பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
05. திருவேரகம் 10
பலன்இறைவனால் ஆட்கொள்ளப் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருவேரகம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

சீர்மல்கு வாதுளச் சுருதி நுவல் வண்ணம்
       சிறப்புள்ள பிரதம மகா
சிருட்டியின் மகேசுரர் உளக் கமலம் அதில் நின்று ஒர்
       திவ்விய பிரமக் குழவியாய்
ஏர்மல்கு தேவர் தொழ வெளி வந்து அவ்ஈசுரர்க்கு
       இனிய சுதனாய் நின்று மேல்
இடை இடை மகாவிறல் உருத்திரர் பெருமானால்
       இழைக்கின்ற வெகுவினோதச்
சார்மல்கு அவாந்தர சிருட்டியில் சீகண்டர்
       தன குமரன் என்ன வந்து
சத்ய சன்மார்க்க அடியாரைப் புரந்து அருள்
       சதாசிவப் பொருளே துரால்
வேர்மல்கு அகங்கார விடபியா நிற்கும் எனை
       மெய் அடியில் வைக்க நினைதி
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      1

             வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! சிறப்புமிக்க வாதுள ஆகமம் கூறும் வண்ணம், சிறப்புள்ள முதல் மகா சிருட்டியில் மகேசுரர் உள்ளத் தாமரையிலிருந்து தெய்வத்தன்மையுடைய பிரமக் குழந்தையாய் அழகுமிகுந்த தேவர்கள் வணங்க வெளித்தோன்றிய அந்த ஈசுரனுக்கு இனிய மகனாயிருந்து, அதன்மேல் இடையில் மிக்க வலிமையுடன் உருத்திரர் பெருமானால் செய்யப்பட்ட மிக்க வினோதம் பொருந்திய அவாந்தர சிருட்டியில் சீகண்ட பரமசிவனாரின் குமாரனாகத் தோன்றிச் சத்திய ஞானமார்க்கத்தைப் பின்பற்றும் அடியாரைக் காத்தருள்கின்ற சதாசிவ மூர்த்தியே! துன்பம் என்னும் வேர்கள் மிகுந்த ஓர் அகங்கார மரமாய் நிற்கும் என்னை உனது மெய்த் திருவடியில் வைக்க நினைத்தருள்வாயாக!

தந்திரம் மிழற்று சிவசதாக்கியமும் நல்
       சதாசிவமும் ஈசானமாய்த்
தா அறும் அமூர்த்தி சாதாக்கியமும் ஈசனும்
       சத்தியோ சாத முகமாய்
வந்தனைகொள் மூர்த்தி சாதாக்கியமும் பிரம ஈச
       னும் தளிம வாம முகமாய்
மாசு தீர் கர்த்திரு சாதாக்கியமும் ஈசுரனும்
       வளர்தென் அகோர முகமாய்
இந்திரக் கன்ம சாதாக்கியமும் ஈசான
       விசையனும் தற்புருடமாய்
இகல் இல் மாசாதாக்கியமும் அந்த மூர்த்தியும்
       இயைந்த ஒர் அதோ வதனமாய்
விந்தை தர நீ வடிவு கொண்ட முறை உயிர்களின்
       மேல் வைத்த கருணை அன்றோ
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      2

            வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! ஆகமம் கூறும் சிவசாதாக்கியமும் முதல் சதாசிவமும் ஈசான முகமாகவும், குற்றமற்ற அமூர்த்தி சாதாக்கியமும் ஈசனும் சத்தியோசாத முகமாகவும், வணக்கம் கொள் மூர்த்திசாதாக்கியமும் பிரமீசனும் அழகிய வாம முகமாகவும், குற்றமில்லாத கர்த்திருசாதாக்கியமும் ஈசுரனும் நிலைபெற்ற தென்முகமான அகோர முகமாகவும், தலைமையான கன்மசாதாக்கியமும் ஈசான விசையனும் தற்புருட முகமாகவும், ஒப்பில்லாத மாசாதாக்கியமும் அதன் மூர்த்தியும் பொருந்திய ஓர் அதோ முகமாகவும், விந்தை தோன்ற நீ வடிவு கொண்டது உயிர்களின் மீது வைத்த கருணை அல்லவா!

