பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
20. திருநெல்வேலிக் கோயில் 10
பலன்உங்களுடைய பிராத்தனை நிறைவேற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருநெல்வேலிக் கோயில்

பாடல் - திருநெல்வேலிக் கோயில்

பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபஹம்

சீருடை யாரியனே யெனைச் சேர வணைப்பவனே
ஏருடை வானவர்க ணித மேத்தும் பராபரனே
ஆருடை வேலவனே நெல்லை யப்பர் விமானமுறை
நாருடை யோமயனே யென்ற னாட்டத்தைப் பூர்த்திசெய்யே.  ..  1

கச்சணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே
சொச்சமெய் யோகருளந் தனிற் சொந்தப்பட் டுள்ளவனே
அச்சமில் சிற்பரனே நெல்லை யப்பர் விமானமுறை
எச்சமி லெம்பரனே யென தெண்ணத்தைப் பூர்த்திசெய்யே.  ..  2

ஏத்தி யிறைஞ்சுபவர் மிகை யேக வருள்பவனே
கோத்திர மற்றவனே குணக் கூறிணை கூறவொண்ணா
ஆத்தும நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
ஊத்தையில் சேயவனே யென துள்ளத்தைப் பூர்த்திசெய்யே.  ..  3

உம்பரைத் தொண்டு கொளுங் கனவுத்தி பெருக்குடையாய்
எம்பெரு மானெனவே நித மேத்துநர் பங்குடையாய்
அம்பர வேதியனே நெல்லை யப்பர் விமானமுறை
செம்பர வேலுடையா யென்றன் சிந்தையைப் பூர்த்திசெய்யே.  ..  4

கங்கையுங் கொன்றையு மார் கிடைக்கண்ணுத லானவொரு
சங்கர னார்குமரா வந்தச் சங்கர னாரிறைவா
அங்கத மற்றவனே நெல்லை யப்பர் விமானமுறை
புங்கவ னேகுகனே யென்றன் புந்தியைப் பூர்த்திசெய்யே. ..  5

கான மலர்க்குழலி தெய்வ குஞ்சரி காவலனே
தானவர் மாபுரியைச் சல ராசியான் மூடிவிண்ணோர்
ஆனவர்க் காக்கமிட்டோய் நெல்லை யப்பர் விமானமுறை
நூனமில் வேதியனே யென்ற நோக்கத்தைப் பூர்த்திசெய்யே. ..  6

பத்தருட் புத்தமுதே யெங்கள் பாக்கியப் பொக்கிஷமே
சித்தெனுஞ் சத்திதனை யொரு துண்டத்திற் சேர்த்துளனே
அத்தனே யற்புதனே நெல்லை யப்பர் விமானமுறை
நித்தனே சண்முகனே யென்ற னெஞ்சத்தைப் பூர்த்திசெய்யே. ..  7

பூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்
தாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்
ஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை
வீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே.  ..  8

சந்ததம் வந்திப்பவர் பத்திச் சாலத்திற் சிக்கிக் கொளுஞ்
செந்திரு வன்புடையா யுமை செல்வச் செழும் பொருளே
அந்தரர் நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை
நந்தலி லெம்பெருமா னென்றன் ஞானத்தைப் பூர்த்திசெய்யே.  ..  9

சங்கையி லுன்புகழைத் தினஞ் சாற்றிய வெந்தைபிரான்
இங்கெனை யுய்வித்தவ ருனை யன்றி யெவருளரால்
அங்கியின் மேனியனே நெல்லை யப்பர் விமானமுறை
பங்கமி லாயெனது வழி பாட்டினைப் பூர்த்திசெய்யே.  ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி..1895) ஆடி மாதம் 28ஆம் தேதி ஆதிவாரம்