நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்
பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்
கடவுளைக் குறித்த வியாசம்
சிஷியன் : கடவுளென்பது என்ன?
குரு: என்றும் நித்திய வஸ்துவாய், எங்குஞ் சர்வ வியாபகமாய், என்றுஞ் சர்வ காரணமாய், அருவாய், உருவாய் சர்வ வல்லபமாய்த் தானதுவா யிருப்பதெதுவோ அதுவே கடவுளாம். அக்கடவுளே சர்வ நியாயமுள்ள சத்திய பரிசுத்த தேவனாவார்.
சிஷி: இப்படிப்பட்ட வாக்கியங்க ளாகச் சொல்லியதைத் தவிர அந்தக் கடவுளென்றொருவர் எவற்றுளுந் தலையாயிருக்கிறாரென்பதை நான் அடியிற் சொல்லுங் காரணங்களால் இல்லை யென்றே மெய்ப்பிக் கின்றேன். தாங்கள் ஞாபகமாய்க் கேட்கவேண்டும். சாதாரணத்தில் மனிதர்களிலனேகர்கள் தங்கட்குச் சங்கடஞ் சம்பவித்தபோழ்து, கண்கெட்டவனே! சண்டாளா! பாழுந் தெய்வமே யென்று நினைந்த வண்ணம் ஏசுவதையும், அநியாயமாய்க் கொலைகள் செய்வ தையும், சத்திய விரோதமாய் மனதாரப் பாவங்கள் செய்வதையும் பெரும்பாலும் நாம் கண்ணாற் பார்த்து வருகிறோம். இவைகளெல்லாம் கடவுளானவர்க்குப் பிரியமில்லாது போற் காட்டுந் தங்கள் சம்மத நியாயப் படிக்கு அக்கடவுள் அப்போதைக்கப்போது அப்பாவங்கட்குரிய ஜீவர் களைத் தண்டிக்கப் படாமல் இவ்வுலக விராஜாங்கத்தாரால் ருஜுவறிந்து ஏதோ நியாயம் புலப் பட்டமட்டும் செய்வதிலும் அனேகமாய்த் தப்பியும் விடுகிறது. அனேக குற்றங்கள் மறைவாகியும் விடுகிறது. இது நிச்சயமே. இவைகளையெல்லாந் தெரியுங் கடவுளிருப்ப துண்மையாயின், அவர் சத்தியத்தின் பொருட்டு வெளிப்பட்டு அக்காரியங்களை யெப்போதாவது செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யவுமில்லை. ஏதோ முன்னமே சிலதுகள் அப்படி நடந்திருப்பதாகச் சொல்கிற வார்த்தைகளும் புத்தக வாக்கியங்களுமே தவிர நாம் நம்பற்குரிய தொன்றுமில்லை. அன்றி, தாங்க ணவின்றபடி கடவுளரூபி யெனினும் இப்படிப்பட்ட சமயங்களில் நியாயத்தினிமித்தம் அவரு டைய சர்வ வல்லமை போய்விடத்தக்க தல்ல. மேலும், நீதி பரிபாலனத்தினிமித்தம் ஒருவனைய வரே தண்டிக்கும் பக்ஷத்தில், மற்றவனும் அநியாயஞ் செய்யத் தக்க தன்று. அது விடயம் மிக வேண்டியதில்லை. ஆகாயத்திலிருந்து ஒரு கல்லை அவன்றலையில் விழும்படி செய்தாலே போதும். இப்படிக்கெல்லாம் ஒன்றுங் காணப்படாததால், யாவு மனிதர்களுடைய சுபாவத்திற்குத் தக்க செயலாகவே யிருந்து கொண்டிருக்கிறதென்பதுண்மையே இதனால் கடவுளென் றொன்றி ல்லை யென்றும் அது வலியவரை எளியவர் காரியங் கொள்வதற்காக வேற்படுத்திய வற்புறுத்து வாக்கிய மென்றும் நிச்சயமாயறியலாமே.
குரு: நீ, யிப்பொழுது சொன்ன யுக்தி சமாசாரங்களெல்லாம் கடவுளை யில்லையென்று காட்டியா போகும் காட்டாது ஆதியந்த மற்றவனான பராபரன் நீதி பரிபாலனமானது மிகவும் பரிஷ்காரமாக வேயிருக்கிறது. கடவுள், ஒருவன் செய்த அநியாயத்தைக் கண்டு தண்டிக்க உலகத்தி லரசர்களையு நியமித்து அந்தப்படி குற்றத்திற்கான தண்டனையையும் விதித்து வருகிறார். நியாயாதிபதி நியாய த்தைக் கொடாவிடில் அவன் செய்யும் அநியாயத்திற்கு அவன் வேறு தண்டனையை யடைவான். தகுந்த ருஜுவேற்படாமற் குற்றத்திலிருந்து ஒருவன் விடுதலை யாவானே யாகில் அந்த ருஜுவை எவனாற் கெடுக்கப்பட்டிருந்ததோ அவனையும் அதற்குடன் பட்டவனையும் தேவ நியாயத்திற் றெண்டிக்கப்படும்.இப்படிக்கெல்லாம் வல்லவனாகிய கடவுள் எவ்விடத்து மிருந்து நியாயங் கொடுக்கிறாரே யலாமற் கொடாமல் விடத்தக்கதன்று. இவ்வாறு அவருடைய நீதி பெருகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒருவன் றலையில் ஆகாயத்திலிருந்து கல்லைத் தூக்கிப் போட வேண்டிய தவசியமன்று. நிற்க, ஒருவன் குற்றஞ்செய்த காலமானது தீவினை யென்னும் விதையை விதைத்த காலமாகும். அவ்விதை முளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துப் பழுக்கும் போது பலனா ய்வருகும். ஆதலால், தேவ நிந்தை முதலியவைகளுக்காக, அவரப்பொழுது கோபப்பட வேண்டிய துமில்லை. அவர் மிகவுஞ் சாந்தமுடையவரே.
நீ, எல்லாம் மனிதருடைய சுபாவத் தன்மையென்று காட்டுகிறாய். அந்தப்படி மனிதருடைய சுபாவ காரியங்களுமுண்டு அதிலற்பத்தொழில்க ளெல்லாஞ் ஜீவர்களையே குறிக்கும். பஞ்ச பூதங் களாகிய ஆகாயம் வாயு அக்கினி ஜலம் மண் முதலானவைகளை மனுஷன் சிருஷ்டிக்கவறியான். அவைகளைக் கெடுக்கவு மறியான். ஆதலால்: மலரகிதனாகிய சருவேசுரன் ஒருவ னுண்டென்றும், அவைக ளவனாற்கூடு மென்றும், அவைகள் பிரமணாதீதமான பெரிய காரியங்களென்றுந் தெளிவா கவே யிருக்கின்றன.
சிஷி: பஞ்சபூதங்களை மனிதனுண்டு பண்ண மாட்டா னென்றும், அவைகளை யிரக்ஷிக்கவுங் கெடு க்கவு மறியானென்றுந் திருஷ்டாந்தஞ்செப்புவது சரியன்று. ஏனெனில், நீராவி எந்திரத்திலிருந்து ஜலத்தையும், வாயுவில்லாத விடத்தில் ஊதும் அல்லது அசையும் எந்திரத்தால் வாயுவையும், அக்கினியில்லாத வமயம் கந்தக மருந்து அல்லது கடினக்கடைசலிலிருந்து அக்கினியையும், சில ஓஷதிகளின் சேர்க்கை சிகிச்சையின் மூலம் மண்ணையும், ஆகாயந் தோன்றா விருட்டறைக்குள் பிரகாசத்தைக் கொடுக்கும்படிக்கான தீபமேற்றி அவ்வுழி நல்ல ஆகாயத்தையும், சகஜமாய் மனிதர்க ளிப்பொழுது முண்டுசெயத் தாங்களும் வீக்ஷணித்திருப்பீர்கள். அவைகளை இரக்ஷித்து நசிப்பிக்குந் தன்மையும் அப்படியே கூடும். அதுபோற் பெருக்க வனையுந் திரமுடை மனிதருமுண்டென்று நிச்சயிக்கலாமே - தாங்களிதன் மேலும் வலத்திடத் துணிவது யாதோ?
குரு: மனிதன், அப்படிக்கெலாங் காரியப்படுத்தி எந்த வானத்தையும், எந்த பூமியையும் சிருஷ்டி த்தானோ வறியேம்! மேலும் மனிதன் அவைகளைச் செய்வது எந்தப் பொருள்களைக் கைக்கொண் டென்பதை நீ யுய்த்துணரா துரைத்த தறிவீனம்! கேள், ஒவ்வொரு பொருளின் உதவியால் ஒவ்வொ ன்றை மனிதன் விருத்தி புரிவதுண்மையே. ஆதலால், அந்தப் பொருள்களை யுண்டு பண்ணியது முதலாவது யார்? அவைகளைப் பின்னுதவிகொண்டு காரியஞ் செய்யுமனிதனுக்கு ஆதியான பிதா மாதாக் கடான் யார்? என நன்கோரில் அவ்வுண்மை வெளியாமே.
சிஷி: ஆரம்ப காலத்தில் இயல்பாய்த் தோன்றிய அசர சரங்களிலிருந்து எப்பொருளும் ஜனித்ததா யிருக்கும். அவைகளில் ஒரு மனிதனும் ஒரு மனுஷியும் விசேஷமாய் அப்பொழு திருந்திருக்கலாம். அவர்களிலிருந்து மகமகவாய் இரங்கி வந்தவர்களா யிருக்கவேண்டியது சர்வ மனிதர்களும் அந்த ஆதி பிதா மாதாக்கள் மரித்தவர்களாயிருக்கலாம். அவர்களின் புத்திர பௌத்திராதிகளான நாம் முதலான ஜீவர்களைக் கடவுள் படைத்தார். படைத்தாரென்று கதைப்பது அல்பமு மொவ்வா தொழியும். மேலும் அப்படிக் கொருவனிருந்து படைத்துக் கொண்டிருப்பதென்னில் அந்தரமாய் ஒரேயிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வந்துகொண்டே யிருக்கவேண்டும். அப்படி வரவுமில்லை. தவிர, அனங்காகமம் ஆயுள் வேத முதலானவைகளில் சொல்கிறபடி ஸ்திரீ புருஷா ளிடத்தில் குன்மரோக முதலிய மலடுகளிருந்தால் கருப்பந் தரிக்காதென்றும், ரஜஸ்வலையான 16 தினத்திற் குட்டான் கருப்பம் ஜனிக்குமென்றும், அதில் ஒற்றைப்பட்ட நாட்களில் பெண்ணென்றும், இரட்டை ப்பட்ட நாட்களில் ஆணென்றும், கலவிக்குக் குறிக்கப்பட்ட காலத்தைத் தவிர கலந்த கருப்பத்திற் கருத்தரித்தால் அது அற்பாயு ளென்றுமுள்ள பலிஷ்ட பிரமாணங்களாலும் மனுடர்களின் செயலி லேயே ஆண்,பெண் ஆயுள்பாக முதலானவைகளெல்லாம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அன்றி, ஆணும் பெண்ணுந் தேக சம்பந்த மில்லாவிடில் கடவுள் ஜீவனையெப்படிப் படைப்பரோ! இப்படிக்காய முகாந்தரங்களால், கடவுள் படைப்பும் அவரிருப்பும் நிஜமன்று.
குரு: இயல்பாய் தோன்றிய அசர சரங்களிலிருந்து எப்பொருளும் ஜனித்ததாயிருக்குமென்று மதித்து நொடித்த வாதீ! ஒரு பொருளாவது இக் காலத்திற்றானே தோற்றிட நீ கண்ணுற்றிருப்பதுண்டா? எழுவகைத் தோற்றமும் நாலு யோனியினுற்பனமென்பதை அறியாததிர்க்கலாமோ? யாவும் ஒன்றி லிருந் தொன்றுண்டாவ துண்மையே. அன்றிலாத காரியம் இன்றுண்டாவதுமன்று. விருக்கத்தை வெளியிடற்கு வித்திருந்த தொப்ப பிரதமத்தி லனைத்திற்கும் ஈஸ்வரனே ஒரு வித்தாக விருந்திரு க்கிறார்.
நாம் முதலான வெல்லா ஜீவர்களையுங் கடவுள் படைத்தாரென்று கதைப்பதொவ்வா தொழியுமென்றும், கடவுளிருந்து படைப்பதென்னில் அந்தரமாய் ஒரேயிடத்திலேயே யிருந்து ஒவ்வொன்றாய்ச் சிருஷ்டித் தனுப்பிக்கொண்டே யிருக்கவேண்டுமென்ற விதமாயும் உதாகாரம் வைத்துரைத்தனை - தேவனானவர் யாவற்றுக்கும் ஆதி விரையாயிருந் திருப்பதிலிருந்து தோற்றம் பகிர்முகப்பட முளைதோன்றித் தழைத்து அவைகள் காய்த்து அக்காய்க்குண் முந்தவிருந்த தோற்ற மடங்க வித்தாகச் சமைந்து அவ்வித்திலிருந்தே அவன் கருணையால் அது முளைத்து அப்படிப் பல் வித்துக்களா யுருப்பட்டு அனேக தோற்றங்களா யிருந்து கொண்டிருப்பதில், எல்லோரையுங் கடவுள் படைத்தா ரென்றேன் சொல்லக்கூடாது. இவ்வாறவரரு டோற்றும்படி செய்வதிலிருந்து அந்தரமாய் ஒரேயிடத்திலிருந்து ஒவ்வொன்றாய்ச் சிருஷ்டித் தனுப்பவேண்டிய தென்பதவருக் காவசியகமன்று.
அனங்காகம முதலிய ஆயுள் வேதங்களையும், உதாரணங் கணித்துக் காட்டி மனித ஜனன மானது மனிதருடைய செயலிலேயே ஏற்பட்டிருக்கிறதாகவும், ஸ்திரீ புருஷாள் தேக சம்பந்தமில்லா விடில் எப்படிப்படைப்பா ரென்றதாகவும் காரணங் காட்டிக் கடவுள் படைப்பும், அவரிருப்பும் நிஜமல்ல வென்கிறாய் - எல்லாம் வல்ல கடவுள் ஜீவகாருண்ய வித்துக்குள் வித்தாயிருந்து கொண்டி ருப்பதால், ஜீவனுள் ஜீவனாகவுமிருக்கிறாரென்றும் பரிஷ்காரமாய் வெளியாகும். இதனால் அந்த ஆயுள்வேத முதலானதுகளிற் கூறிய நியாயங்களும் தலைமையான கடவுளுடைய சர்வ வியாபக மேயாகும்.