பெரிதாய புவனகாரியம் நிமித்தம் கிரியை
       பேதுஅற்ற ஞானம் இச்சை
பிரபாவ ஆதி அம்பரை என்னும் நாமம்
       பிறங்கு ஐந்து சத்திகளுடன்
அரிது ஆய சிற்சக்தி கூடினால் ஆறாகும் இவ்
       ஆறுமே உனது அங்கமாய்
அவிர் ஆளி அறியாத வாதிகட்கு உன்தன்மை
       அறிவதற்கு எளிதோ வழா
உரிமைகெழு ஞானமும் உலப்பு அற்ற கிரியையும்
       உறங்கு உயிர்கள் கண்ணில் வளர்வான்
உணர்வு கிளர் தெய்வயானை வள்ளி எனும் இருவரையும்
       உபய பக்கத்து அமர்த்தி
விரிவு ஆய கருணையொடு இருக்கும் என் அப்ப என்
       விண்ணப்பம் அங்கிகரியாய்
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                     3

             வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! மிகப் பெரிதான உலக காரியத்தின் பொருட்டுக் கிரியாசத்தியும் வேற்றுமையற்ற ஞானசத்தி, இச்சா சத்திகளும், பெருமை பொருந்திய ஆதிசத்தியும் அழகிய பராசத்தியும் என்னும் பெயர்கள் விளங்கும் ஐந்து சத்திகளுடன், அரிதான சிற்சத்தியும் சேர்ந்தால் சக்திகள் ஆறாகும். இங்கு அந்த ஆறு சக்திகளுமே உனது திருவுருவாய் விளங்க உள்ளவன்; இந்த உண்மை அறியாத வாதிகட்கு உனது தன்மை அறிந்து கொள்ளதற்கு எளிதாகுமோ! குற்றமில்லாத உரிமை பொருந்திய ஞானத்தையும் அழியாத கிரியையும் உறங்கும் உயிர்களின் கண்களில் காட்டியருளும் பொருட்டு, அறிவு விளங்கும் தெய்வயானை, வள்ளியம்மை என்னும் இருவரையும் தம் இருபக்கத்தில் அமரச் செய்து பரந்த கருணையுடன் விளங்கும் என் அப்பனே! என் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வாயாக!

எவ் உயிரும் எம் உயிரில் உள என்னும் உண்மைதனை
       யாவரும் உணர்ந்து உய்யுமாறு
இகல் பெற்ற விசயன்கை வில் அடியினாலும் நல்
       எழில் உற்ற அரிமர்த்தனன்
வவ்விய அணிப்பிரம்பு அடியானும் அறிவித்த
       மாதேவன் ஆனா பெரியோன்
மல உயிர்த் தொகைகளுக்கு உரிய அனுபவம் நன்கு
       மல்க என்று உமையை வாம
சவ்வியத்து ஐக்கியம் செய்தனன் அம் முறைமை உன்
       சண்முகத்து ஒன்றாகவே
சார்ந்து நிற்கக் கொண்ட கோல நிலை ஓராத
       சதியர்க்கும் எற்கும் இந்நாள்
வெவ்வினை விவாதவிளை எத்தனைகொல் எத்தனைகொல்
       வித்தகப் பத்தர் பதியே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      4

             வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! ஞானமுடைய பக்தர்களின் தலைவனே! எந்த உயிரும் எம்முடைய உயிரினுள் உள்ளன என்னும் உண்மைய எல்லோரும் அறிந்து பிழைக்கும்படி வலிமையுடைய விசயன் கைவில் அடியாலும், அழகிய அரிமர்த்தன பாண்டியன் பிடித்த அழகிய பிரம்படியாலும் அறியச் செய்த மகாதேவனான பெரியோன் மலத்தொடர்புடைய உயிர்க் கூட்டங்களுக்கு உரிய அனுபவம் நன்கு பெருக வேண்டும் என்று உமாதேவியை இடப்பக்கத்தே ஐக்கியம் செய்தருளினன். அம் முறைமை உன் சண்முகத்தில் ஒன்றாகவே பொருந்தியிருக்கக் கொண்ட திருக்கோல நிலையை உணராத சதிகாரர்களுக்கும் எனக்கும், இந்நாளில் கொடிய செயல்களும், வாக்குவாத விளைவுகளும் எத்தனை? எத்தனை?

