பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
51. சரண விண்ணப்பம் 10
பலன்முருகனின் திருவடியில் உனக்கு அடைக்கலம் வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

சரண விண்ணப்பம்

அந்தாதி
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தனே சரணம் எங்கள் ஆதியே சரணம் தூய
சித்தனே சரணம் சைவ தெய்வமே சரணம் ஞான
முத்தனே சரணம் மோன முனிவனே சரணம் வேத
வித்தகா சரணம் என்னை வெளிப்படக் காட்டுவாயே.   1

அப்பனே! உனக்கு அடைக்கலம். எங்களுடைய ஆதி கடவுளாக உள்ளவனே உனக்கு அடைக்கலம். தூய்மையான அறிவானவனே உனக்கு அடைக்கலம். சைவசமயத் தெய்வமாக விளங்கும் உனக்கு அடைக்கலம், ஞானமும் முத்தியுமானவனே உனக்கு அடைக்கலம். மெளன முனிவனாக உள்ளவனே உனக்கு அடைக்கலம். வேதங்களை அளித்த அறிவானவனே உனக்கு அடைக்கலம். என்னை நன்கு அறிந்துகொள்ளும்படி காட்டியருள்வாயாக.

காட்டிய உலகு யாவும் காக்கு நின் அருளில் என்னைக்
கூட்டி ஆட்கொள்ளும் எங்கோனே குமரனே சரணம் நீபம்
சூட்டு அகல் மார்பா உள்ளத் துய்யனே சரணம் மோக்க
வீட்டை ஆள்வானே அந்த வீடு எனக்கு ஆக்கிடாயே.           2

நீ தோற்றுவித்த உலகங்கள் யாவும் காக்கும் உன் அருளில் என்னைச் சேர்த்து அடிமைகொள்ளும் எம் அரசனே! குமரனே! அடைக்கலம். கடம்ப மாலையை அணியும் அகன்ற திருமார்புடையவனே! உள்ளத் தூய்மையுடையவனே! மோட்ச வீட்டை ஆள்பவனே! அந்த வீடுபேற்றை எனக்கு ஆக்கியருள் வாயாக.

ஆக்கை பொய் உறவு ஆம் என்று உன் அடைக்கலம் புகுந்த என்னைக்
காக்க இந்நாள் இழுத்த கருத்தனே சரணம் நீறு
பூக்கும் ஆதார தேவ புனிதனே சரணம் வேத
வாக்குடை அடிகேள் ஆள வருவது தருணம் தானே.             3

இந்த உடம்பு பொய்யான உறவாகும் என்றுணர்ந்து உனக்கு அடைக்கலமான என்னைக் காக்க, இந்நாளில் உன் பக்கம் இழுத்துக்கொண்ட கருத்தனே உனக்கு அடைக்கலம். திருமேனியில் திருநீற்றுப் பொலிவுடைய ஆதாரமான கடவுளே! புண்ணியனே! அடைக்கலம். வேதவாக்கினை அளித்த கடவுளான நீ என்னை அடிமைகொள்ள வருவது இக்காலமேயாகும்.

தருணமும் அறிந்து எனது தன்மையும் உணர்ந்து நல்ல
அருள் நலம் அளிக்கும் எங்கள் ஐயனே சரணம் வேத
உருவனே சரணம் ஆதி ஒருவனே சரணம் நாளும்
முருகனே சரணம் மோன முனிவனே சரணம் மன்னோ.      4

தக்க காலமும் அறிந்து எனது பக்குவ நிலையும் அறிந்து, நல்ல அருளான நன்மையை அளிக்கும் எங்கள் தலைவனே அடைக்கலம். வேதவடிவானவனே அடைக்கலம். ஆதியான ஒருவனே அடைக்கலம். தினமும் முருகனே உனக்கு அடைக்கலம் மெளன முனிவனே அடைக்கலம்.

சரணம் நின் சரணம்நானே சரவணபவனே சன்ம
மரணமும் அளவும் இல்லா மழவனே சரணம் ஆதிப்
பிரணவம் அருளும் மூலப் பிரமனே சரணம் ஆறும்
மருவிய பொருளே என்னை மனம் உவந்து                                                                          ஆண்டுகொள்ளே.  5

அரசே! உனக்கு நான் அடைக்கலம். சரவணபவனே பிறப்பும் இறப்பும் அளவுமற்ற இளையோனே அடைக்கலம். ஆதியான பிரணவ மந்திரத்தை அருளிய மூலப்பிரமமே அடைக்கலம். ஆறு குணங்களும் பொருந்திய பொருளே! என்னை மனமகிழ்வுடன் அடிமை கொண்டருள்வாயாக.