சிஷி: இப்போழ்து தாங்கள் விவரித்த காரணங்க ளனைத்தும் தேவனாகிய வித்திலிருந்து யாவும் வந்திருக்கிறதாகவும், வித்தில்லாமற் றான்றோன்றியா யொன்றுந் தோற்றாவா மென்றும், அப்படித் தோற்றுமென்ற ருஜுவுக்கு எடுத்துக் காட்ட இப்போழ் தொன்று மின்றென்றும், ஜீவனுள் ஜீவனாய்க் கடவுள் சர்வ வியாபகமா யிருக்கிறாரென்றும் உள்ள நியாயங்களையே காட்டுகின்றன. அப்படியேல், எல்லாச் செயலிலும் எல்லாவுயிரிலும் கடவுளிருப்பதாய் முடிகின்றபடி ஜீவர்களியற்றும் அக்கிரம ங்களும் சராமரண முதலியவும் கெட்ட ஆபாசவாசனைகளும் கடவுளாலே யாமே? ஈண்டும் அவரைக் கனஞ் சொல்வ தியாதோ?
வித்தில்லாமல் யாதொன்று மிக்காற் றோற்றுவதின்றென்றும் தாங்கள் சொல்வது கூடாத காரியம். ஏனெனில், யாதொரு புற்பூண்டு மில்லா திருந்த ஓர் பூமியின் கண்ணே மழைத் தண்ணீர் தங்கி அது வறண்டபின் அனேக நீர்க்கரைப் பூண்டுக ளுற்பன மாகவும், யாதொரு மீனுள்ள ஏரி முதலிய நீர்ப் பாய்ச்சலில்லாத மழைத் தண்ணீர் நூதனமாய்த் தங்கிய பள்ளத்தில் அனேக மச்சங்க ளுற்பனமாகவும் தாங்களும் பார்த்திருப்பீர்கள் - இவைகளை எந்த விதையும், எந்த மச்சங்களு மீன்றன? இவைக டான்றோன்றிகளல்லவா? ஈதெல்லாமோராதுரைப்ப தென்னை?
குரு: இங்ஙனம், நீ முதலின் மொழிந்ததற்குரிய முகாந்தரங் கேள். ஜீவர்கள் செய்த நன்மைக்குத் தக்க நல்ல தேகங்களையும், தீமைக்குத் தக்க தீய தேகங்களையும், தேவனுடைய நியாயத்திலேற் பட்ட படிக்குச் சிருஷ்டிக்கப்படுவதாயிருக்கிறது. அந்தப்படிக்கவைக ளனுபவிக்க நல்லதையுங் கெட்டதையு நீதி வழுவாமலுதவியதாகும். அதிலும் மனிதனென்கிற உயர் ஜென்மத்திற்கு மட்டும்
ஆதியிலேயே பகுத்தறிவைப் பிரகாசிக்கும்படியாக நன்று தீதறிந்து கொள்ளுமாறு செய்தவாறே, இப்போதும் ஒவ்வொருவ ரிதயத்திலும் அவ்வறிவு விளங்கிக் கொண்டிருக்கிறது. சுத்தப் பாமரனா னாலும், கொடும் பாவங்களையே செய்பவனானாலும், அவன் செய்த தீமையை அவனிருதயம் தீமையென்றே காட்டிக் கொண்டிருக்கிறது. இது சத்தியம். இப்படிக்கென்றும் ஈஸ்வரன் அறிவா கவே யிருந்து கொண்டிருக்கிறார். இதனால் அவர் சர்வ வியாபியாகும். இதை நீ துர் அர்த்தம் பண்ணியது சுத்தப் பிசகு.
நீ, இரண்டாவ துரைத்ததற்குரிய நியாயம் யாதெனில், ஆகாயத்திலிருந்து மேகங்கள் வருஷி த்த நீரானது பிருதிவியாகிய பூமியிற் றங்கினால் நீர்க்கரைப் புற் பூடுகளும் மச்சங்களும் உண்டாவ தற்கு அப்பிருதிவியும் நீருமே கருவாகவிருந்து கொண்டிருக்கின்றன. இதனால், அவைகள் வித்தில்லாத தோற்றமென்றாய்விடுமா? அவைகளின் சம்பந்த மில்லாத அந்தரத்தி லுண்டான தென்றான் மட்டும் தான்றோன்றியாகும். "வித்தில்லாத சம்பிரதாய மேலுமில்லை கீழுமில்லை" என்ற வாக்கியத்தையேனு நீ யறிந்த தில்லையோ? ஐயோ! என்ன விபரீதம்!!
சிஷி: பேஷ். இப்பொழுதுதான் என்னபிப்பிராயத்திற் சிக்குண்டவர்க ளானீர்கள். அதாவது பிருதிவி முதலானதிலிருந்து புற்பூண்டு மீன் முதலியவைகளும் எப்படி யுற்பத்தியானதோ, அப்படியே நாலு யோனி தோற்றங்குந் தோற்றியதாய் முடிந்தன. இதனால், கடவுளென் றொருவரிருந்து சிருஷ்டிக்க வேண்டியது ஆவசியக மானதுமல்ல. அவருண்டெனலும் பொய் எனவும் அறியலாமன்றோ? நவிலுக.
குரு: ஆ! அ! "பொரிமாவைக்கண்டு பொக்கை வாய்ச்சி மெச்சிக் கொண்டாளாம் "என்பதுபோல, இந்த நியாயத்தைக் கண்டு சந்தோஷப்படுகிறாய் - அப்படிப்படாதே. அந்தப் பிருதிவி முதலான வைகளைச் சிருஷ்டித்தவன் யாரென்று நீயுணர வேண்டாமா? அதை யுணர்ந்து பார்.
சிஷி: நல்லது. தாங்கள் சொல்கிற கடவுள் எதிலிருந்து தோன்றினாரென்பதைச் சொல்வீர்களாகில், யான் சொன்னவைகளும் இன்னதிலிருந்து தோன்றியதெனச் சொல்லக்கூடும்?
குரு: ஆதியாயும், அனாதியாயுமிருக்கிற தலைவனானவர் ஒன்றிலிருந்து தோன்றவும் வேண்டுமா? ஐயோ! இப்படி முரட்டாட்டஞ் செய்பவரை யாங் கண்டது மில்லை கேட்டது மில்லையே!
சிஷி: முரட்டாட்ட மென்றால், யார் செய்கிறது முரட்டாட்டமென்று தீர்க்க வல்லோ வேண்டும் ஓ!ஐயா! ஆதியாயுமனாதியாயு மிருக்கிற கடவுளென்கிறவர், ஒன்றிலிருந்து தோன்றவில்லை யென் றெப்படிச் சொல்கிறீர்களோ அப்படியே இந்தப் பிருதிவி முதலானவைகளும் ஒன்றிலிருந்து தோன்றியதில்லை யென்று யானுஞ் சொன்னாலொவ்வாதோ?
குரு: ஒருக்காலு மொவ்வாது ஏனெனில், நாம் சொல்கிற நித்ய வஸ்துவைப் போலல்ல நீ சொல்கிற அநித்ய வஸ்துவாகிய பிருதிவி முதலானவைகள். அவைகள் சேதமாவது தானென்று நீயே ஒத்துக் கொள்பவனா யிருக்கிறாய். மேலும் சேதப்படும் பொருளெதுவானாலும் அது ஒன்றிலிருந்து தோன்றியழியுமே தவிர தான்றோன்றியா யிருக்கத் தக்கதன்று. அசேதனப் பொருள்களாகிய ஜட வஸ்துக்களைக் கொண்டு அநேக வலங்காரங்கள் பொருந்திய பெரிய கோபுர மோன்றிருக்கப் பார்ப்போமேயாயின், அதைச் சமைத்தவொருவ னுண்டென்றுப் பூரணமாய்த் தெளிதலனைய. பல தோற்றங்களாகிய வலங்காரங் கண் மிகவுமுடைய இவ்வகண்ட தோற்றமாம் பிரபஞ்சத்தையும் ஒருவனுண்டு பண்ணியிருக்கிற துறுதி யென்றும், சர்வாங்கங்களுமுள ஒரு பிரதிமையை ஒருவனிருந் தாட்டுவிப்பதுபோல, சர்வப்பிரபஞ்சத்தையுந் தொழில்படுத்தி நிற்பதற்கும் ஒருவனுண்டென்றுங் காண்க.
சிஷி: அப்படிக் கொருவனா லிவ்வுலகஞ் சிருஷ்டித்திருப்ப துண்மையாயின், அச்சிருஷ்டிகன்றானோ கடவுள்?
குரு: ஆம் அப்படிப்பட்ட பெரிய காரியத்தைச் செய்த அவரே கடவுள்.
சிஷி: அற்றேல், அக்கடவுளர் வாசஸ்தலமும், நாமமும், கிருத்தியமும், சொரூபமும் யாதென விளம்ப வேண்டும்?
குரு: அவ்விறைவற்கு ஸ்வயம்புவில் தேசவாச மொன்றுண்டா - இல்லை. நாம மொன்றுண்டா - இல்லை. கிருத்திய மொன்றுண்டா - இல்லை. சொரூப மொன்றுண்டா - இல்லை. எங்குந்தானாய், தனிப் பழம்பொருளாய், சதுர் மறைகட்கு மடங்காத அத்துவித சைதன்ய சாக்ஷாத்காரமாய் இருக்கின்ற சுத்தப் பிரம்மமேயாம்.
சிஷி: இங்ஙனஞ் சொன்ன வண்ணம் யாதொன்றிலுஞ் சம்பந்தப்படாத சுத்தப் பரப்பிரம்மத்திற்குத் தான் செயலொன்று மில்லையென்று செவ்வென வெளிப்படுகின்றதே? அந்தப் பிரம்மம், இப்படி அகண்டாகண்ட மாயிருக்கிற உலகங்களை எப்படிச் சிருஷ்டிக்கத் தொடங்கிற்று?
குரு: இதோ வரைந்துள்ள பிரம்ம நியமப் படத்தை நீ பார்வை யிடுவதனாலேயே, இவ்வுலகத் தோற்றமாகிய ஜட ஜீவேஸ்வர உற்பத்தி, பட்டப்பகற் போற் றெளியலாகும்.
சிஷி: ஆம் பார்த்தேன் - இதைச் செவ்வையாயெற்குப் புலப்படும் பொருட்டு விவரித்துரைக்க வேண்டும்?
குரு: யாதொரு களங்க ரகிதமான சிவ சைதன்ய மாகிய சுத்தப் பிரம்ம மென்னுஞ் சர்வ சாக்ஷியினி டத்தில் அக்கினியிற் சூடு போலவும், ஜலத்திற் சீதளம் போலவும், புஷ்பத்தில் வாசனை போலவும், மனதி னினைப்புப் போலவும், கண்ணாடியிற் பிம்பம் போலவும்,வித்தினுண் முளையைப் போல வும், முளையினு ளுயிரைப் போலவும் அபின்னமாக ஓர் சக்தி யுளது. அந்தச் சக்திக்கு யாதொரு செயலின்றி அச்சர்வ சாக்ஷியினிடத்தில் அடங்கியிருக்கும் போழ்து அதையே சுத்தப் பிரம்மம் எனச் சொல்லலாகும். அந்தச் சக்தி விஜுரிம்பித்து பிரம்மத்தைச் சூழ வியாபிக்கும் போது அப்பிரம்மம் சக்தி வியாபகத்திற் குள்ளானதால் அதைச் சுத்தப் பிரம்மமெனச் சொல்லாமல் பிரம்மம் எனப் பெயர் பேசலாயிற்று.
இப்படிக்கான பிரம்ம சன்னிதானத்தில் சுரும்பிற்கு அலரிலின்பங் கண்டது போலும், ஸ்திரீ க்குப் புருஷனிடத்தின்பம் பயந்தது போலும், விகிர்த சூன்யமா யிராநின்ற அந்தச் சக்தியினிடத்தில் அவிகிர்த சத்துவம் ரஜசு தமசு என்னுமுக்குணங்கள் ஜெனித்தன. அந்தச் சுத்த சத்துவத்திற்கு ஆநந்த ரூப சக்தி யென்றும், சுத்த ரஜசுக்கு சித் ரூபசக்தி யென்றும், சுத்த தமசுக்கு சத்ரூப சக்தி யென்றும் மூன்றுசக்திகளுண்டாயின. அப்படிக்குண்டான மூன்றுள பிரதமமான ஆநந்தரூப சக்தியை அப் பரப் பிரம்மம் கலந்து ஆநந்தசுழுத்தியைப் பொருந்துங்கால் பரமாநந்தன் என்றும், அப்பரமாநந்தன் மேலே சொன்ன சித்ரூப சத்தியுடனே கூடிச் சர்வப் பிரகாச சொப்பனத்தை யடையுங்கால் பரிபூரணன் என்றும், அந்தப் பரிபூரணன் மேற்கண்ட சத்ரூப சத்தியுடனே சேர்ந்து சர் வியாபக ஜாக்ரத்தை யடையு ங்கால் பரன் என்றும் விளங்கலாகும். இங்ஙனஞ் சொற்றதுக ளெல்லாம் குண பேதகத்தாற் பெயரும் வேறுபட்டன வென்றும், பிரம்மமே பரமாத்மா சத்திய சரீரம் என்றும் அறிதி.
மேலுரைத்த பிரம்மத்தினிடத்தில் இன்னமும் சுத்தியில் இரஜிதந் தோன்றினாற் போலும், தீபத்தி னிடத்தினிழல் தோன்றினாற் போலும் மூலப்பிரகிருதி என்னும் ஓர் சத்தி யுண்டாயிற்று. அதையே பிரம்மத்திலோர் அணுவென்றுஞ் சொலத் தகும்.