எம்முடைய வடிவினில் புராதனக் கோலமே
       இக்குழவி ஆயது என்றும்
எமக்கும் இம்மூர்த்திக்கும் எக்காலும் ஒரு பேதம்
       இன்று இந்த மூர்த்தி தன்னைத்
தம்முடைய புந்தியில் சுரதிநனி போற்றினோர்
       தாழ்வு அற்ற சீரும் அறிவும்
சாயுச்சிய பதவியும் பெற்று உய்வர் என்றும் அச்
       சம்புவே வாய் மலர்ந்து அன்று
உம் என்னும் அக்கரத்தால் உமை எனப் பெயர்
       உறும் பரைக்கு உரை செய்ததை
ஓதும் உயர் காந்தமும் இவ் உண்மை உணராதவர்க்கு
       ஓதில் இதை என் விவாத
வெம்மை அற்று ஒண்மை உணர்வாம் விபுதர் அறிகின்ற
       மெய்ப்பரம் சோதிவடிவே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      5

              எம்முடைய வடிவினில் பழைமையான வடிவமே இந்த அறுமுகன் என்னும் குழந்தையாகத் தோன்றியுள்ளதென்றும், ஆகையால் எனக்கும் இம் மூர்த்திக்கும் எந்தக் காலத்திலும் ஒரு வேறுபாடு இல்லை என்றும், இம்மூர்த்தியைத் தம்முடைய மனத்தில் எண்ணி நன்கு துதிப்போர் தாழ்வில்லாத சிறப்பும் அறிவும் சாசியுச்சிய பதவியும் பெற்றுய்வர்; இவ்வாறு அச்சிவபெருமானே உம் என்னும் எழுத்தால் உமை எனப் பெயர் பெற்றுள்ள மேலான பராசக்திக்கு உரைத்ததை மகாஸ்காந்தமும் கூறும். தருக்கம் என்னும் காயத்லற்று உயர்ந்த அறிவுடைமையை அறிஞர் அறிகின்ற மெய்யான பரஞ்சோதி வடிவே! வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! உயர்ந்த மகாஸ்காந்தம் கூறும் உண்மையை உணராதவர்க்கு ஓதி என்ன பயன்?

கோது அற்ற நிருவாண தீக்கையின் மூப்பு இளமை
       கொள்ளமுறை இல்லை பொல்லாக்
கோணைதெறும் அந்த உயர்தீக்கை இம்மூர்த்திமுன்
       கோடல் எளிது ஆகும் என்று
தீது உற்ற உயிர்கட்கு உணர்த்திடு நிமித்தமும்
       செறிஅருளின் மேல் நுவன்ற
செயல் நனி விருத்தியுற என்று முக்கண்பரன்
       சிஷ்யபா வஞ்செய்த ஒர்
நீதத்தை உணராத உணர்வும் உனை அறியுமோ
       நிகர்அற்ற இன்ப அன்பே
நித்தபரி பூரண அகண்ட சிவ நிட்டையில்
       நிலாவுஏக பரமசாம
வேதத்திலே சுப்பிர மணியோம் எனக்கிளறரு
       மெய்ம்மொழிக்கு உரிய பொருளே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      6

            தனக்கு ஓர் நிகர் இல்லாத இன்ப அன்பே! நித்தியமான முழுமையான நிறைவுடைய எல்லையற்ற சிவபரம்பொருளை நினைந்து நிட்டை கூடும்போது, அந்நிட்டையில் விளங்கும் ஏகனே! பரமனே! சாம வேதத்தில் சுப்பிரமணியோம் எனக் கூறப்படும் மெய்ம் மொழிக்கு உரிய பொருளே! வீரம் உள்ள தேவர்களுடைய முனிவர்களும் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தரளியுள்ள வேளே! குற்றமற்ற நிருவாணதீக்கையில் முதுமை என்றோ, இளமை என்றோ பருவங்கள் இல்லை. பொல்லாத கேட்டினை அழிக்கும் அந்த மேலான தீக்கை, இம்மூர்த்தி முன்னே கொள்ளல் எளிதாகும் என்று தீமையுற்ற உயிர்களுக்கு அறிவித்திடும் பொருட்டும், நெருங்கிய அருளின் மேற்சொன்ன செயல் நன்கு வளர வேண்டும் என்றும் முக்கண் பரமனான சிவபெருமான் மாணவபாவம் செய்தவோர் நீதியை உணராத அறிவும் உன்னை அறியுமோ?