கொள்ள என்று அகத்தியற்கும் குயிற்று அரும் புகழால் சீர்த்தி
அள்ள வந்தவற்கும் ஓதும் ஐயனே சரணம் எங்கள்
வள்ளலே சரணம் மூல மறையவ சரணம் என்னைத்
தள்ளி வந்து ஆண்டு கோடி தாவுடைப் பிழை பொறுத்தே.        6

ஞானத்தைக் கொள்ள வேண்டுமென்று அகத்திய மா முனிவருக்கும், சொல்லற்கரிய திருப்புகழால் கீர்த்தியை அள்ள வந்தவரான அருணகிரிநாதருக்கும், ஞானத்தை ஓதிய தலைவனே! உனக்கு அடைக்கலம். எங்கள் தற்பயன் கருதாத வள்ளலே அடைக்கலம். மூல வேதியனே! அடைக்கலம். என் குற்றமான பிழைகளைப் பொறுத்து என்னைப் புறக்கணித்துவிடாமல் அடிமை கொண்டருள்வாயாக.

பிழை பொறுத்து ஆளற்கு ஆய பெற்றியே சரணம் நட்பை
மழை எனப் பொழிவிலாச வானமே சரணம் என்கண்
நுழை மதிச் செறிவாய் ஓங்கு நுட்பமே சரணம் கோலத்
தழை உடைச் சிகியில் ஊரும் சண்முகா சரணம் நானே. 7

என் குற்றங்களை மன்னித்து அடிமை கொள்ளும் தன்மையனே அடைக்கலம். நட்பை மழைபோலப் பொழியும் அழகிய வானமே அடைக்கலம். என்னிடம் அறிவுச் செறிவாய் உயரும் நுண்மையே அடைக்கலம். அழகிய தோகையுடைய மயில் வாகனத்தில் செல்லும் சண்முகனே நான் அடைக்கலம்.

நான் எனது எனல் தாம் ஓய நல் அருள் காட்டும் இன்ப
வான நாயகனே உன்றன் மலர் அடி சரணம் சாம்பி
ஈனமா நெறி நான் சென்றால் எதிர்நின்று தடுத்து ஆள் கோடற்கு
ஆன சேய் சரணம் ஆசில் அம்கணா சரணம் காணே.  8

நான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் ஒழியும்படி, நல்ல அருளை வழங்கும் வடிவான விண்ணுலகத் தலைவனே உன்னுடைய மலர்போலும் திருவடிக்கு அடைக்கலம். மனம் வாடி இழிவான பெரிய தீயவழிகளில் நான் சென்றால், முன்னின்று அவ்வாறு செல்லாமல் தடுத்து அடிமை கொள்வதற்கான சேயே அடைக்கலம். குற்றமிலா அழகிய திருக்கண் உடையவனே அடைக்கலம்.

காணும் என் தந்தாய் வேதகதி நெறிக் கந்தா ஏமப்
பூணும் உற்பலமும் பூணும் புயத்தனே சரணம் பூ ஆர்
வாள் நுதல் வள்ளி எம் தாய் மணமுதால் சரணம் என்னைப்
பேணப் உள்படர்ந்து இவ்வாறு பிதற்றி நான் நிற்கின்றேனே.     9

என்மீது திருக்கண்ணோக்கம் செய்யும் எனது தந்தையே! வேதம் கூறும் யோக வழிக்குரிய கந்தவேளே! திருநீறெனும் அணிகலத்தையும் செங்குவளை மலர் மாலையையும் அணிந்த திருத்தோள்கள் உடையவனே உனக்கு நான் அடைக்கலம். அழகுடைய ஒளி பொருந்திய நெற்றியுடைய வள்ளியம்மையாகிய எம்முடைய அன்னையின் மணவாளனே உனக்கு நான் அடைக்கலம். என்னை நீ பாதுகாக்கும்படி மனத்தில் நினைத்து நான்இவ்வாறெல்லாம் பிதற்றி நிற்கின்றேன்.

நிற்கும் என் உருவைக் காட்டி ஞேயமோடு அருளில் கூட்டிச்
சிற்பரம் அளித்தி தேவ தேவனே சரணம் நாளும்
பொற்பதம் விழைவார்ப் போற்றும் புண்ணியா சரணம் எம்மான்
அற்புத அருணைப் பேரான் அத்தனே சரணம் அன்றே.   10

உன் முன்னால் அடிமையாக நிற்கும் என் ஆன்மா இன்ன உருவெனக் காண்பித்து, அன்புடன் உன் திருவருளைப் பதியச் செய்து அறிவான பரப்பிரமத்தை அளித்தருள்வாயாக. தேவர்களுக்கெல்லாம் மேலான தேவனே உனக்கு அடைக்கலம். நாள்தோறும் உன்னுடைய அழகிய திருவடிகளை விரும்பும் அடியார்களைக் காத்தருளும் புண்ணியனே உனக்கு அடைக்கலம். அற்புதமான திருவருணையைத் தம் பெயராகக் கொண்ட அருணகிரிநாதப் பெருமானாகிய எம் தெய்வத்திற்கு அப்பனே உனக்கு அடைக்கலம்.