அந்த மூலப் பிரகிருதி விகிர்த சத்துவம் ரஜசு தமசு என்னு மூன்று குணங்களுடனே யுள்ளது. அம்முக் குணங்களில் பிரதமமான சத்துவ குணமே சுத்த மாயை யென்று சொல்வதாகும். அம் மாயையினிடத்தில் நிர்மலஜல பிரதி பிம்பம் போல பிரம்மம் சுலக்ஷணமாய்ப் பிரதி பிம்பிக்கும். அந்தச் சைதன்னியத்திற்கு சர்வ ஜனனாகிய " ஈஸ்வரன் " என்று பெயர் சாற்றுவது. இவ்வீஸ்வனுர க்கு மேற் சொன்ன சுத்த மாயையே காரண சரீரமாம்.
அந்தச் சத்துவகுண சுத்த மாயையினிடத்தில் சத்துவத்திற் சத்துவம், சத்துவத்தில் ரஜசு, சத்துவ த்தில் தமசு என்னு முக்குணங்களுண்டு. அதில் சத்துவத்தில் சத்துவஞ் சிலாக்கியமாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வரனுக்கு உருத்திரன் என்று பெயர் சத்துவத்தில் ரஜசு பிரதான மாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வரனுக்கு விஷ்ணு என்று பெயர். சத்துவத்தில் தமசு சிரேஷ்டமாம்போது அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வர னுக்குப் பிரமன் என்று பெயர். இவைகடான் மூலப்பிரகிருதியின் சத்துவ குண கற்பனைகளாகும்.
மூலப் பிரகிருதியின் ரஜோகுணம் அனேக ரூபமாய் தாரதம்யமுள்ளவைகளாய் ஜீவகாரண சரீரமெனப் பேருடையதாய் விளங்கும். அதையே அசுத்த மாயை என்றும் அவித்தை என்றும் சொலத்தகும். அவ் வவித்தைகடோறும் மலினஜன பிரதி பிம்பம்போல பிரம சைதன்யம் பிரதி பிம்பிக்கும் அவைகட்கு சிதாபாசர் என்றும், கிஞ்சிக்ஞ ரென்றும் பெயராம். அந்த அவித்தையி னிடத்தில் ரஜசில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என்ற முக்குணங்களுளது. அவற்றுள் ரஜசில் சத்துவம் சிலாக்யமாம்போது அதிற் பிரதிபிம்பித்த சிதாபாசர் தத்துவஞானி யாவர். ரஜசில் ரஜசு பிரதானமாம் போது அதிற் பிரதி பிம்பித்த சிதாபாசர் காமக் குரோதராவர்.ரஜசில் தமசு சிரேஷ்ட மாம்போது அதிற் பிரதிபிம்பித்த சிதாபாசர் சோம்பு நித்திரை மயக்க முடையராவர். இவைகடான் மூலப் பிரகிருதியின் ரஜோகுண கற்பனைகளாகும்.
மூலப் பிரகிருதியின் தமோ குணத்தில் அஞ்ஞானம் தோன்றி அவ்வஞ்ஞானத்தில் ஆவரண சத்தி விட்சேப சத்தியென இரண்டு சத்திகளுண்டாயின. ஆவரண சத்தியானது தத்துவ ஞானிகளையும் ஈஸ்வரனையுந் தவிர ஜீவர்களுக்கு சரீரத்திரயம் சிதாபாசன் சாக்ஷி சைதன்ய மென்பனவற்றுள் ஒன்றற்கொன்று பேதந் தெரிய வொட்டாது மறைக்கத் தக்கதாகும். இதுவே ஆவரண சத்தியின் பிரேரகம்.
விட்சேப சத்தியானது இல்லாததை யுண்டு செய்யத் தக்கது.இதுவே விட்சேப சத்தியின் பிரேரகம் இந்தச் சத்தியினிடத்தில் சப்த தன் மாத்திரையான சூக்கும ஆகாயம் தோன்றிற்று. அவ்வாகாயத்தில் பரிச தன்மாத்திரையான சூக்கும வாயு தோன்றிற்று. அவ்வாயுவில் ரூப தன்மாத்திரையான சூக்கும அக்கினி தோன்றிற்று. அவ்வக்கினியில் ரச தன்மாத்திரையான சூக்கும அப்பு தோன்றிற்று. அவ்வப்பு வில் கந்த தன்மாத்திரையான சூக்கும பிருதிவி தோன்றிற்று. இவ்வாறு தோன்றிய சூக்கும பஞ்ச பூதத்திற்கு உபாதானமா யிருக்கின்ற அவ் விட்சேப சத்தியினிடத்தில் தமசில் சத்துவம், தமசில் ரஜசு, தமசில் தமசு என்ற முக்குணங்களுந் தோன்றி அதன் காரியமாகவே மேற்கண்ட பஞ்சபூதங்களு முண்டாயின. இப்பூதங்களைத் தன்மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும் சொல்ல ப்படும். இந்தச் சூக்கும பூதங்களின் சத்துவாம்சத்தில் ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யொன்றாகக் கூடி உள்ளம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களைந்தும், மேலுரைத்த சத்வாம்சத்தில் ஒவ்வோர் பூதத்தி னொவ்வோர் மாத்திரை தனித் தனியே சுரோத்ரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்ராணம் என்னும் ஞானேந்திரியங்களைந்து முண்டாயிற்று.
மேற்படி பூதங்களின் ரஜோம்சத்தில் ஒவ்வோர் பூதத்தின் ஒவ்வோர் மாத்திரை யொன்றாகக் கலந்து சமானன், வியானன், உதானன், அபானன், பிராணன் என்னும் பிராண வாயுக்களைந்தும், மேற்படி ரஜோம்சத்தில் ஒவ்வோர் பூதத்தின் ஒவ்வோர் மாத்திரை தனித்தனியே வாக்கு, பாணி, பாதம், உபஸ்தம், பாயுரு என்னுங் கருமேந்திரியங்களைந்து முண்டாயிற்று. இப்படிக்கு சூக்கும பஞ்ச பூதங்களின் சத்துவாம்ச ரஜோம்சங்களிலுண்டான இருபது தத்துவங்களுமே ஜீவர்களுக்கு சூக்கும சரீரங்களா யேற்பட்டிருக்கின்றன. இன்னமும் சூக்கும பஞ்ச பூதங்களின் தமோம்சத்தில் ஐந்து பூதங்களும் ஒவ்வொன் றிரண்டிரண்டாகி முதற் பாதியைந்தும் ஒவ்வொன்று நான்கு பிரிவினையான அரைக்கா லரைக்காலாகப் பகுக்கப்பட்டு மேற்கண்ட விரண்டாம் பாதியின் ஆகாய அம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதில் ஒன்றுஞ் சேராமல் வாயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் முதலாவ தரைக்காலும், தேயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் இரண்டா வதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகிய அம்சத்தில் மூன்றாவதரைக்காலும், பிருதிவியின் முதற் பாதியாகிய அம்சத்தில் நான்காவதரைக் காலுமாகவும், மேற் குறித்த இரண்டாம் பாதியின் வாயுவம் சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதிலொன்றும் பொருந்தாமல் ஆகாயத்தின் முதற் பாதியாகிய அம்சத்தில் முதலாவதரைக்காலும், தேயுவின் முதற் பாதியாகிய அம்சத்தில் இரண்டாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகிய வம்சத்தில் மூன்றாவதரைக் காலும், பிருதிவியின் முதற் பாதியாகிய வம்சத்தில் நான்காவதரைக்காலுமாகவும்; மேற் சொன்ன இரண்டாம் பாதியின் தேயுவம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்டதிலொன்றுங் கூடாமல் ஆகாயத்தின் முதற் பாதியாகியதில் முதலாவதரைக்காலும், வாயுவின் முதற் பாதியாகியதில் இரண்டாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியாகியதில் மூன்றாவதரைக் காலும், பிருதிவியின் முதற் பாதியாகியதில் நான்காவ தரைக்காலுமாகவும், மேல் விளம்பிய இரண்டாம் பாதியின் அப்புவம்சத்தோடு அதன் முதற் பாதியில் அரைக்கா லரைக்காலாகப் பகுபட்ட திலொன்று மமையாமல் ஆகாயத்தின் முதல் பாதியில் முதலாவ தரைக்காலும்,வாயுவின் முதல் பாதியில் இரண்டாவதரைக்காலும், தேயுவின் முதல் பாதியில் மூன்றாவதரைக்காலும், பிருதிவியின் முதல் பாதியில் நான்காவதரைக்காலுமாகவும்; மேற்கூறிய இரண்டாம் பாதியின் பிருதிவி யம்சத் தோடு அதன் முதற் பாதியில் அரைக்காலரைக்காலாகப் பகுபட்டதில் ஒன்றுஞ் சம்பந்தப்படாமல் ஆகாயத்தின் முதற் பாதியோடு முதலாவதரைக்காலும்,வாயுவின் முதற் பாதியோடு இரண்டாவ தரைக்காலும், தேயுவின் முதற் பாதியோடு மூன்றாவதரைக்காலும், அப்புவின் முதற் பாதியோடு நான்காவதரைக்காலுமாகப் பஞ்சீகரணஞ் செய்யப்படலாயிற்று. இப்படிக்கான ஐந்தும் ஒவ்வொ ன் றுக்கெட்டு மாத்திரையுளதென்பதேதென்னில் - அந்தச் சூக்கும பஞ்ச பூதங்களைந்தும் பகுபடாத பாதிக்கு நான்கு மாத்திரையுஞ் சேர்ந்து ஒவ்வொரு பூதமு முழுத்தன்மை பெற்றதாகும். இவ்வித முழுத் தன்மை பெற்ற வைந்து பூதங்களையுமே ஆகாய மாதி ஸ்தூல பூதங்கள் என்றெண்ணுக.
இப்படிக் காய ஸ்தூல பூதங்களுள் ஆகாயத்திற் பரிச, ரூப, ரச, கந்த மென்னும் நான்கு குணங்களும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பிய மானதில் அவை யதிருசியமாய் நிற்க நிஜகுணமாகிய சப்தம் திருசியமாய்த் தோன்றலாயிற்று.
ஸ்தூல வாயுவில் ரூப ரச கந்த மென்னும் மூன்று குணமும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பியமானதில் அவை யதிருசியமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணமாகிய சப்தமும் நிஜகுணமாகிய பரிசமும் திருசியமாய் தோன்றலாயிற்று.
ஸ்தூல தேயுவில் ரசகந்த மென்னும் இரண்டு குணமும் அரைக்காலரைக்கால் மாத்திரை வீதம் வியாப்பியமானதில் அவை யதிருசியமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணங்களாகிய சப்தமும், பரிசமும்,நிஜகுணமாகிய ரூபமும் திருசியமாய் நிற்கலாயிற்று.
ஸ்தூல அப்புவின் அரைக்காலரைக்கால் மாத்திரையான கந்தகுணம் வியாப்பியமானதில் அது யதிருசி யமாய் நிற்க அரைக்காலரைக்கால் மாத்திரையான காரண குணங் களாகிய சப்தமும், ரூபமும் பரிசமும், நிஜ குணமாகிய ரசமும் திருசியமாய் நிற்கலாயிற்று.
ஸ்தூல பிருதிவியில் அரைக்கால் மாத்திரையான காரண குணங் களாகிய சப்தமும்,பரிசமும், ரூபமும்,ரசமும், நிஜ குணமாகிய கந்தமும் திருசியமாய் நிற்கலாயிற்று.
இவ்வாறு பஞ்சீகரித்த ஸ்தூல பூதங்களில் அப்புவின் கூறாய் உதிரமும் மஜ்ஜையும் பிருதிவியின் கூறாய் நரம்பும் சருமமும் மாம்சமும் என்பும் என்ற ஆறு தத்துவங்களு முண்டாயின. இப்படிக் குண்டான தத்துவங்களாறையுமே ஸ்தூல சரீர மென்றுரைக்கப்படும்.
முன்னஞ் சொன்ன சூக்கும தத்துவம் இருபதுடன் இப்போதிசைத்த ஸ்தூல சரீர தத்துவம் ஆறுஞ் சேர்ந்து ஆக இருபத்தாறு தத்துவங்களால் ஏற்பட்டதுதான் ஸ்தூல சூக்கும சரீர மென்னும் காரிய சரீர மென்றறிய வேண்டியது. இக்காரிய சரீரமே உத்தம ஜாதியாகிய மனிதர்கட் கேற்பட்டதென்றும், இன்னும் பசு, பக்ஷி முதலான மத்திம ஜாதிகட்கும் விருக்ஷ முதலான அதம ஜாதிகட்கும் தக்க தக்க தத்துவங்களா லுருவ மேற்பட்ட தென்றும் காணலாம். மேற்குறித்த மனித ஜனனத்திற்கு இகலோக வின்பமும் பரலோக வின்பமும் பெற வறிவுடைத்து. ஆதலால் அவைகளை உத்தம ஜாதி யென்றும் பசுபக்ஷியாதி ஜெனனத்திற்கு இகலோக வின்பத்திலும் அற்ப விருப்புடைத்து. - ஆதலால் அவை களை மத்திமஜாதி யென்றும், விருக்ஷ முதலானவைகள் இகபரசுக மிரண்டையும் விரும்பச் சக்தியிலது. ஆதலால் அவைகளை அதமஜாதி யென்றும் பகரலாயிற்று.
இம்மூவகை ஜாதிகளுமே நாலுயோனிஎழுவகைத் தோற்றம் எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவ பேதங்களாய் பல்புவனங்களாய் எண்ணரிய ஜீவ கோடிகளாயியங்குகின்றனவாம். இப்படிக்கான ஜீவேஸ்வர ஜகத்தைச் சிருஷ்டிக்கக் காரணமாயிருந்தவன் பிரம்ம, சைதன்ய பிரதிபிம்பனான ஈஸ்வரனென் றறியக் கடவாய்.
சிஷி: அறிந்தேன். அதில், துவித மற்ற அத்துவித சைதன்ய சுத்தப் பரப்பிரம்மமே கடவு ளென இதன் முன்ன முரைத்த தாங்கள் இப்போது துவித பாவனையான சங்கற்பங்கட் குட்பட்ட ஈஸ்வரனையே கடவுளாய்ச் சொல்வதென்னை?