எங்கணும் இருந்து மறைவு ஆய பரவத்துவை
       என்றுதன் அனுபவத்தில்
எய்த ஒருவன் கூடி அறிவனோ அப்பொழுது
       எழும்பும் ஆனந்தவடிவே
சங்கரன் சுதன் ஆன சிவ சுப்பிரமணிய பிர
       சந்நம் என்று அறிவர் அறிஞர்
சாற்றும் இப்பொருள் நிட்கள அதீத உண்மையைச்
       சாரும் என நானும் அறிவேன்
மங்கள குணாள குக இத்தீர்வை பற்றி இலை
       மறைகாய் எனக் கணித்து
வழுத்துவது அலாது உன்னை நூதனம் எனப் பன்ன
       வாய் இல்லை சிறுவரையும் ஆல்
வெங்கண் அரவச் சிரசு அழுங்க நடம் ஆடு சிகி
       மேல் நிலவு மாணிக்கமே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      7

             கடுங்கண்களுடைய பாம்பான ஆதிசேசன் தலைகள் அபந்த நடனமாடும் மயில் வாகனத்தில் எழுந்தருளிவரும் மாணிக்கமே! வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தரளியுள்ள வேளே! எங்கும் இருந்து மறைவாகவுள்ள பரம்பொருளை எப்போது தன் அனுபவத்தில் அடைய ஒருவன் அதனோடு கூடி அறிவானோ, அப்பொழுது அவனுக்கு ஆனந்த வடிவமாக உள்ளவனே சங்கரன் புதல்வனான சிவசுப்பிரமணியத்தின் தோற்றம் அது என்று அறிஞர் அறிவார்கள். கூறப்படும் இப்பொருள் அருவத்தையும் கடந்தது என்ற உண்மையைச் சாரும் என்று நானும் அறிவேன். நன்மை தரும் குணாளனே! குகனே இம்முடிவு பற்றி உன்னை இலைமறைகாய் எனக் கணித்துக் கூறுவதல்லாது புதியது என்று கூறுதற்கு சிறிதளவும் வாயில்லை அன்றோ!

பலநிறக் கோக்களின் பால்கள் எல்லாம் நிறப்
       பண்பினில் ஏகம் ஆகப்
பார்க்கின்றது ஏய்ப்ப நல் சைவத்தின் மூர்த்திகள்
       பலர் உளார் எனினும் உண்மை
கலையா ஒர் நீர்மையை உணர்ந்தும் உன் கிருபையைக்
       கௌமார சமயம் என்னாக்
கழறுவார் பேதப்படுத்தி இங்கு அப்படிக்
       கழறினூஉம் என்ன சைவ
நிலை குறையுமோ ஐந்தும் ஆறும் ஒன்று என்று உள்ள
       நேர் குறையுமோ சொன்னவா
நிஜநிலையில் என்னை வாழ்விக்க வருதெய்வமே
       நிபிட இன்பப் பிழம்பே
மெலியாத தத்வ சிவஞானிகள் அகம் தோறும்
       மிளிர் பரஞ்சோதி வடிவே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      8

            சொன்னவாறு உண்மை நிலையில் என்னை வாழ்விக்க வருதெய்வமே! எனக்கு நெருக்கமாயுள்ள இன்ப வடிவே! குறைவுறாத மெய்ப்பொருள் உணர்ந்த சிவ ஞானிகளின் உள்ளந்தோறம் ஒளிரும் பரஞ்சோதி வடிவே! வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! பல நிறங்களுடைய பசுக்களின் பால்கள் எல்லாம் நிறத்தில் ஒன்று போல் வெண்மையாகவே பார்க்கின்றோம். அதுபோல் சிறந்த சைவ சமயத்தின் கடவுள்கள் பலராக உள்ளார்கள் என்றாலும், உண்மைப் பொருள் ஒன்று என்பது நீங்காத தன்மையை அறிந்தும், உள் கருணைத் தோற்றத்தைக் கெளமார சமயம் எனக் கூறினால்தான் என்ன? சைவத்தின் பெருமை குறைந்துவிடுமோ? ஐந்து முகச் சிவமும் ஆறுமுகச் சிவமும் ஒன்றே என்னும் நேர்மை குறையுமோ? குறையாதன்றோ என்றபடி!

