபாணியாக நின்றவனே வணக்கம்! குளிர்ந்த அருட்கடலே வணக்கம்! இறைவனே வணக்கம்!

இறைவனே போற்றி ஆதி எந்தையே போற்றி வேலுக்கு
இறைவனே போற்றி நீப இணர் அணி சிவனே போற்றி
மறைபுகல் அறிய எங்கண் மாதவ மணியே போற்றி
குறைவு அறு நிறைவே போற்றி குளிர்சிவக் கொழுந்தே போற்றி       8

8. இறைவனே வணக்கம். ஆதியான எம் தந்தையே வணக்கம். வேற்படைக்குத் தலைவனே வணக்கம். கடம்ப மலர் மாலை அணியும் அறுமுகச் சிவனே வணக்கம். வேதங்கள் புகழ்ந்து கூறும் அரிய எங்களுடைய பெருந்தவமுடைய மாணிக்கமே வணக்கம். குறைவில்லா நிறைவே வணக்கம். குளிர்ந்த அருளுடைய சிவனுடைய குமாரனே வணக்கம்.

கொழுமையில் குளிர்மை போற்றி குக்குடக் கொடியாய் போற்றி
குழுமிய சிவகணங்கள் கும்பிடும் கழலாய் போற்றி
தொழுபவர்க்கு அருள்வோய் போற்றி சுந்தர போற்றி என்னை
முழுதும் ஆள்பவனே போற்றி மோனநாயகனே போற்றி       9

9. கொழுமையில் குளிர்ச்சியாய் உள்ளவனே வணக்கம். கோழிக் கொடியானே வணக்கம். கூடியுள்ள சிவகணங்கள் கும்பிடும் திருவடியுடையவனே வணக்கம். வணங்குவோர்க்கு அருள்பவனே வணக்கம். அழகனே வணக்கம். என்னை முழுவதுமாக அடிமை கொண்டுள்ளவனே வணக்கம். மெளனமான தலைவனே வணக்கம்.

நாயகம் ஆனார்க்கு எல்லாம் நாயகம் ஆனாய் போற்றி
தாய் என வருவாய் போற்றி சண்முகத்து அரசே போற்றி
தீ அரிப் பெயரோர்க்கு அன்று தெய்வமும் குருவும் ஆன
நீ எனைக் கலந்து ஆள் போற்றி நித்தனே போற்றி போற்றி      10

10. தலைமையானவர்க்கெல்லாம் தலைமையுடையவனே வணக்கம். தாய்போல் வருபவனே வணக்கம். சண்முகத்து அரசே வணக்கம். நெருப்புமலைப் பெயருடையவரான அருணகிகிநாதருக்கு அன்று தெய்வமாகவும் ஞானோபதேசம் செய்யும் குருவுமாகவும் உள்ள நீ. என்னை இரண்டறக் கலந்து அடிமை கொள்வாயாக வணக்கம் நித்தனே வணக்கம். வணக்கம்.