குரு: நாமரூபமற்ற சுத்தப் பிரமத்தை யாதொரு சங்கற்பங்கட் குட்படுத்தவாவது இன்ன தன்மையுள தென் றுரைக்கவாவது நியாயங்காணப்படாமையால் அதனின்றும் பிரதி பிம்பித்த சாக்ஷாத் ஈஸ்வரனையே அனைத்துக்குங் காரணக்கடவுளாய்ப் பகரலாயிற்று. அஃதெப்படியேல்:- ஒரு கருப்பாசயத்துட் கருத்தோன்று முன்னம், அக்கரு இன்ன நிலைமையுடையது இன்ன வினைக்குரியது என்று சொல்லக் கிஞ்சித்தும் அடையாளந் தோற்றப்படா வரூபமாயிருத்தலனைய அச்சுத்தப்பிரம்மத்தையும் அரூபமாயெண்ண வேண்டும். அக்கரு மாதாவினுடைய கருப்பாசயத்துட் பூந்தபின் சொரூபப்பட்டுத் தோன்றி யதை இன்ன மாதிரிக்குரிய தென்று வீக்ஷணிக்கத் தக்கதாயிருப்ப தனைய சுத்தமாயையே காரண சரீரமாகவுள்ள அவ்வீஸ்வரனையுமெண்ண வேண்டும். தவிர, இந்த ஈஸ்வரனே "ஆதி " எனவும், அந்த பிரம்மமே 'அனாதி 'எனவும், அவ்வனாதியாகிய சத்தே இவ்வாதி யாகிய ஈஸ்வர சொரூபத்தில் அறிவாகாரமாயியங்குகின்ற தெனவும் அவ்வறிவாகிய சித்தே எச்சங்கற்பத்தையும் ஸ்வயம்புவாய் பிரேரிக்கி வல்லமையுடையதெனவும் அவ்வ ண்ணம் பிரேரிப்பதில், சிருஷ்டி, திதி, சம்ஹார, திரௌபவானுக்ரகமென்னும் பஞ்ச கிருத்தியங்களு முளதா மெனவும், இவ்வித கிருத்தியங்கள் புரியுமிடத்து அவருக்குச் சகளேஸ்வரனெனப் பெயர் வருமெனவு மவைகட் கன்னியமா யிருக்கு மிடத்து நிஷ்க ளேஸ்வர னெனப் பெயர் வருமெனவு மறிக சகள நிஷ்கள மிரண்டினும் நினைப்பும் மறப்புமற்று நித்ய வஸ்துவாய் விளங்கு நின்மல சொரூபனாகிய வொருவனையே ஈஸ்வரனாகிய கடவுளேனக் கருதுவதே யுண்மை.
சிஷி: அந்த ஈஸ்வரனுக்கும் முதற் காரணமாயிரா நின்ற மூலப் பிரகிருதியையாவது அதற்கு முதற் காரணமாயிராநின்ற பிரமத்தையாவது கடவுளெனக் கருதுக வென்றுன்னாமல் மூன்றாங்காரணமாய்த் தோன்றா நின்ற ஈஸ்வரனைமட்டும் கடவுளெனக் கருதுக வென்ற திர்த்த காரணமென்ன?
குரு: ஓர் செடியிற் புஷ்பித்த இதழையும் அதன்மகரந்தத்தையும் திவ்விய புஷ்பமெனப் புகல்வதல்லாமல் மகரந்தத்தை மட்டும் புஷ்பமென்றாவது இதழை மட்டும் புஷ்பமென்றாவது புகல நியாயந்தோன்றப் படாதது போன்று பிரமமெனவும், பிரகிருதி யெனவுமான இரண்டு மொன்றாய் நின்ற ஈஸ்வரனையே பொருளெனவும் அப்பொ ரு ளைச் சிருஷ்டிக்க ஈஸ்வரனாயிருந்தவனொருவனுங் காணப்படா மையால் அப்பொரு ளாகிய அவரே கடவுளெனவும் பகர்ந்ததே காரணமாம். இதனால், நீ விளம்பிய வண்ணம் ஈஸ்வரனை மூன்றாங்காரணமென்றெண்ண விடமின்றி முதற்காரண மென்றெண்ணவே யிடமுண்டாயிற்று.
சிஷி: இவ்வா றெடுத்துரைத்ததில் எனக்குச்சிறிது சந்தேகமுளது. அதை தீர்த்தருளப் பிரார் த்திக்கின்றேன். ஈஸ்வரனுக் கறிவாயிருந்த சுத்தப் பிரம்மம் அவ்வீஸ்வரனைச் சிருஷ்டிக்க வெண்ணித் தானே அவரை யுண்டு பண்ணினதாகும். அற்றேல், பிரம்மத்தை ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனாகிய உபாதானக் கடவுளெனச் சாற்றுவதை விட்டுப் பேதித்துப் பேசுவதென்ன? அன்றி ஈஸ்வரனைப் பிரம்மம் படைத்ததால் ஈஸ்வரனுக்குப் பிரம்ம பிரதிபிம்பனெனப் பெயரும் வந்திருக்கிறது. இதை மறுத்தற்கு மேதுவுளதோ?
குரு: யாமுரைத்த நியாயங்களின் தாத்பரியங்களை நீ யுணரா தவலமாயறைகின்றாய்! அதை யின்னமுந் துலக்கமாகவே சொல்வேம்: கவனித் தாய்ந்து கொள். சுத்த மாயையே காரண சரீர முதலாய தத்துவங்களாகவும், அதனுட் சைதன்னியமாகிய தானே உள்ளமா கவும், விளங்காநின்ற சாக்ஷாத் ஈஸ்வரனாய்த் தோன்றுமுன்னர் அப்பிரம்மம் யாவு மடங்க விருந்த மௌனமேயாம். அம்மௌனமாகிய சுத்தப் பிரம்மமும் அதின் பிரகிருதி யாகிய சுத்த மாயா சத்தியும் தனித்தனியே யாதொரு காரியத்தைப் பிரேரிக்கச் செயலற்ற தெனவும், பிரகிருதி மாயா சத்தியுடன் சேர்ந்த பிரம்மம் எக்காரியங்களுஞ் செயவல்ல தெனவும், அவ்வல்லமையுள ஈஸ்வர ஹிருதயமாகவே அறிவதற்கரிதாய் வாக்குக்கு மனதுக்கு மெட்டாஆத அகண்டாகாரமாகிய பரப்பிரம்மம் நின்ற தெனவும் அப்படி நின்ற சுத்தப் பிரம்மத்தையே இரவு பகலற்று இன்ப துன்பம் விட்டு ஆதியு மந்தமுமின்றி, ஆணுமன்றிப் பெண்ணுமன்றி அலியுமன்றி, அருவுமன்றி உருவுமன்றி இறப்புமின்றி பிறப்புமின்றி, விருப்புமின்றி மறப்புமின்றி ஞானமுமின்றி மோனமுமின்றி, நிறமுமின்றிக் குலமுமின்றிச் சிறிதுமின்றிப் பெரிதுமின்றி ஏகமின்றி யனெகமின்றிப் பாவமின்றி புண்ணியமின்றி நன்றுமன்றித் தீதிமன்றி நானுமன்றி நீயுமன்றி எங்குஞ் சம்பூரணமாய் விளங்குவதெனச் சொல்லலாகும். இதைத் தவிரப் பிரம்மம் பிரத்யேகத் தொன்றுளதென் றெண்ணொணாது. ஈஸ்வரனைப் பிரம்மப் பிரதிபிம்ப னென்று சொன்னது சொரூப நியாயம் பற்றியே ஆதலால், ஈஸ்வரனாய்த் தீரக்கப்பட்ட வொருவனே காரணக் கடவுளாகிய கர்த்தனாவான்.
சிஷி: மௌனப் பிரம்மமே தானாய் விளங்காநின்ற ஈஸ்வரனுக்கு நினைப்புப் பிரம்மமயமே யாமாகில் யாதொன்றை நினைக்கவாவது நிருமிக்கவாவது கூடாமையாய் விடுமல்லவா? ஆயின், அவர் பஞ்ச கிருத்தியங்க ளெவ்வாறியலும்?
குரு: அந்த நிச்சயங்க ளெல்லா முனக்குத் தெளித்துச் சொல்லி யிருக்க வறிந்திலை. ஆதலால், உனக்கிதுவரை யுறுத்திய வனைத்தும் கடலிற் காயங் கரைத்தது போற் காண்டன. இப்படிப் பட்ட மௌட்டிய முனக் குண்மையா யிருக்குமேல், இப்பரம சூட்சுமங்களை யாமெத்தனை கால மிடை விடாதிசைக்கினும் அத்தனையும் பயனிலதேயாகும். ஆகலால், நின் கருத்தெவ் வணமுளதெனக் கிளத்துவா யாயின் பின்னர் நீ கடாவுங் காரியங்கட் காயமொழி யாம் புகலத் தகுமன்றோ.
சிஷி: சுவாமி! என் சற்குரு நாதா! தமியேன்பேரில் வியசனம் வேண்டாம். தங்களை விட்ட கன்றிருந்த பின்னர் என்னுடைய மனதிலோர் தீர்மானத்தைக் கோரி யிவண் வந்தேன். அதாவது; தேவனொருவ னுண்டென்றதுபோற் சிந்தித்து நங்குரு வானவர் அந்நிலையி னின்று சாதிப்பதாயிருக்கின்றதே அதைத் தவிர்த்து நம்வழியி லழைத்து விடய சுகங்களில் விடுத்து நன்று செய்ய வென்று குறித்து யான் வந்ததாகும். அப்படி வந்த தமியேற்குள்ள சந்தேகங்களைத் தேவரீரிடந் தர்க்கித்து வாது விளைத்ததில் கடவுளில்லவே யில்லை, கண்டதே காக்ஷி கொண்டதேகொள்கை யென்ற என்னுடைய தீர்மானத்தைத் தங்களுடைய வல்லமையாகிய கல்வியானது பேதித்துக் கடவுளுண்டெனவே சாதித்து வருகிறதாயிருக்கி றதில், இதுவரை பிரம்ம நிச்சயத்தைப் பற்றி யாதொரு சகடுமெனக்கில்லை. அது உறுதியா யிற்று. இதன் மேல் நிரூபிக்கின்ற ஈஸ்வரன் விஷயத்தில் எனக்கின்னுஞ் சகடு நிவர்த்தி யுண்டாகாததால், மறுத்து மறுத்து யான் தங்களை வினாவும்படி நேரிட்டது. ஓ! ஐயனே! இதைத் தவிர வேறு காரணங்க ளென்னிடத்திருக்க வினிக் காண்பதன்று. தாங்கள் கிருபை கூர்ந்து என்னுடைய வினாவுக்கெல்லாம் ஐயமற விடைதரப் பிரார்த்திக்கின்றேன் அருள் செய்மின்.
குரு: ஓ! விஷயப் பிரியா ! மிகவுஞ் சந்தோஷம். நீ கடாவிய சங்கைக் கருத்தம் அதற்கு முன்னதாயுரைத்த காரணங்கண்மூலம் பரிஷ்காரமாய் வெளிப்பட்டே யிருக்கிறது. அதாவது: மௌனமாகிய பிரம்மத்திற்கு யாதொரு நினைப்புக்குரிய உளமில்லையெனவும், ஈஸ்வரனாய் வந்த பின் சர்வ வல்லமையுமுள அந்நினைப்பாகிய உள்ளம் உண்டாயிற் றெனவும், அதனாற் பஞ்ச கிருத்தியங்களு நடத்தப்படுவ தெனவும் அறிய வேண்டியதே. அதிற் சங்கற்ப விகற்பமு மற்ற சுத்த சைதன்யத்தை ஈஸ்வரர்க் கிருதயமாய்ச் சொல்லப் பட்டதில் அதையே துவிதமாகவும் அத்துவிதமாகவும் இருவகையாய்ச் சொன்னது யாதென ஈண்டு தர்க்கிக்கக் கூடும். அதன் றன்மையையுஞ் சுருக்கமாயிங்ஙனம் பகரக்கேள்; ஈஸ்வரனுக்கு ஸதூல சூக்கும காரணமென மூன்று சரீரங்களுளது. அவற்றுள், ஸ்தூல சரீரமோ, ஸ்தூல பஞ்ச பூதங்களிற் றோன்றிய ஸ்தூலசரீர சமஷ்டியுமான பிரபஞ்ச வடிவம் இதையே விராட்டென்றும் ஈஸ்வரனுக்கு ஜாக்கிர மென்றும் சொல்லலாகும்.சூக்கும சரீரமோ, சூக்கும பஞ்ச பூதங்களிற் றோன்றி சூக்கும சரீர சமஷ்டியுமான வடிவம் இதையே ஹிரண்ய கருப்பமென்றும் ஈஸ்வரனுக்குச் சொப்பன மென்றுஞ்சொலத்தகும். காரண சரீரமோ, மேற்குறித்த ஸ்தூல சூக்கும மிரண்டிற்குங் காரணமாயிருக்கின்ற மாயை. இதையே, அவ்வியாகிருத மென்றும் ஈஸ்வரனுக்குச் சுழுத்தி யென்றுஞ் சொல்லலாகும். இப்படி மூன்று சரீரமா யிராநின்ற ஸ்தூல பூதம் - 5, ஸ்தூல சமஷ்டி - 6, சூக்கும சமஷ்டி - 20, மாயை - 1, ஆக 32 தத்துவங்களுடனும் பொருந்திச் சகல புவனங்களிலுங் கலந்து நிற்பன் ஈஸ்வரன். அது எப்படி யென்னில்: சிதாபசன் தன் மூன்று சரீரத்திற்குரிய 27 - தத்துவங்க ளுடனும் பொருந்தித் தன் சரீர ஆத்யந்தமுங் கலந்து நிற்பது போலவாம். இவ்வாறு கலந்து நிற்கும் ஈஸ்வரற்கே ஆத்மாவாகிய உள்ளம் - துவிதமான நினைப்பா யிருந்து கொண்டிரு க்கும். அந்த நினைப்பு, சர்வ ஜீவன்களுடைய பிறப்பு, இறப்பு, பசி, தாகம், சுகம், துக்கங்க ளிலும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் பிறப்பிறப்புக் குரிய பிராண வாயுவுக்கும் சுகதுக்கத்திற்குரிய மனதுக்கும் யாதொரு சம்பந்தமுமின்றி, அழிவு படாததாய் அளவில்லாத தாய் பரமாத்ம ஸ்வரூபமாய் ஆகாயத்தைப் போல நிறைந்து நிபீடிகரமாய் எல்லையற்றியங் குவதையே ஈஸ்வரனுக்கு பிரம்மவுள்ள மென்றியற்றலாகும். அவ்வுள்ள மெங்கணு நிறைந் தளவு படாதன வென்பதெப்படி யெனில்: சிதாபாசர்களுடைய நினைப்பிலிருந்து நிமை கொட்டற்குள் இன்ன காரியம் பிறக்கு மென்றாவது அது இவ்வள வென்றாவது அளவிடக் கூடாமையா யிருப்பது போலுமாம். அப்படிக்கான நினைப்பைச் சுத்தப் பிரம்ம ஞானிகள் வசமாய்க் கண்டிருப்ப தொப்ப ஈஸ்வரனும் பிரபஞ்சாதீதமாயிருந்து அத்துவிதமான பிரம்ம ஹிருதயத்தையும் வசமாய்க் கண்டிருக்கின்றனன். இவ்வண்ணம் பிரபஞ்சாதீதத்தில் பிரபஞ்ச சகிதத்தை மறந்து நினைப்பில்லாமலும் பிரபஞ்ச சகிதத்தில் மறப்பில்லாமலு மிருப்பதால் ஈஸ்வரனை நினைப்பு மறப்பு மற்றவனென லாயிற்று. இன்னமும் அந்த ஹிருதயத்திற்கு உள்ள மென்றும், உள்ளென்றும் பெயருண்டா யிருத்தலால், ஈஸ்வரனைத் திருவுள மென்றும், கடவுளென்றுஞ் சொல்ல வந்தன எப்படியேல்: திரு = மேன்மையாகிய, உள்ளம் = ஞான மென்றருத்தமான பிரகாரம் மேன்மையுள ஞானமென்கிற திருவுளமென் றும், கடம் = சரீரம், உள் = ஞானம் என்றருத்தமான பிரகாரம் சரீரமும் அதில் ஞானமு மென்கிற கடவுளென்றாம். இப்படிக்காய தன்மையை உன்னுள்ளத்திலேயு மறிய நீ பாத்தி யப்படுவாயேல் அறிவ தெளிதாகும்.