சத்தாய தானே அசத்தாம் அசித்தினும்
       சதசத்து எனும் சித்தினும்
தகைவு அற்ற அத்துவித சத்தத்து இரண்டு அற்ற
       தன்மையாய் நிற்கும் நிறைவே
முத்தனே வினைமுகை துமிக்க உள சித்தனே
       மோன ஆனந்த முகிலே
முத்தொழில்களுக்கு உரிய கத்தனே என் சனன
       முளை களைய வரும் அத்தனே
சித்த நிலை அறியாத சிறியனுக்கு அந்த நிலை
       சித்திக்க அறிவு உணர்த்திச்
சிற் ககன வட்டத்திலே மறைந்து அங்ஙனே
       தெவுளும் மேல்நிலையை அளித்து ஆள்
வித்தைப் பெருங்கடல் அகத்தியன் அகத்தில் நிமிர்
       வித்தக விலாச விண்ணே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      9

           அறிவுப் பெருங்கடலான அகத்திய மாமுனிவரின் உள்ளத்தில் எழுந்தருளும் ஞானமாயுள்ள அழகிய ஆகாசமே! வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள வேளே! அழியாத பொருளான தானே அழியும் பொருளாகவுள்ள அறிவுப்பொருளினும், சதசத்து என்னும் அறிவுப் பொருளினும் தடையற்ற அத்துவித மொழியில் இரண்டற்ற தன்மையாக நிலைபெறும் பூரணமே! முத்தனே! வினைக் கூட்டத்தை அழிக்கவுள்ள அறிவனே! மெளன ஆனந்த முகிலே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்குரிய தலைவனே! எனது பிறப்பு என்னும் முளையைக் களையவரும் அத்தனே! அறிவு நிலையை அறியாத சிறியேனாகிய எனக்கு, அந்த அறிவுநிலை உண்டாக அறிவை அறிவித்து, அறிவாகாச மண்டலத்லே மறைந்து அங்குப் பெருகும் மேலான நிலையை அளித்து என்னை அடிமை கொண்டருள்வாயாக!

மின் எறியும் மணியோக நிறைமௌலி ஆறினும்
       விளங்கு பிரகாசம் மல்க
வீரம் உள வாகு அணி பளபள என மின்னி உயர்
       விண் மண் எங்கும் பிறங்க
அன்னமென் நடைபயில் என் அன்னை இருவரும் இனிய
       அன்புகெழு மொழிகள் பன்ன
அருணகிரி முனி கண்டு பூசித்த அடிகளில்
       அனந்த கிண்கிணிகள் அலற
வண்ணமயில் மீது இவர்ந்து என் நெடிய குறைதீரும்
       வரம் நல்க நீ வர இனம்
வைகலோ வாரமோ மாதமோ வருடமோ
       வயசுமுடிவோ அறிகிலேன்
மின் அனந்தம் கோடி என்ன நடு வெளியில் எழு
       மெய்ஞ்ஞான ஆதிக்கமே
வீரம் உள தேவர் தவமே உறுவர் தொழுததிரு
       ஏரகம் அமர்ந்த வேளே.                      10

              அநேக கோடி மின்னல்கள் என்னும்படி மத்திய வெளியில்தோன்றும் மெய்யறிவான உயர்வே! வீரம் உள்ள தேவர்களுடைய தவமே! முனிவர்கள் வணங்கிய திருவேரகத்தில் எழுந்தரளியுள்ள வேளே! மின்னொளி வீசும் மாணிக்கங்கள் நிறைந்த உயர்ந்த முடிகள் ஆறினும் விளங்கும் ஒளிகள் பெருகவும், வீரம் உள்ள தோள் அணி பளபளென மின்னி உயர்ந்த விணணுலகும் மண்ணுலகும் விளங்கவும், அன்னம்போல் மென்மையான நடைசெய்யும் என் அன்னைமார் இருவரும் இனிய அன்பு பொருந்திய மொழிகளைப் பேசிக்கொண்டு வரவும், அருணகிரிநாதர் கண்டு பூசித்த திருவடிகளில் அநேக கிண்கிணிகள் ஒலிக்கவும், அழகிய மயில் வாகனத்தில் ஏறி என்னுடைய பெரிய குறையைத் தீர்க்க வரமளித்த நீ நேரில் வர இன்னம் நாளோ, வாரமோ, மாதமோ, வருடமோ அல்லது என் ஆயுள் முடிவிலோ என நான் அறியேன்!