சிஷி: இப்படிக்கான கடவுளர்க்குச் சூக்குமபஞ்ச பூதங்களிற் றோன்றிய சூக்கும சரீர சமஷ்டியும் சூக்கும சரீர மெனவும், ஸ்தூல பஞ்ச பூதங்களிற்றோன்றிய ஸ்தூல சரீர சமஷ்டியும் ஸ்தூல சரீர மெனவு மாயின், அந்த ஸ்தூல சூக்கும பூதங்களைத் தோற்றுவித்த விட்சேப சத்தியின் காரியமே அந்தச் சரீரங்களை யுண்டு செய்ததாய்க் காண்கின்றது. அவ்விதம் உண்டு செய்யுஞ் சத்தியை யன்றி ஈஸ்வரனுக்கு ஸ்வயம்புவாயுண்டு செய்யுங் கருமம் உண்டோ வெனவும், ஸ்தூல பூதத்திற்குக் காரணமாயிருந்தது சூக்கும பூதம்போல சூக்கும பூதத்திற்கு காரணமா யிருந்த பூதமெதுவெனவும் விளம்ப வேண்டும்?
குரு: விட்சேப சக்தி யென்பதே ஈஸ்வர சங்கற்பமா யிருத்தலால், அதின் காரியமும் ஈஸ்வரனுக் கன்னியமல்ல. சூக்கும பூதத்திற்குக் காரணமாயிருந்தது விட்சேபசக்தியி னினைப்பேயாம் பிறவும் மாயா காரணமாகிய காரணபூதமென்பர்.
சிஷி: இன்னு மொரு சந்தேகம்; சிதாபாசரை மூன்று குணங்களில் விபரீதப்படச் சிருஷ்டி ப்பதற் குண்டாய காரணம் யாது?
குரு: அச் சிதாபாசர் அசுத்த மாயா பிரதி பிம்பர்களாதலால்,அம் மாயைக்குரிய சுபாவகுண மூன்றும் அவர் கூடப் பிறந்தன, அதுவே காரணமாம்.
சிஷி: விட்சேப சக்தியினிடமாய் ஆகாய முதற் பஞ்ச பூதியங்கள் முறையே தோன்றின தென்பதாய் இவ் வியாசத்திற் றாங்கணவின்றதற்கு முழு விரோதமாய், "பிரம்மாவானவர் முற்காலத்தில் ஜலத்தைச் சிருஷ்டித்து அதில் வீரமாகிய விந்துவை விட்டார். அஃது முட்டையாய் மிதந்தது கண்டு அதை யுடைத்த போழ்து, மூன்று குணங்க டோன்றி அக்குணங்களிற் கெடாத பஞ்ச பூதங்களு முண்டாயின " என்று விருத்தாசல புராணம் கிரிச் சருக்கம் 12-வது கவியிற் கூறிய தென்னை?
குரு: ஞானமாகிய அக்கினியைப் பிரகாசிக்க விடாமல் மக்னஞ் செய்து கொண்டிருக்கிற ஜல ரூபமாகிய அக்ஞானத்தி னிடமாய்ப் பிரணவமாகிய விந்தை பிரம்மன் மகிமைப் படுத்திய வுடனே அங்ஙனம் விட்சேப சக்தி யுதயமாக ஓர் கருவாய்த் திரண்டது. அக்கரு பூரண மெய்தியது தெரிந்து இரகசியத்தை விட்டு பகிர்முகப் படுத்தியபோது அது சாத்விக ராஜத தாமத மென்னு முக்குணங்களுந் தோன்றக் கெடாத சூட்சும பஞ்ச பூதங்களு முறையே அச்சக்தியினிடமிருந் துண்டாயின, என்று குறிப் பருத்தத்தாற் றெளிந்து கொள்வாயாக.
சிஷி: இன்னொன்று மானவதர்ம சாஸ்திர மென்பதின் 1-ம் அத்தியாயம் 8-9-12-23-ல் "கடவுள் தியானஞ் செய்து பலவித பிரஜைகளைச் சிருஷ்டிக்க வேண்டுமென் றாசை கொண்டு முதலில் ஜலங்களைச் சிருஷ்டித்தான்: பின் அந்த ஜலங்களுக்குள்ளே ஒரு வித்தை வைத்தான் " என்றும் " அந்த வித்தானது பொன் ரூபமாயுஞ் சூரியப் பிரகாசமாயுமிருக்கிற ஒரு முட்டையாயிற்று; அம்முட்டையில் அக்கடவுள் பிரம்மாவாகிப் பிறந்தார் " என்றும் " அந்தப் பகவான் அம்முட்டையில் ஒரு வருஷம் வாசம் பண்ணி பின்பு தன்னுடைய தியான த்தினால் அம்முட்டையை இரண்டு துண்டாகப் பிளந்தார் " என்றும், " அவ்விரண்டு துண்டு களினால் வானத்தையும் பூமியையு மேம்படுத்தினார்,நடுவில் ஆகாயத்தையும் எட்டுத் திக்கு களையும் ஜலங்களினிடத்தையும் ஸ்தாபித்தார் " என்றுஞ் சொல்கிற வரலா றென்னை?
குரு: அது காரண தேயுவிற் பிரதிபிம்பித்த தேவன் காரண அப்புவினிடமாய்த் தோன்று மாறையும், அங்ஙனந் தோற்றியதினின்றும் காரண பிருதிவியினிடமாய்த் தோன்றி ஈஸ்வரா னுக்ரகத்தாற் கீழ்மேல் என்கிற மாயா பிரபஞ்சத்தை ஜாக்ரத்தில் வெளிப்படுத்து மாறையும் குறிப்பால் வெளிப்படுத்தியதாகும்.
சிஷி: தோற்றிய கடவஸ்துக்க ளெல்லாம் நிலை யின்மையாகவே காண்பனவா யிருத்தலால், ஈஸ்வர சரீரமும் நிலையின்மையாமல்லவா? ஆயின், அது ஈஸ்வரற்குக் கேவலமலவோ?
குரு: ஸ்தூல சரீர சமஷ்டியும், சூக்கும சரீர சமஷ்டியும் ஒன்றுக்கு ளொன்றாய்த் தோன்றியபடி யொடுங்கும் போழ்து ஈஸ்வரனுக்கு ஸ்தூல சூக்கும சரீரங்களின்றி காரண சரீரமாத்திரமா யியங்கும். அது மஹாகாரணத்தி னிலைத்து நித்ய வஸ்து தத்துவமாய் நின்று பரிசுத்த ஞானத் தாற் பழையபடி பஞ்ச கிருத்தியங்கட்குரிய தன்னுடைய மூன்று சரீரங்களாகிய தோற்றங் களையு முறையே வெளிப்படுத்துவதாகும். இவ்வடை வாற்றான் மூன்று சரீரங்களையும் ஈஸ்வரனுக்குச் சகள மென்றும் நிஷ்கள சகள மென்றும் அவைகட் கக்கிரகித்து மஹா காரணமாய் விளங்கும் போது நிஷ்கள மென்றும் அதுவே கேவல மென்றும் உரைக்க ஹேது வாயிற்று. மேற் சொன்ன மஹா காரணமானது விந்து தத்துவ மென்கிற மூலப் பிரகி ருதியின் சுபாவ நிலயமெனக் கணிப்பாய்.
சிஷி: ஓ! சுவாமீ! இப்படிக்கு அண்டபிண்ட சராசரமாய், அதற்கப்பாலு ம்பபாலாய் விளங்கிய சர்வேச்சுரனை ஒருவன் றரிசிக்க வென்னில் எப்படிக்கியலும்?
குரு: ஐங் கிருத்தியத்தி னிமித்தம் பஞ்ச பூதங்க ளென்னும் ஐந்துருவும் ஓருருவாய் ஈஸ்வர னானவர் சித் சொரூபமாய்ப் பிரதிபிம்பித் திருக்கின்றனர். அப் பிரதி பிம்ப தரிசனத்திற் குரிமைப்பட்ட சத் புருஷர்கட்கு அத்தரிசனங் கிடைக்கும். அதில் எவரெவர் என்னென்ன பாவனையாய்ச் சிந்தித்தார்களோ அன்னன்ன பாவனையாயும் அந்தப் பிரதிபிம்பன் பிரகா சிப்பன். அதற்குப் பிரமாணம் ஏதென்னில், மனிதனுடைய சரீரத்தில் ஸ்தூல தத்துவமாயி ருக்கிற ஆறினுக்குள் சூக்கும தத்துவம் 20-ம் ஓர் சொரூபமாகவும், அதனுள் காரண சரீர தத்துமான அவித்தை மாயை 2-ம் ஓர் சொரூபமாகவும், இதின் முறையே பிரதி பிம்பித்த ஜீவன் ஈஸ்வரம் என்னும் 2-தத்துவமும் ஓர் பொருளாகவும் இவற்றிற் கெல்லாம் அதிஷ்டா னமாக விரா நின்ற அறிவாகார ஆன்மா ஓர் பொருளாகவுங் காணப்படுதல் போல ஈஸ்வர சொரூபத்திலேயுங் காணத்தகும். அப்படிக்கான பிரமாண்ட சொரூபத்தி ற்குரிய தத்துவங்களில் அபஞ்சீகிருத பஞ்ச பூதங்களுமொன்றாய் நின்ற ஆன்ம தத்து வத்தையே மேற்கண்டபடி ஈஸ்வரனானவர் பிரதி பிம்பித் திருக்கின்றனரென விசைத் தேம் யாம் அவ்வான்ம தத்துவமாகிய சைதன்யம் ஸ்வயம்புவா எவ்வித சொரூப த்தையு முண்டுசெய்து கொள்ளவும் அதை ஆவரணிக்கவும் சக்தியுள தென்றறி.
சிஷி: இந்தப் பிரகாரம் அகண்டாகார சொரூபத்தில் ஆன்ம தத்துவமா யிராநின்ற ஈஸ்வர சைதன்யம் ஏனைய தத்துவங்களிலும் கூடுங்கால் அஃதெத்தனை விதமாகும்?
குரு: அஃது இன்னு மைந்து விதமாகும். எவ்வாறென்னில்; அவ்வித்தையோடு கூடின சைதன்யத்தை ஜீவசைதன்யமென்றும், அந்தர்க்கரணங்களோடு கூடின சைதன்யத்தைப் பிரமாத்துரு சைதன்யமென்றும், அந்தர்க் கரணங்களின் விருத்தியோடு கூடின சைதன்யத்தைப் பிரமாண சைதன்யமென்றும், இந்திரியங்களோடு கூடின சைதன்யத்தைப் பிரமேயசைதன்யமென்றும், இந்திரிய விஷயங்களோடு கூடின சைதன்யத்தைப் பல சைதன்யமென்றும் பகரலாகும். இந்தச் சைதன்யமாகிய ஆத்மாவையே மாயா சக்திக் காதாரமான அத்வைதாநந்த சொரூப மென்றும், அதற் கைந்தி லக்ஷண முளவென்றுஞ் சொல்லப்படும். எப்படி யென்னில், காலத்திரயத்திலும் ஆதியாத்மீக ஆதி பௌதீக ஆதி தெய்வீக மென்னுந் தாபத்திரயத்திலும் ஒன்றாயிருக்கையால் அது சத்து லக்ஷணம். இருட்டறைக்குள் நன்றாய் மூடி முக்காடிட்டுக்கொண்டு வெளிச்ச முதலிய பிரகாசமின்றி யிருந்து தான் முன்னம் பார்வையிட்டிருப்பதுகளை எண்ணுகில் அவைகள் பிரத்தியட்ச மாய்த் தோற்றுவதனால் அது சித்துலக்ஷணம். சர்வ ஜீவர்கள் சம்மதமாகச் சுழுத்தியவத் தையி லிருக்கிறபடியால் அது ஆநந்த லக்ஷணம். ஒரு காலத்திலும் அழியாதபடியினால் அது நித்ய லக்ஷணம். எங்கணும் வியாபகமாய் நிராமயமா யிருக்கிறபடியால் அது பரிபூரண லக்ஷணம் என ஐந்தாம்.
சிஷி: இப்படி ஆத்ம தத்துவமா யிராநின்ற ஈஸ்வரனுக்குச் சித் சொரூபம் எத்தன்மை யெனவும், அவருடைய வினோத சொரூபமாகிய அண்ட புவனங்களில் அவருக்கு நிலயமான வாசஸ்தல மெங்கெனவும் விரித்துரைக்க வேண்டும்?
குரு: ஓ! நுண்ணறிவுடையாய்! இந்த நியாயத்திற் கந்த நியாய மெடுத்துரைக்க வேண்டியது தக்கதுதான். ஞாபகமாய்ச் செவி கொடுப்பாயாக. இதோ வரைந்திருக்கிற காரிய சரீர பாவனைப் படத்திற் கண்ட சூக்கும தத்துவம் - 20, ஸ்தூல தத்துவ மென்கிற ஷட்பாகத்துவம் - 6, ஜீவன் -1, ஆக 27 தத்துவங்களா லேற்பட்ட சிதாபாச மென்னும் வியவகார ஜீவ தேகத்தில் ஆத்ம சொரூபமாகிய உள்ளம் உச்சியி லிருப்பதொப்ப அண்ட பகிரண்டங்கட்குந் தலையாய் விளங்கும் பிரமாண்டத்தினுச்சியே சர்வேஸ்வரனுக்குப் பிரதான நிலயமாகும். சிதாபாசதேகத்தில் நினைப்பாகிய மனம் விருத்தி கெட லலாடத்திலிருப்ப தொப்ப அவ் வண்டவுச்சிக்கும் கீழண்டமே ஈஸ்வரனுக்கு இரண்டாவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தின் கண்ட ஸ்தானத்தில் நினைப்பாகிய மனமிருப்ப தொப்ப கிருத்தியங்க ணிமித்தம் மண்ணும் விண்ணும் பொருத நின்ற மத்யஸ்தானமே ஈஸவரனுக்கு மூன்றாவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தி னெஞ்சு ஸ்தானத்தில் விசாரிப்பாகிய புத்தி யிருப்பதொப்ப மேலே சொன்ன மண்ணும் விண்ணும் பொருத நின்ற மத்ய ஸ்தானத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு நான்காவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தின் நாபி ஸ்தானத்தில் யாதொரு காரியத்தை நடாத்த ஆயத்தப்படுகிற சித்த மிருப்ப தொப்ப மேலே கண்ட புவனத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு ஐந்தாவது நிலயமாகும். சிதாபாச சரீரத்தின் பௌத்ர ஸ்தானந் தொடங்கி தேக ஆத்யந்தமுங் கலந்து நானென்றபிமானிக்கிற அகங்கார மிருப்ப தொப்ப மேற் சொன்ன புவனத்திற்குங் கீழுள்ள புவனமே ஈஸ்வரனுக்கு ஆறாவது நிலயமாகும். இந்த ஆறு நிலையங்களினும் விளங்கா நின்ற சர்வேசுரனுக்கு இன்னும் பிரீதியான ஓர் நிலய முண்டு. அதுதான் மகான்களிருதயம். இப்படி வாசஞ் செய்யா நிற்கும் ஈஸ்வரனுடைய சித் சொரூபம். விஸ்வனென்னுஞ் சிதாபாச வடிவ பாவனையாய் லலாடஸ்தான ஞானநேத்ர தேஜோ மயமாய் ஆநந்தமூர்த்தமா யிருப்பதென்றறியக் கடவது. இந்நியாயத்தைக் கொண்டே, ஈஸ்வரன்! " தன்னைப்போல ஜீவனையும் படைத்தார் " என்று சாற்றற்கும் ஓர் நியாயம் வந்தது காண்க.
சிஷி: சர்வேசுரனாகிய தேவனானவர் இன்னணஞ் சொரூபியா யிருந்து கொண்டிருக்க சிலர்கள் "தேவன் அரூபி" என்றதிர்ப்ப தெதனால்?
குரு: நல்வினையுந் தீவினையுமின்றி ஆத்மாநந்தா தீதமாயுள்ள பரப்பிரம்மம் தனக்கன்னியமல்ல தானும் வேறல்ல; சர்வமும் பிரம்மமயம்; அதுவே தான் என்கிற நிர்விகற்பத்தினிலைத்து இன்ப துன்பமின்றி நிர்ச்சலனமாய் நிர்ச்சங்க மாய் நிர்விகாரமாய் நிர்க்குணமாய் நிர்மலமாய் நிராமயமாய் இராநின்ற சுத்த மெய்ஞ்ஞானி யானவர்கள் ஈஸ்வரற் குள்ளமாயிலங்கும் பரமபதத்தைப் பெறத் தக்கவர்க ளாதலால் அவர்கண் மட்டில் தேவனை அரூபியென நுவல நியாய முண்டு. மற்றையோர்க் கவ்வித நுவல எட்டுணையேனு நியாயமில்லை. இவ்விரு தன்மையு முணராமல் தேவனை அரூபியென வெண்ணிக்கொண்டு ஒருவன் தேவாராதனை முதலிய சத்கர்மங்களைச் செய்யில் அக்கர்மங்களை அரூபியாகிய தேவன் எப்படித்தானறிவார். அதற்கெவ்வித பதவியைக் கொடுப்பார், அவர் தரிசன மெப்படித்தான் கிடைக்குமென்றும்; ஆராதனை செய்பவன் ஸ்தோத்திர ங்களை அரூபியாகிய தேவன் எந்தக் காதாற் கேட்பார் பின்னரெந்தவாயா லுத்தரஞ் சொல்வார். அவன் பணிவிடைகளை எந்தக் கண்ணாற்பார்ப்பார் என்று மெண்ணுவதோடு தேகமில்லாவிடில் ஹிருதயமில்லை ஹிருதயமில்லாவிடில் தேகமில்லை எனவறிந்தபடி ஹிருதயமில்லாத அரூபத்தை யிருதயமுள்ள கடவு ளெனச் சாற்றுவதுந் தப்பெனச் சிந்திக்க வேண்டும். ஆண், பெண், அலி எனுமடையாள மேதுமின்றி அரூபமாகிய வஸ்துவை ஆண்டன்மையாய்த் தேவனென்றும், ஆண்டவனென்றும் ஒருவன் பேசுவதற் கெப்படித்தானிடம் வந்தது? தேவனை அரூபி யென்று சொன்னால் அவர் கிருத்தியங்களாகிய இவ்வுலகையும் அவர் ஸ்வயம்புவாய் நடத்த ஹிருதய மற்றவரென்றே யாகும்.
ஹிருதயமுள்ள கடவுள் தான் தேவன் என்னில், அந்த ஹிருதயமிக்க ஓரிடமும் வேண்டும். அப்படிக்கிடமுள்ள ஹிருதயத்தின் கோருதற்படி ஒன்றைப் பார்க்க விழியும், கேட்கச் செவியும், வாசனை யறிய நாசியும், ஒரு வாயும் இந்திரியங்களாயிருக்க வேண்டியதுடன் அந்த ஹிருதயம் வசிக்குமிடமாகிய வீட்டின் கண்ணே ஏதேனுங் கிராண முண்டாகில் அதையறிய உடம்பும் அவசிய மிருக்க வேண்டும். இப்படிக்கில்லாமல், அந்த ஹிருதயமானது தனியே யிருக்க யாதொரு முகாந்தரமுங் காணப்படவில்லை.
தேவன் சொரூபியா யில்லாமல் அரூபியா யிருக்கில் அவருக்கு நிலயமாகிய நித்ய வாசஸ்தலமும் ஓரிடத்துமில்லாமல் ஏகமேயாகும். அப்படிக்கேகமேயா னால் அவருடைய சொந்த வீடென்கிற சுவர்க்கம் - இவ்வுலகுக்குமேலென்ன வாவது அதினனு போகஞ்சிலாக்ய மென்னவாவது அதைப் பரலோக மென்ன வாவது எவ்வளவுங் கூடாதாய் முடியும்.
பராபரனை அரூபியென்று சொல்பவன் - பராபரன் பேசினா ரென்றாவது நோக்கினாரென்றாவது செவி கொடுத்தா ரென்றாவது வாசனையறிந்தா ரென்றாவது யாதொன்றைக் கொடுத்தா ரென்றாவது சொல்லப்படு வதிலொன்றை ஒத்துக்கொள்வானேல், அது பராபரனுக்கு ரூபமுண்டெனவே காட்டும்.
இத்யாதி காரணவகளால் பிரபஞ்ச சகிதத்தில் ஈஸ்வரனுக்குச் சொரூப முண்டெ னவே ரூபகமாகும்.
இத்தை நன்காயத் திடமில்லாமல் கறுத்ததெல்லாந் தண்ணீர், வெளுத்த தெல்லாம் பால் என்னு மந்த மதியோர்கடான் அரூபமெனப் பேசுவார்கள். அது பற்றியுனக்கு எவ்வளவேனுஞ் சந்தேகம் வேண்டியதின்று.
சிஷி: அற்றேல், சில புராணங்களில் "கடவுள் அசரீரியா யுத்தரஞ் செப்பினார்" எனச் சொல்லப் படுகின்றதே அஃதெவ்விதம்?
குரு: கடவுள் தமது சித் சொரூபத்தை ஆவரணித்து சங்கதி தெரிவிப்பதற்காக மட்டும் சப்தமிட்டுத்தரங் கொடுப்பதே அது.
சிஷி: அற்றேல், "கைகால்களில்லாம னடக்கிறவனும், கிரகிக்கிறவனும், கண் ணில்லாதவனாய்க் காண்கிறவனும், செவியில்லாதவனாய்க் கேட்கிற வனும், ஒருவனாலும் அறியப்படாதவனா யிருக்கிறவனு மெவனோ அவனைத் தேவெனச் சொல்லுகிறார்கள்" என்பதாய் நூல்கணுவல்வ தென்னை?
குரு: ஈஸ்வரனுடைய உள்ளமாம் போதப் பிரமத்தினின்றும் நினைப்பாய்க் கணிக்கப்படும் ஞான தத்துவத்திற்கு அத்தன்மைகளுளவால், அவ்வாறு நூவலலாயிற்று. அந்த தத்துவம் கர்த்தாவுடைய ரூபாரூப நிஷ்கள சகள ஸ்வரூ பத்திலேயே உள்ள தென்று திட்டமாய்த் தெளிக.
சிஷி: சத்கர்ம நெறிநின்று கர்த்தாவை அரூபி யெனக் கருதித் தொழுபவர்கட்கு ஏதேனுஞ் சுகம் லபிக்குமோ? லபிக்காவோ?
குரு: அப்படிப்பட்டவர்கள் அறம்பட வியற்றும் ஜீவகாருண்ய தர்மங்களானவை மட்டுந் தங்களைச் சாரப் பெறுவார்கள். இலதேல், அவையும் பொருந்தா. தேவா ராதனை வணக்க முதலியவைகள் அவரைச் சேரா தொழியும். ஏனெனில், ஒரு தனவானிடம் அனுதினம் யாசித்து ஜீவனஞ் செய்து வந்த ஓர் வறுமையாள னானவன் தன் பேரவாவால் அந்நிதியின் பெருந்திரவியமெல்லாம் தனக்குச் சொந்தப்படக் கனவு கண்டு தன்னுடையதென வெண்ணி அக்கனகனிடம் யாசிப்பதையும் விட்டுத் தானோர் தனவானெனத் தீர்மானித்துத் திரியுங்கால் அவனை முன் னறிந்த வொருவன் கண்டு, ஓ! யாசகீ! உன் கலாக்ஷேபஞ் செவ்வையாய் நடந்து வருகின்றதோ வென்ற நிமிஷம் மிகச் சினந்து என்ன சொன்னாய் உன்னைப் போலவா நாமும், இவ்வூர்ப் பொன்னன் பொருளெ ல்லாம் எம்முடைய தென்றறியாயோ என்று விரைந்து பறைந்து அப் பொருளி லோர் சிறு காசேனுந் தனக்குபயோகப்படாமலும் யதார்த்தப்படி யாசித்துயிர் வாழாமலுந் தொலையலானது போல, தனக்குக் கிரமமாய்க் கடவுள் வத்சலத் தாற் கிடைக்கப்பட்ட அறிவைக் கொண்டே ஜீவகாருண்யம் ஈஸ்வரபக்தி பாசவைராக்கியம் பிரம்மக்ஞானம் என்னு நான்கு முறைமையு முணர்ந்து தன்னாலியன்ற மட்டும் அறத்தின் வழி நின்று அத்தன் பதந் தொழுதேத்தி யருள் பெற்றுய்யாமல் பிரம்மக் ஞானப் பிரயோஜன மென்னும் பெருங்கதிக்கு மட்டும் ஆசை வைத்து அதற்குரிய சாந்த சாஸ்வத நியாய நிரூபணங்களையும் நூல் களையு நன்குணராது நெருப்பென் றெழுதிய ஏட்டை அடுப்பில் வைத்துக் கொண்டயராம லூதியதனைய அத்வைத மார்க்கம் போற் கடவுளை அரூபமாய்ப் பேசித் துவைத மார்க்கம் போல் அனுஷ்டிப்புகளைச் சொல்லா நிற்கும் புஸ்தகங்களைச் சதா வாசித்து அவ்வழி நடந்து அனன்ய பாவகுண ஐக்யரசப் பிரதான ஜன்மரகித பரம மோக்ஷந் தனக்குச் சுதந்தரந் தானெனச் சிந்தித்து நியாயமாயேற்பட்ட நூல்களையும் நூலாய்ந்தோர்களையுஞ் சந்தித்தாற் சீறி விழுந்து தன் வழியே பெரிதாய் மெய்ஞ்ஞானிகள் போற் பிதற்றி அம்மெய் ஞ்ஞானத்தில் லேசமுங் சொந்தப் படாமல் இல்லறந்துறவற மென்னும் இரண்டுங் கெட்ட தன்மையாய் "ஆய்ந்தோர்ந்து பாராதான் தான்சாகக் கடவன் " என முடிவதாலென்க. பிறவும் கேள்.
சூரிய அஸ்தமான காலத்தின் மூடுண்ட அந்தகார இருண் முழுதுஞ் சூரிய தரிசனத்தாலன்றி நாசமாகா தென்றறியா அவிவேகிகள் அனந்தம்பேர் கூடி அனந்த ஆயுதங்களால் அவ்விருளை யகற்ற வென்று அடித்தும் வெட்டியும் குத்தியுமான முயற்சியிலிருப்பதுபோல மனோலயமாகாமல் மனந்தடித்து மனம் உருவமாகவுள்ள இச்சாவசத்தோர் அக்ஞானத்தைக் கெடுத்துப் பிரக்யா மாத்ர மான அரூப மெய்ஞ்ஞானத்தைப் பெற வேணு மென்று விடா முயற்சி செய்வ தையு நினைக்க நியாய முண்டா யிருப்பதுமன்றி, ஆத்மார்த்த மறியாமல் வேதாந் திக ளெனவும் சூன்ய மார்க்க மறியாமல் சந்யாசிக ளெனவும் தன்னைத் தானறி யாமல் பந்த மோக்ஷ மெனவும் சொல்லிக் கொள்ளுஞ் சுமடர்களை மான அவர்களை யெண்ணவும், மகிஷம் ரிஷபத்தையும், கர்த்தபம் துரகத்தையும், நேசிக்க எண்ணியதுபோலும் தரைவாழும் ஜெந்து நீர் வாழும் ஜெந்துவையும் நீர் வாழும் ஜெந்து தரை வாழும் ஜெந்துவையும் பிரிவற்று நேசித்திருக்க முயன்றது போலும் அவர்கணின்ற நிலையை ஊகிக்கவும் ஹேது வுண்டா யிருக் கிறது. இன்னமும்;
இப்படிக் கொவ்வாவழி நிற்பவர் காரிய மெப்படிப்பட்டதேல், அதிமோக த்தால் அழகிய மானைப் புணரவென்றெண்ணிய வொருவன் அம்மானைப்போ லுருப்பட்டுத் தானுந் தொடரச் சாத்தியமின்று, தன் மனித உடம்பொடு தொடர்ந்து கானகந் திரிந்து பரதவித்துக் கடைசியிற் றன் கருத்து நிறைவேறா தவலப்பட்ட தொக்கும்.
இவ்வித பிரமாணங்களால் சம்சாரதுக்க நிராகரண நிரபேட்சா பிரகாச அரூப ஞானத்தை விரும்பினவர், தானும் அத்தன்மையையே பொருந்திற்பயன்படு மென்றும் இலதேற் பயன் படாதென்றும் தீர்க்கமாய்க் காணலாமன்றோ. இதனால், சம்சாரதுக்க பீடித மான பெந்த தொந்தங்கட் குள்ளான வியவகார ஜீவர்கள் அஜட அத்வைத நிலையைக் கருதுவ தொழிந்து துவைத நிலையைக் கருதுவதே சிலாக்யம்.
சிஷி: நன்று யாதொரு தத்வாதத்வ நிண்ணயமும் ஆய்ந்தறியச் சக்தியில்லா வொருவன் மூடபக்தி யாகக் கடவுளைத் தொழுவானேல், அவனுக்கேதேனும் பயனுண்டோ? இன்றோ?
குரு: அவனுக்கு ஈஸ்வரனானவர் மூட நீங்கும்படி அறிவைக் கொடுப்பதே பயன்.
சிஷி: வித்தையிற் சிறந்து சித்தந்தெளி தேசிகனாகிய என் சற்குருநாதா! இவ்வியாசத்திற் காட்டிய பிரம்ம நியமப் படத்தில் கிஞ்சில் சந்தேகங்களெற்குள. விவரம் - சத்ரூப சத்தி சித்ரூப சத்தி ஆநந்த ரூபசத்தி எனக் கண்ட முச்சத்திகளும் அச்சத்திகளோடு கூடிய பரன் பரிபூரணன் பரமாநந்தன் என்பவர்களும் ஈஸ்வர னுக்கு அன்னியம் போற் காணுமாறையும், சத்தி யென்பதும் மாயை யென்பதும் எந்நிலைமையுடைத் தென்பதையும், மூலப் பிரகிருதியின் ரஜோகுண அவித்தையி லுதித்த சிதாபாசர் ஈஸ்வரனுக்குப் பிரத்தியேகமா யுதித்ததுபோ லிருக்குமாறை யும், சூக்கும பஞ்ச பூதங்களின் ரஜோம்சத்தில் ஒவ்வோர் மாத்திரை யொன்றாகச் சேர்ந்து சமானனாதி வாயுக்கள் 5 - மட்டு முண்டானதாகச் சொல்கிறபடிக் கில்லாமல் 10 -வாயுக்களுளதென நூல்க ணொடிக்கு மாறையும், அப்புவின் கூறாய் உதிரமும் மஜ்ஜையும், பிருதிவியின் கூறாய் நரம்பு சர்மம் மாம்சம் என்பும் உற்பனமெனக் கூறியதினின்றும் சின்னூற்க ளதிகமுரைக்கு மாறையும் விளக்கி யருள வேண்டும்!
குரு: இந்த வியாசத்தின் 24 - வது வினாவுத்தரத்தைக் கவனியாமல் இங்கு சில கடாக்களைக் கடாவினாய். ஆனாலும் வியத்தமாயருள்வேம். சத்தில்லாமற் சத்தி யொன்று மில்லை. அந்தச் சத்துக் காலத்திரயத்தும் நாசமில்லாததாய் நிகழும். அதுவே வஸ்து. அந்த வஸ்தாகிய சத்தின் ஞானமே சித்து. அதின் சுகமே ஆநந்தம். இம் மூன்றஐயுமே 'சச்சிதாநந்த' மெனச் சாற்றுவது. இச்சச்சிதாநந்த லக்ஷண மானது ஒன்றை விட்டு ஒன்று விளங்கா. அதனால் மூன்றும் ஒன்றேயாகும். இஃது சர்வாத்மாக்களின் தன்மையினும் பொருந்தியதே. எவ்வாறேல், பாவத்தை யாற்று வதும் புண்ணியத்தை யாற்றுவதும் தனக் காநந்த முண்டாக வென்றே.இன்னணம் பொருந்தி நிற்பதில் ஒவ்வொன்று விசேஷித்த பண்பு பற்றி சத்ரூபசத்தி சித்ரூப சத்தி ஆநந்தரூப சத்தி யென்றும் பகுதிகூற லாயிற்று. அன்னணமே பரன் முதலிய மூவர்களும் அச்சத்திகட்க்கு நாயகனாய்க் காணப்பட்டார்கள். அவர்கள் சச்சிதா நந்தப் பிரம்மமே அறிவாகாரமாய் விளங்கிய ஈஸ்வரனேயன்றி வேறின்று. அருளாகிய விகிர்தமற்ற சுத்த சத்தியினின்றும் வேறு கலையாய் வந்த ஜகத் உபாதான குண ரூப பிரகிருதியே மாயை. அதுவே சத்துவத்தில் சுத்த மாயை, ரஜசில் அசுத்த மாயை, தமசில் ஆணவமாகிய அஞ்ஞான மென்றாம். சுத்த மாயை யைக் காரணவுடம் பாகவுள்ள ஈஸ்வரனைப் பதி யெனவும், அசுத்த மாயையைக் காரண வுடம்பாகவுள்ள சிதாபாசரைப் பசுவெனவும், அஞ்ஞான மாயையைப் பாச மெனவும், இம் மூன்றும் அனாதிநித்ய மெனவும் சிவாகமங்கள் செப்பும். ஈஸ்வர பிம்பமாகிய சிதாபாசர்களைப் பிரம்ம அம்சங்களாகவே யெண்ண வேண்டும். அதினால் அழிவற்று அனாதித் தன்மைகுரித் தாயிற்று. அவைகள் மூலப் பிரகிருதியினிடமாய் அணுக்களா யடங்கி யிருக்கும். பிரகிருதியின் ரஜோ குணஞ் சொரூபங் படுங்கால் பகிர்முகப்படும். அணுக்களா யடங்கி யிருப்ப தெவ்விதமேல், வித்தின் அங்குரத்துள் அனேக வித்துக்கள் அடங்கியிருப்பது போன்றாம். அங்குர மென்பது முளை. இவ்வணமான ஜீவாத்மாக்கட்குச் சரீரங் களைக் கற்பித்ததும் ஈஸ்வர சங்கற்பமே. சமானனாதி வாயுக்களைந்தில் பிராண வாயுவொன்றே நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்ற வாயுக்க ளாகவும் பிரித்து காட்டுவதாற் பத்து வாயுக்களெனவும், பிருதிவியின் கூறாகிய ரோமத்தைச் சருமத்தினின்றும் பிரத்தியேகமெனவும், அப்புவின் கூறாகிய வேர்வை சுக்கிலம் நீர் இவைகளை உதிரம் மஜ்ஜை இவைகளினின்றும் புறம்பெ னவும் சின்னூற்கள் செப்புகின்றன. அவைகளுமொவ்வும்.
சிஷி: ஈஸ்வரனானவர் சித்சொரூபியா யியங்குவதில் அவருக்கு எக்காலெனும் ஊணுறக்கமுண்டா?
குரு: காரிய சரீர பாவனைப் படத்தில் விவரிக்கப்பட்டபடி உதிரம் மஜ்ஜை மாம்சம் சருமம் நரம்பு என்பு என்ற ஆறு தத்துவமாம் ஸ்தூல சரீரம் அன்னமய கோசத்திற் குட்பட்டது. இதோ வரைந்திருக்கின்ற படத்திற் கண்டபடி 20 - தத்து வமுள்ள சூக்கும சரீரமானது : பிராண வாயுவுங் கருமேந்திரியமுங் கூடிய பிராண மய கோசம், மனதுங் கருமேந்தி ரியமுங் கூடிய மனோமய கோசம், புத்தியும் ஞானேந்திரியமுங் கூடிய விஞ்ஞானமய கோசம், காரண சரீரமாகிய ஆனந்தமய கோசம் எனு நான்கு கோசங்கட்கும் உட்பட்டதாகும். இன்னணம் 5 - கோசங்கட்கு முள்ளான மூன்று சரீரங்களும் சிதாபாசர்கட்கே யுரியதாகும். ஈதெல்லா மல்லாத ஆன்ம மயமாகிய சித்சொரூபம்; உருவமும் அருவமு மில்லாமல் ரூபா ரூபமாய் விளங்கும். இதுதான் அந்தரங்காதிரேகம். உதாகரண மென்னையேல், ஜீவான்மா க்கள் ஸ்தூலத்தை மறந்து சூட்சம சொற்பனங் காணுங்கால் தன்னோடு ஸ்தூல பிரபஞ்சமும் அனுபவமும் மெய்யாய்ப் பார்ப்பது போலன்றோ சித்சொரூப வுண்மை. அன்றி கடவுளடியார்களாகிய ஜீவன் முக்தர்களே ஊணுறக்க மின்றுய் வாராயின் கடவுள் அதற் கெவ்வாறுள்ளாவார்? சொல்!
சிஷி: இன்னண சொரூபக் கடவுளை என் போலிய ஸ்தூல சரீர தரிசிப்ப தென்னில் எப்படிக்கியலும்?
குரு: தசேந்திரிய சமுதாயமின்றி அந்தர்க் கரண சுத்த நிர்ச்சலன யோகத்தி னிலைத்துத் தரிசிக் கலாமே யன்றி, ஜாக்ரத்தில் அச்சித் சொரூப தேவைத் தரிசிக்கக் கூடா. ஆனால், ஒருவன் ஈஸ்வர பக்தியிற் சிறந்து சத்தினி பாதம் அதாவது மந்தம் மந்ததரம், தீவரம், தீவரதரம் என்னு நான்கு பருவங்களில் எதிலேனும் பொருந்துவனேல், அம்முறை கண்டு சரியை யனுஷ்டிப்பாகிய சமய தீக்ஷையை யேனும் கிரியா யோக அனுஷ்டிப்பாகிய விசேஷ தீக்ஷையை யேனும் ஞானமாகிய நிருவாண தீக்ஷையை யேனும் அனுக்கிரகிப்பதற்காக குருமூர்த்த மாய் மானைக் காட்டி, மானைப் பிடிப்பதுபோல கர்த்தா வானவர் லலாடஸ்தான நேத்திர மொழித்து மானிடச் சட்டை சாத்தி ஊரும் பேரு முருவு மொழிக்க ஊரும் பேரும் உருவுங் கொண்டு எழுந்தருளுவாரேல் ஸ்தூல திருஷ்டியாற் றரிசிப்பதுள.
சிஷி: கடவுளுக்குத் தேவனென்றும் தெய்வமென்றும் ஆக்குவயம் வந்ததென்ன?
குரு: அவ்வாக்கு வயத்தின் பகுதி: திவ் அல்லது தியா. அர்த்தம்; - பிரகாச மென்பதே . திவ் என்ப திலிருந்து தேவ் தேவனென்றும் தியா என்பதிலிருந்து தெய்வமென்றுஞ் சொல்ல வந்தன. இதனால் சொற்ற சமஸ்கிருத அர்த்தப்படி கடவுள் ஜோதியானவர், பிரகாசமானவர் எனச் சொல்வதன்றி, கற்பிதமான பெயராய்க் கணிக் கொணா.
சிஷி: மெய்யே. சர்வமகத்துவந் தங்கிய சர்வேஸ்வரனுக்கு அடியிற் கிளத்து மபி தானங்கள் நூலா தாரங்களில் வழங்கப்படு கின்றதற்குறு மருத்தங்களையு மடி யேற்கருள வேண்டும்! அவைகளாவன: நிர்மலன், நிரஞ்சனன், நிர்விகாரன், நிர்விசாரன்,நிர்ச்சங்கன்,நிராமயன்,நிர்விகற்பன்,நிஷ் பிரபஞ்சன், நிர்ச்சிந்தனன், நிரவயவன், நிராகாரன், நிராசூசன், நிராலம்பன், நிர்விஷயன், நிரபேஷன், நிராசனன், நிர்ச்சலனன், நிமலன், நிர்க்குணன், நிருத்தன், நிதானன், நிஷ்களன், நிர்நாமன், நிரபிதானன், நிர்ஜனனன், நிருபாதானன், நிரந்தரன், நிரஸ்தியயன், நிரம்பரன், நித்தன், நிகரிலான், நிஷ்கன்மன், நிராவரணன், நிர்விசனன், நிரதி சயாநந்தன், நிஷ்களங்கன், நிராங்கரன், நிலைவரன், நிர்வசனன், நிராகுலன், நிர்நாசன், நிர்வாணன், நிர்விக்கினன், நிராகன், நிரபராதி, நிரபாயன், அப்பிர மேயன், அனாதரன், அபரிச்சின்னன், அகளங்கன், அனங்கன், அனந்தன், அசங்கன், அவிகிர்தன், அம்பரன், அவிசனன், அமலன், அனன்னியன், அதிகு ணன், அதீதன், அபேதன், அகண்டன், அகண்டாகாரன், அபரோஷன், அவி க்ஷேபன், அக்ஞானரகிதன், அபகிதன், அபிதானரகிதன், அசத்தியரகிதன், அனுகுணரகிதன், அனுசிதரகிதன், அசுத்தரகிதன், ஆநந்தன், ஆண்டவன், சர்வக்ஞன், சர்வ கற்பிதன், சர்வசக்தன், சர்வகத் திருத்துவன், சர்வாதாரன், சர்வசமன், சர்வாத்மகன், சர்வபூரணன், சர்வகாரணன், சர்வநியந்துரு, சர்வதா சாக்ஷி, சர்வேந்திரியாமி, சர்வாந்திரியாமி, சர்வோபாதி சூன்யன், சச்சிதாநந்தன், சம்யுக்தன், சதாநந்தன், சமயாதீதன், சாந்தன், சாஸ்வதன், ஷாட்குண்யன், சாதா ரணன், சாயுஜ்யன், சைதன்யன், தானவன், தற்பரன், தத்துவன், பரமன், பரமாத்து மன், பராபரன், பகவான், பராதீனன், பவாதீதன், பக்தவத்சலன், விரக்திப் பிரகாசியன், விரக்தி ஞானப் பிரகாசியன், ஆத்ம பிரகாசியன், ஆத்ம ஞானப் பிரகாசியன், ஆத்ம சொரூப ஞானப் பிரகாசியன் என்பவைகளே.
குரு: இந்த நாமங்கட் கருத்தம் முறையே, மாசில்லாதவன், இருளில்லாதவன், விகார மில்லாதவன், கவலை யில்லாதவன், தனிமையானவன், நோயில்லா தவன், ஒருமை யுணர்ச்சியன், உலகங்கட்கன்னியத்தான சாந்த முள்ளவன், நினைப்பற்றவன், உடலற்றவன், எங்குமுள்ளவன், சூதகமற்றவன், யாதொரு சார்புமற்றவன், தொழிலற்றவன், ஆசையற்றவன், இருப்பிடமற்றவன், அசை வற்றவன், சுத்தமானவன், குணமில்லாதவன், கட்டுப்பாடில்லாதவன், நிச்சய மான ஆதிகாரணன், கலப்பில்லாதவன், நாமமில்லாதவன், பெயரில்லாதவன், பிறப்பில்லாதவன், துணைக் காரண மில்லாதவன், எப்பொழுது முள்ளவன், குற்ற மில்லாதவன், ஆகாயத்தைப் போல நிருவாணமானவன், அழிவில்லாத வன், ஒப்பற்றவன், கிருத்திய மில்லாதவன், பகிரங்கமானவன், கவலையற்ற வன், அற்புதங்குறித் தளவிடப்படாத ஆநந்த முள்ளவன், மாசற்றவன், இறுமாப் பற்றவன், உறுதியானவன், மௌனமானவன், சந்தோஷமுள்ளவன், என்றுமுள் ளவன், மோக்ஷமுள்ளவன், இடையூறில்லாதவன், உருவிலாதவன், பிழையிலா தவன், நாசமிலாதவன், அளவிடப்படாதவன், ஆதரவிலாதவன், குறிப்புக்கான அடையாள மொன்று மிலாதவன், அழுக்கிலாதவன், அரூபி, முடிவிலி, கூட்டமிலி, வேறுபாடிலி, பரவெளியுடையவன், மகிழ்ச்சியுடையவன், பரிசுத்த முடையவன், எல்லாமுடையவன், நற்குண முடையவன், மேலானவன், பேத மிலாதவன், எல்லை யிலாதவன், எல்லை யில்லா வடிவானவன், தான் தானே திரிசியமானவன், அஞ்ஞான காரியமா யிரா நின்ற சஞ்சலத்துவ மில்லாதவன், ஞான முடையவன், கீழ்மை யில்லாதவன், ஆக்குவய மில்லாதவன், பொய்யில் லாதவன், குணத்தொடர் பில்லாதவன், அசுத்த மில்லாதவன், தூய்மையுள்ள வன், பேரின்ப முள்ளவன், யாவு மாள்கையா யுள்ளவன், எல்லா மறிகிறவன், எல்லா நிருமிப்பவன், எல்லா வல்லமையு முள்ளவன், எல்லா அதிகாரமு முடை யவன், எல்லாவற்றிற்கு மாதாரமானவன், எல்லாத்திலுஞ் சமமானவன், எல்லா ஆத்மாக்களுமானவன், எல்லா நிறைவுமானவன், எல்லாத்துள்ளும் பிரதானமா னவன், எல்லாந் தன்னேவலிலுள்ளவன், எல்லாவற்றிற்குந் திருஷ்டாந்தமான வன், எல்லாவிந்திரியங்களிலும் பிரவேசித்திருப்பவன், எல்லா விருதயங்களிலு மந்தரங்கமா யிருப்பவன், எல்லா வுபாதியுமற்றவன், சத்து சித்தாநந்தமா வுள்ள வன், யாதொருவர் போதகமின்றித் தானே பொதுவாய் நடத்தும் யோசனையை யுடையவன், என்று மின்பமுடையவன், உட்சமயம் புறச் சமயங்கட்கு மெட்டாதி ருப்பவன், பொறுமையை யுடையவன், நித்யமானவன், சர்வஞ் ஞத்துவ - சர்வேச்சுரத்துவ - சர்வ நியந்திருத்வ - சர்வாந்த்திரியாமித்வ - சர்வ கற்பிதத்துவ - சர்வ சத்தித்துவ மென்னும் ஆறு குணங்களையு முடையவன், அனைத்துக்கும் பொதுவானவன், ஆத்மாக்களுக்குக் குணஐக்ய முத்தியை அளிப்பவன், பூத பௌதிகங்களல்லாத சுத்த ஆத்மாவானவன், தானே தானானவன், தானே ஆதி யானவன், உண்மையானவன், முன்னும் பின்னு மானவன், அவாவற்றவன், ஞான மானவன், பிரதானமானவன், பரமாத்ம சொரூப மானவன், ஜீவர்கட்குக் கொடுக்கும் இறப்புதிப்பிலா மோக்ஷத்தை யாதீனமாக வுடையவன், பாவங் கட்குப் புறம்பானவன், தாசர்கள் பேரிற் றயவுடையவன், ஆத்மாக்க ணிமித்தம் துறவுமார்க்கத்தில் விளங்குபவன், துறவுமார்க்க ஞானத்தில் விளங்குபவன், ஆத்மாக்களில் ஒளி செய்பவன், ஆத்மாக்களில் ஞான ரூபமாய்ச் சின்மாத்திரமா யொளி செய்பவன், ஞானத்தைச் சொரூபமாயுள்ள ஆத்மாவிலொளி செய்ப வன் என்பனவாம். இன்னமும் எம்பிரானாகிய ஈஸ்வரனுக்கு காரணப் பெயர் களுண்டு. அவைகட்கு மிவைகட்கு மனந்த விதமாய்த் தனித்தனி யருத்தம் பயக்கவும் இடமுண்டெனவும் அவைகளை யெல்லாம் சொல்லத் துணிவ தென்றால் மகாவாக்கிய வியாக்யானமாய் முடியு மெனவும் இங்ஙனங் குறிப்பா யெடுத்துனக்கியம்பலுற்றேம். மேற்கண்ட நாமார்த்தங்க ளெல்லாம் ஈஸ்வர னுக்குச் சகளமும் நிஷ்கள சகளமும் நிஷ்களமுமாம்.
சிஷி: ஓ! சுவாமி! கடவுட் டன்மையை யுணர்த்தக்கூடிய பல் பெயர்களை யான் தெரிவித்து அருத்தந் தெரிந்து கொண்டதில், கலியாண சந்தடியிற் றாலிகட்ட மறந்துவிட்ட தென்ன, கடவுளுக்கு ஈஸ்வரன் என்ற பெயரெதனால் வந்ததென் பதை வினவாது விட்டுவிட்டேன். அதையு மறிவிக்க வேண்டும்!
குரு: இறையவனா யிருந்து சிதாபாச ஜீவகுழாங்கட் குரிய சகல வனுபவமுங் கொடுக்குந் தன்மையால் ஈஸ்வர னென்றும், அவ்வனுபவ நிமித்தந் தானுண்டா க்கும் பிரபஞ்சத்தை ஒருத்தராலுந் திருப்பப்படாது கொண்டு சர்வேஸ்வர னென்றும் கடவுளுக்குத் தகைமையான இரண்டாக்குவயம் வந்தனவாம்.
சிஷி: ஈஸ்வரனுடைய சகளமும் நிஷ்களமுமுண்டென்பதை யுணர்த்துந் திருஷ்டாந்தங்களெவை?
குரு: இச்சையற்ற பகவானுக்கு இவ்வுலகங்களைச் சிருஷ்டிக்க இச்சை வந்ததும், கற்பித்த வுலகங்களை ஐங்கிருத்தியங்களால் பிரேரிக்க அபேட்சை வந்ததும், தன்னை நாடி வழிபடுவார் ஸ்தோத்திரங்கட் கிரங்கி யுளமகிழ்ந்து கருணை செய்ய நயப்பு வந்ததுமே சகளத்தை யுணர்த்தப் போந்த திருஷ்டாந்த மாம். இந்தச் சகளம் அநித்ய மென்பது சத்யமாதலால், இச்சையற்ற நித்யமாகிய ஈஸ்வரனுக்கு நிஷ்களமொன்றன் யத்தா யுண்டென வுணர்த்த இதுவும் போந்த திருஷ்டாந்தமாம்.
சிஷி: சர்வேசுவரனுடைய விர்த்தாந்தங்க ளெல்லாம் அநேகமா யறிந்தேன். நால் வகை யோனி எழுவகைத் தோற்றம் எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவ பேதங்க ளென்று இவ்வியாசத்தின் 12 -வது உத்தரத்தின் கடாசியில் தாங்க ணவின்றதற் கும் வகை விபரம் வழங்க வேண்டும்!
குரு: பை, முட்டை, நிலம், வியர்வை என்பது நால்வகை யோனி. * தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, ஸ்தாவர மென்பது எழு வகைத் தோற்றம், அவற்றுள் தேவர் பதினான்கு நூறாயிரம், மக்களொன்பது நூறாயிரம், விலங்கு பத்து நூறாயிரம், புள் பத்து நூறாயிரம், ஊர்வன பதினொரு நூறாயிரம், நீர்வாழ்வன பத்து நூறாயிரம், ஸ்தாபரம் இருபது நூறாயிரம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவபேதங்களாம். இந்தப் பேதங்க ளொவ்வொன்றிலும் அளவிறந்த ஜீவன்கடோன்றிக் கொண்டிருக்கின்றன.
( * தேவர், மக்கள், பைசாசு, நாகர், விலங்கு, புள், ஜெந்து என்பவைகள் எழு வகைத் தோற்ற மென்றுஞ் சின்னூற் செப்பும். )
சிஷி: இஃது சரியே. விஷ்ணு வைனதேயனுக்குச் சொன்னதா யிருக்கின்ற புராணத்தின் 2 -வது அத்தியாயத்தில் அண்டஜமாகிய பறவை முதலியன 21 - லக்ஷம், உத்பிஜமாகிய தாவர முதலியன 21 - லக்ஷம், ஜராயுஜமாகிய மக்கள் முதலியன 21 - லக்ஷம், சுவேதஜமாகிய கொசுகு முதலியன 21 - லக்ஷம் ஆக யோனி நாலுக்கும் என்பத்து நான்கு நூறாயிரமென்று ஒரே தொகுதியாய்ச் சொல்லி யிருப்ப தென்னை?
குரு: அஃதாவது : அண்டஜமாகிய முட்டையிலிருந்து பறவைகள் 10 - லக்ஷம், ஊர்வன 6 - லக்ஷம், நீர்வாழ்வன 5 - லக்ஷம் ஆக அண்டஜம் 21 - லக்ஷமென்றும்; உத் பிஜமாகிய நிலத்திலிருந்து தாவரம் 20 - லக்ஷம், நீர் வாழ்வன 1 - லக்ஷம் ஆக உத் பிஜம் 21 - லக்ஷ மென்றும்; ஜராயுஜமாகிய பையிலிருந்து தேவர் 1 -லக்ஷம், மக்கள் 9 -லக்ஷம், விலங்கு 10 - லக்ஷம், நீர் வாழ்வன 1 - லக்ஷம் ஆக ஜராயுஜம் 21 - லக்ஷமென்றும்; சுவேதஜமாகிய வியர்வையிலிருந்து தேவர் 13 - லக்ஷம், நீர் வாழ்வன 3 - லக்ஷம், ஊர்வன 5 - லக்ஷம் ஆக சுவேதஜம் 21 லக்ஷமென்றும் சொன்னதா யறியலாம். ஈதும் யாஞ் சொற்ற கணக்கின்படியேயாம்.
சிஷி: அந்த எழுவகைத் தோற்றங்களில் அசுரர் முதலியோர் தொகை ஏன் வரவில்லை?
குரு: அது தேவர்கட் கேற்பட்ட தொகையிற் சேர்ந்திருக்கிறது.
சிஷி: சொல்லிய தோற்றம் ஏழில் மக்கள் முதல் ஆறும் யான் பார்த்திருக்கிறேன். தேவர் என்பதையான் பார்த்ததில்லை. ஆதலால் அவர் யாவர்?
குரு: அவர்கடான் தேவர்கள் பதியில் வாழுந்தேவர்கள்.
சிஷி: ஈ தென்னை? ஆச்சரியத்திலாச்சரியமாயிருக்கின்றது ஓ! எமதையனே! அந்த விர்த்தாந்தங்களை யெல்லாந் தங்களிடத்தில் வினாவ இன்று நேரம் போதாமையா யிருக்கின்றது. நாளை யுதயத்தில் படிக்கத் தயவு செய்வீர்களாக. ஈஸ்வரன் இல்லை யென்றிருந்த வெற்கு ஈஸ்வரனுண்டென் றொப்புவித்த இப்பெரிய திருவடிகட்கு உரிய தண்டன் சமர்ப்பித்தனன்றோ.
குரு: நன்று நன்று சற்குருநாதன் கடாக்ஷிக்க!
கடவுளைக் குறித்த வியாசம் முற்றிற்று.